காலம்: துவாபர யுகம்
இடம்: நைமிசாரண்யம்
நடந்தவை ஒன்று:
மேரு பர்வதத்தில் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்ட 26000 ரிஷிகள் மற்றும் சந்நியாசிகள் அனைவரும் திறண்டிருந்தனர் ஒருவரை தவிர. அங்கே வராததால் நேரப்போகும் பிரம்மஹத்தி தோஷத்தை பற்றி அவர் கவலை கொண்டதாக தெரியவில்லை.அன்றைய திதி தன் தந்தையின் ஸ்ரார்த காரியம் அமைந்தபடியால், கர்மமே கண்ணாக பாவித்து காரியங்களை செய்து கொண்டிருந்தார். சங்கமத்தில் பங்கு கொள்ளாதவர்க்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும் என்ற விதி அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏழு முறை வேதத்தை அத்யயனம் செய்தால் பிரம்மஹத்தி தோஷத்தை தவிர்கலாம் என அறியாதவரா வியாசரின் பிரதம சீடரான வைசம்பாயனர். வியாசர் வேதத்தை நான்காக வகுத்து தந்திருந்தார், அதில் யஜூர் வேதத்தை பரப்பியவர் வைசம்பாயனர்.
வைசம்பாயனரே 86 சாக்கைகள் கொண்ட (கிருஷ்ண) யஜூர் வேதத்தை தன் சீடர்களுடன் அகிலத்தில் பரப்பி வந்தார்.
வைசம்பாயனர் சீடர்களுடன் வேத அத்யயனத்தை துவங்கி இருந்தார். இன்றைய கால கட்டத்திலேயே ஒருமுறை வேத அத்யயனம் செய்வதற்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதன்படி பார்த்தால் வைசம்பாயனர் பிரம்ம பிரயத்னத்தை மேற்கொண்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.வைசம்பாயனரின் சீடர்களில் ஒருவரான யாக்ஞவல்க்யர் குறுக்கிட்டு, வேத அத்யயனத்தை திறம்பட முடிக்கும் ஆற்றல் அங்குள்ளோரில் தன்னிடமே உண்டு ஆகையால் மற்றவர் தேவை இல்லை என குருவிடம் முறையிட்டார். அவர் கூற்றில் தவரொன்றும் இல்லை என வைசம்பாயனர் அறிந்தே இருந்தார்.
ஆகினும் சீடர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து மற்றும் வேதத்தை குழுவாக அத்யயனம் செய்தலே மகத்துவம் வாய்ந்தது என யாக்ஞவல்க்யரிடம் எடுத்து உரைத்தார். இதற்கு யாக்ஞவல்க்யர் மறுக்கையில், வைசம்பாயனர் சினம் கொண்டு தன்னிடம் கற்ற வித்யை அனைத்தையும் உமிழ்ந்து விடு என ஆணையிட்டார்.
யாக்ஞவல்க்யர் வேதத்தை அக்னி ஜுவாலையாக உமிழ்ந்ததும், வைசம்பாயனர் மற்ற சீடர்களை தித்திரி பறவைகளாக (நெருப்பை குடிக்கும்) மாற்றி உமிழ்ந்த வேதத்தை குடிக்க செய்தார்.
நடந்தவை இரண்டு:
நைமிசாரண்யத்தை ஆண்ட மன்னன் சுப்ரியனுக்கு உடல் நோவு சாத்தியிருந்தது, அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் தான் வைசம்பாயனர் சீடர்களுடன் தங்கியிருந்தார்.
தன் உடல் நோவ்வை வைசம்பாயனரால் மட்டுமே குணப்படுத்த முடியும் என திடம் கொண்டு சுப்ரியன் வேண்டுதல் விடுத்தான். வைசம்பாயனரும் சீடர்களை ஹோம சாந்திகளை செய்து கொடுக்க சொன்னார்.
மன்னனின் நோவு, செய்த பாவத்திற்கான பலன் என யாக்ஞவல்க்யர் மறுத்துவிட்டார். மற்ற சீடர்கள் சென்று முயற்சி செய்தும் மன்னனின் உடல் தேறவில்லை. இதனை கேள்வியுற்ற வைசம்பாயனர், யாக்ஞவல்க்யரை நிர்பந்தப்படுத்தி அனுப்பி வைத்தார்.குருவின் ஆணையை ஏற்று ஹோமங்களை விருப்பமில்லாமல் செய்வதை கவனித்த மன்னன் யாக்ஞவல்க்யரை அவமதித்துவிட்டான். இதனால் சினமுற்று யாக்ஞவல்க்யர் வெளியேற, நடந்ததை தெரிந்துகொண்டு வைசம்பாயனர் சமாதான முயற்சியில் இறங்கினார்.
ஒரு கட்டத்தில் யாக்ஞவல்க்யரின் வாதம் முற்றிவிட, வைசம்பாயனர் சினம் கொண்டு தன்னிடம் கற்ற வித்யை அனைத்தையும் உமிழ்ந்து விடு என ஆணையிட்டார்.
யாக்ஞவல்க்யர் வேதத்தை அக்னி ஜுவாலையாக உமிழ்ந்ததும், வைசம்பாயனர் மற்ற சீடர்களை தித்திரி பறவைகளாக (நெருப்பை குடிக்கும்) மாற்றி உமிழ்ந்த வேதத்தை குடிக்க செய்தார்.
அடுத்து நடந்தவை:
வேதத்தை இழந்த யாக்ஞவல்க்யர், சூரிய பகவானை நோக்கி தவம் புரிந்து உலகோர் அறிந்திராத வேத பகுதியை யாசித்து பெற்றார், அதுவே 15 சாக்கைகள் கொண்ட (சுக்ல) யஜூர் வேதம்.
யாக்ஞவல்க்யருக்கு சென்னையில் உள்ள ஜமீன் பல்லாவரத்தில் கோவில் அமைந்துள்ளது .
யாக்ஞவல்க்யரை பற்றி சிறிது தெரிந்தாகிவிட்டது, இப்பொழுது இரண்டு கேள்விகள்.
- யாக்ஞவல்க்யர் இரண்டு யுகங்களிலும் வாழ்ந்து இருக்க முடியுமா? சாத்தியமா இல்லை இதனை எப்படி அர்த்தம் கொள்வது?
- வைசம்பாயனர் இரண்டு முறை யாக்ஞவல்க்யரை வேதத்தை உமிழ சொல்லியிருப்பாரா? இதை எப்படி புரிந்து கொள்வது?
கீழ் உள்ள COMMENTS SECTION-ல் தங்கள் பதிலை தெரிவிக்கவும்.