05. திருமழிசையாழ்வார்

துவாபர யுகம் முடிய இன்னும் ஆயிரத்தி நூறு ஆண்டுகள் இருந்தன.

பூவுலகில் எங்கும் சமய பூசல்கள், அதர்மம் பல்கியிருந்தது. இதனை திருபாற்கடலில் பள்ளி கொண்டவரிடம் விண்ணப்பித்தனர் அநேக தேவர்கள்.

வாசுதேவர் தன் கரத்தில் உள்ள ஸுதர்சனரை பூவுலகில் உடன் அவதரிக்க செய்து, சமய பூசல்களை அறுத்து, எது அநேகரும் பின்பற்ற வேண்டிய சமயம் என நிலைநாட்ட பணித்தார். இவரே திருமழிசையாழ்வார்.

பின் விஸ்வக்சேனரை நோக்கி ஸுதர்சனர் காரியம் செவ்வென முடிந்ததும், நீர் சென்று பூவுலகில் பரம் யார் என்று அறுதியிட்டு வரவேண்டும் என பரந்தாமன் ஆணையிட்டார். இவரே நம்மாழ்வார்.

அதர்மத்தை வேரறுக்க யாரை அனுப்ப போகிறீர்கள் தேவரீர் என்பது போல் இந்திரன் பார்க்க, ஸம்பவாமி யுகே என முறுவலித்தார் வ்யூஹ வாசுதேவன்.

திருமழிசையில் கனகாங்கி எனும் தேவலோக மாதருக்கும், பார்கவ முனிவருக்கும் தவத்தின் பலனாக அவதரித்த திருமழிசையாழ்வார் பூவுலகில் 4700 ஆண்டுகள் ஜீவித்திருந்தார்.

ஆழ்வார் ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்கிறார்.

ஆம்! பார்கவர் தவம் புரிய சென்றிட, கனகாங்கியும் குழந்தை பிறந்ததும் மீண்டும் இந்திரலோகத்துக்கு திரும்புகிறாள்.

திருவாளன் & அவனது மணாட்டி பங்கய செல்வி ஆகிய
பிரம்பு தொழில் செய்பவர்களிடம் குழந்தை ஏழு ஆண்டுகள் வளர்கிறது.

பூதேவி & ஸ்ரீதேவி ஞானப்பால் நல்கியதால் உணவில் ஆசையற்று, அழுகை, பசி தாகமின்றி, பகவத் குணாநுபவத்தையே தாரகமாக கொண்டு குழந்தை உய்கிறது.

இவ்விரு சம்பவங்களும் வருங்காலத்தில் நம்மாழ்வார் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்க போவதை அடிக்கோலிடுகிறது.

திருமழிசையாழ்வார் வாழ்வு ஆண்டுகள்
பிற சமயங்களின் உட்பொருளை கண்டறிதல்1000
பரம்பொருளை அறிந்து திருவல்லிக்கேணியில் யோகம்700
காஞ்சி திருவெஃகா பொய்கையில் தவம்700
திருகுடந்தையில் நித்தியவாசம்2300
திருநாடு அலங்கரித்தல்4700

திருமழிசையாழ்வார் அநேக சமயங்கள் மற்றும் தத்துவ ஆராய்ச்சி மேற்கொண்ட காரணத்தினால் பல்வேறு திருநாமங்கள் & விருது திருநாமங்களையும் கொண்டவர்.

திருமழிசைப்பிரான், திருமழிசையார், சிவ வாக்கியர், சக்கரத்தாழ்வார், பக்திசாரர், உரையிலிடாதார், குடமூக்கிற் பகவர், கும்பகோணத்து பாகவதர், கணித மேதை, பன்மொழி தத்துவ வித்தகர், மகாயோகி, சித்தர், தத்துவமேதை, மகாநுபாவர், மெய்ஞ்ஞான செல்வர், அருட்குண பெரியார், பார்கவ முனிவரின் அருந்தவ செல்வர்.

ஆழ்வார் சைவராக இருந்தபொழுது சிவ வாக்கியம் எனும் நூலையும் அருளியுள்ளார்.

சமணம், பௌத்தம், மாயாவதம் மற்றும் சைவம் பின்பற்றி இறுதியில் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரால் திருத்திப்பணிக்கொண்ட பிறகு தீவிர ஸ்ரீ வைணவராய் இறுதி வரை திகழ்ந்தார்.

ஆழ்வார்கள் வரலாற்றில் முதல் குரு-சிஷ்ய பிரபாவம் உண்டாக்கிய பெருமை இவர்களையே சேரும்.

பன்னிரு ஆழ்வார்களில் யாருக்குமில்லா தனிச்சிறப்பு, தாமே பல மதங்களை ஆராய்ந்து “வைணவ மதமே சிறந்தது, பரம்பொருள் நாராயணனே” என்று முடிவினை நிறுவியவர்.

திருமழிசையாழ்வாரின் அருளிச்செயல்கள்: நான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்) & திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்).

ஆழ்வாரின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை பதிவிட்டுள்ளேன் கீழே:

1. ஆழ்வார் உணவு எடுத்துக்கொள்ளாவிட்டாலும், தினமும் தனக்கு பால் அமுது செய்த மகப்பேரு கிட்டா கிழ தம்பதியினருக்கு இளமை நல்கி குழந்தை பாக்கியம் அருளி, பிறந்த குழந்தைக்கு கணிகண்ணன் என்று நாமமிட்டு பிற்காலத்தில் சிஷ்யனாக ஆச்ரயித்தார்.

2. சிவனிடமே தர்க்கம் செய்து விஷ்ணு பக்தியின் சாரமாய் திகழ்ந்ததால் பக்திசாரன் என்று திருநாமம் பெற்றார். தர்க்கத்தில் திருமாலின் கடாக்ஷத்தால் சிவனின் நெற்றிக்கணையை தகர்த்தார் தன் விரல் நகக்கண்ணால்.

3. சுத்திகாரன் எனும் சித்தன் ஆணவம் கொண்டு தன் சித்தினால் புலியை அடக்கி வாகனமாய் அமர்த்தி திருவல்லிக்கேணியில் ஆகாய மார்க்கமாக பயணித்த பொழுது, ஆழ்வாரின் தவ வலிமையால் மேலே பயணிக்க இயலாமல் கீழே இழுக்கப்பட்டு ஆணவம் தொலைத்தான். இந்நிகழ்வுக்கான விவரங்கள் குருபரம்பரா ப்ரபாவத்தில் விரிவாக கிடைக்கின்றன.

4. கொங்கண சித்தர் என்கிற இரசவாதி தன் வித்தையை ஆழ்வாரிடம் காண்பிக்க வேண்டி, கோடி இரும்பை பொன்னாக்க வல்ல சக்தியுடைய குளிகை ஒன்றை காணிக்கையாக்க எத்தனிக்க, பதிலுக்கு ஆழவார் தன் திருமேனியிலிருந்து சிறு புழுதியும் & காதில் உள்ள குறும்பியும் சேர்த்து திரட்டி, இதனை கொண்டு கோடி கோடி இரும்பை பொன்னாக்கி கொள் என்று கொடுத்தருளினார். சித்தனும் அதன் ஆற்றலை பரிசோதித்து வியந்தார்.

5. திருமழிசையாழ்வார் ஒரு சமயம் மலைக்குகையில் தவம் புரிந்து கொண்டிருக்க, அப்பக்கமாக வந்த முதலாழ்வார்கள் திவ்ய ஒளியை கண்டு “இம்மகானுபாவர் நீரா?” என்று தம் அகக்கண்ணால் அறிந்து கொள்கின்றனர். அப்பொழுது சீடரும் குருவை விரைவில் தெரிந்து கொண்டு வணங்கி நிற்கிறார்.

இங்கு நான்கு ஆழ்வார்களும் கூடி குளிர்வது, திருமாலின் பஞ்சாயுதங்களில் நால்வர் சந்தித்து மகிழ்வதாக கொள்க.

6. ஆழ்வார் திருவெஃகாவில் கணிக்கண்ணனுடன் இருந்த பொழுது, தனக்கு சேவை புரிந்த கிழவிக்கு அவளின் வேண்டுதல்படி என்றும் குமரியாக இருக்க கடாக்ஷித்தார்.

ஒருநாள் இந்த குமரியை கண்ட பல்லவ அரசன் காதல் வயப்பட்டு மணம் புரிந்தான். வருடங்கள் ஓட, அரசன் மட்டும் முதுமையடைய அரசி இளமையுடன் இருப்பதற்கான காரணத்தை அறிந்து, ஆழ்வாரின் சீடன் கணிக்கண்ணன் உஞ்சவிருத்திக்கு வந்தபொழுது, தமக்கும் உமது குரு இவ்வரத்தை நல்க வேண்டும் என கட்டளையிட்டான்.

கணிக்கண்ணன் மறுத்திட, அரசன் இக்கணமே நீயும் உனது குருவும் காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான்.

ஆழ்வாரும் இனி நாமிங்கிருக்க போவதில்லை நாம் புறப்பட்ட பிறகு எம்பெருமானும் இங்கு கண் வளர்ந்தருள போவதில்லை, காஞ்சி சூன்யமாகட்டும் என பயணம் கொண்டார்.

ஆழ்வாரும், கணிக்கண்ணனும், பெருமாளும், இதர தேவதைகள் காஞ்சியை விட்டு அகன்று அருகிலுள்ள இடத்தில ஓர் இரவு தங்கியதால் அந்த ஸ்தலத்துக்கு “ஓரிரவிருக்கை” என பெயர் பெற்று, தற்பொழுது ஓரிக்கை என மருவியுள்ளது.

காஞ்சி இருளால் சூழ்ந்ததும் அரசன் தன் தவறுணர்ந்து ஓரிக்கை சென்று ஆழ்வார் மற்றும் கணிக்கண்ணன் பாதம் பணிந்திட, மீண்டும் அனைவரும் காஞ்சியில் எழுந்தருள பொலிவுற்றது.

ஆழ்வார் சொற்படி நடந்ததால் திருவெஃகா பெருமாளுக்கு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என பெயர் காரணம்.

வருங்காலத்திற்கு இந்நிகழ்வு பதிவாக வேண்டும் என்று நினைத்த பெருமாள் முன்போல் வலத்திருக்கை கீழாகவன்றி இடத்திருக்கை கீழ்ப்பட கண் வளர்ந்தருள்கிறார்.

7. ஆழ்வார் குடந்தைக்கு செல்கையில், புதுப்புனலுக்கு தனது நூல்கள் அனைத்தையும் அருளிட, அதில் நான்முகன் திருவந்தாதி & திருச்சந்த விருத்தமும் புனலை எதிர்த்து திரும்பிட, புனல்வாதத்தில் வென்ற இவ்விரு நூல்களையும் புவனத்திற்கு அருளினார்.

8. புனல்வாதத்தில் வென்ற ஏடுகளுடன் ஆராவமுதன் சன்னிதிக்கு சென்று பெருமானை சேவித்து, தன்னுடன் சயன கோலத்திலிருந்து எழுந்து பேச வேண்டும் என்று பக்தியுடன் துதிக்கிறார்.

ஆழ்வார் இவ்வாறு பிரார்தித்ததும் ஆராவமுதன் மனமிறங்கி எழ முயன்ற போது, அர்ச்சாவதார திருக்கோலத்தை குலைத்துவிட்டேனே என பதறி “வாழி கேசவனே” என்ற வாக்கியத்தால் உனது திருக்கோலம் இப்படியே நிலை பெற்று வாழவேண்டும் என்று மங்களாசாசனம் செய்கிறார்.

இங்கனம் ஆழ்வார் வாழ்த்தியதும் ஆராவமுதன் உத்தானசாயியாக நின்றுவிட்டாராம்.

9. ஆழ்வாருக்கு தமது திருஅமுதை சுவீகரிக்க செய்து எஞ்சியதை தான் சுவீகரித்து மகிழ்ந்தார் ஆராவமுதன்.

திருமழிசையாழ்வார் திருநாட்டை அலங்கரித்த தலம் ஆராவமுதன் சன்னிதிக்கு அருகில் சாத்தார வீதியில் அமைந்துள்ளது.

திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்

1 thought on “05. திருமழிசையாழ்வார்”

Leave a comment