10. யது குலத்தின் அழிவு

துவாரகையில் கிருஷ்ண பரமாத்மாவை நேரில் தரிசித்த வருணன், அவரது வருகையை உறுதி செய்ததும் விண்ணுலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நான்முகன், ருத்திரன் மற்றும் அநேக தேவர்கள் பரமாத்மாவை எதிர்நோக்கி புடைசூழ இருந்தனர்.

பலராமர் பரமாத்மாவை வரவேற்க ஆதிசேஷனாய் தன் சோதிக்கு எழுந்தருளியதை கண்ட பகவான், தன்னை மற்றும் தான் அவதரித்த யது குலத்தை சபித்த ரிஷிகள் விஷ்வாமித்ரர் மற்றும் துர்வாசரின் வாக்கின் படியே தனது மானுட உடலை நீக்க விரும்பினார்.

துர்வாசர் சாபம்:

தனது திருமாளிகைக்கு எழுந்தருளியிருந்த துர்வாசரின் திருவடிகளை அலம்பி உபசாரம் செய்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அந்த பாத தீர்த்தத்தை உடல் முழுவதும் தடவி கொள் என முனிவர் பணிக்க, பகவானும் அந்தணரது பாத தீர்த்தம் தன் காலில் பட வேண்டாம் என்றெண்ணி மீதி உடல் முழுவதும் தடவி கொண்டார். இதை கண்டு சினம் கொண்ட துர்வாசர் “உமது பாதத்தில் அடிபடட்டும்” என்று சபித்தார்.

விஷ்வாமித்ரர் சாபம்:

விஷ்வாமித்ரர் போன்ற சான்றோரின் வாக்கை மெய்ப்பிக்க எண்ணி பகவானே செயலில் இறங்கி, விடுத்த சாபத்தை தன் கரங்கள் கொண்டே முடித்தொழித்தார். இச்செயலானது காந்தாரியின் சாபத்தில் இருந்தே தொடங்கியது.

இளமை செருக்கினால் புத்தி தடுமாறி கிருஷ்ணரின் மைந்தர்கள் மற்றும் சில யது குமாரர்கள் விதைத்த வினை, பின்னாளில் கோரை புற்களாகி அவர்களை அறுத்து எரிந்தன.

கிருஷ்ண ஜாம்பவதியின் குமாரனான சாம்பன் அதற்கான வித்தாய் அங்கே உரு பெற்றிருந்தான். சாம்பனை பெண்ணாய் அலங்கரித்த யது குமாரர்கள், விஷ்வாமித்ரரின் சக்தியை சோதிக்க எண்ணி சாம்பனை அவரிடம் அழைத்து சென்று “முனிவரே இப்பெண் கருவுற்றிருக்கிறாள், இவளுக்கு எந்த குழந்தை பிறக்கும் என கேட்டனர்?”

முக்காலமும் உணர்ந்த விஷ்வாமித்ரர் யது குமாரர்கள் தன்னை பரிகசிப்பதை அறிந்து மிகுந்த சினம் கொண்டு “இரும்பு உலக்கை பிரசவிக்கும், அது யது வம்சத்தை குல நாசம் செய்யும்” என்று சபித்தார்.

curse

சாம்பணின் வயிற்றிலிருந்து இரும்பு உலக்கை பிரசவித்ததும், அதனை அறிந்த உக்ரசேனர் (கிருஷ்ணரின் தாத்தா) உலக்கையை தூளாக்கி கடலில் எறிந்துவிட்டார். ஆனால் அப்பொடிகளோ அலைகளால் கரையில் ஒதுங்கி கோரை புற்களாய் வளர தொடங்கின.

தூளாக்கப்பட்ட உலக்கையின் ஒரு துண்டை கடலில் இருந்த மீன் ஒன்று விழுங்கியது, அந்த மீனை பரதவன் ஒருவன் பிடித்து அறுத்தபோது அத்துண்டை ஜரன் என்கிற வேடன் எடுத்து தனது அம்பில் சேர்த்து கொண்டான்.

images

இவை அனைத்தையும் அறிந்திருந்த பகவான், இதெல்லாம் இவர்களின் கர்ம வினைக்கேற்ப நடக்கிறது என்று எதையும் மாற்றவில்லை.

யது கூட்டத்தினர் குகுரர், விருஷ்ணிகள், அந்தகர் அனைவரும் பலராமரால் ஒருங்கினைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவும், மதுவும் கொடுக்கப்பட்டது, போதையில் ஒருவருக்கொருவர் திட்டி கொண்டனர், கலகம் அரங்கேறியது.

அந்த கலகத்தில் அழிவு எனும் பெருந்தீ மூண்டது கிருஷ்ண பலராம முன்னிலையில், அவர்கள் இருவரும் அமைதியாக நடப்பதை கவனித்தனர்.

இது கிருஷ்ண சங்கல்பம், அவரின் தூண்டுதல் கொண்டே ஆயுதங்கள் கொண்டு அடித்து கொண்டனர், ஆயுதங்கள் உடையவே அருகில் இருந்த கடற்கரையில் வளர்ந்த கூரான கோரை புற்களால் ஒருவர் மேல் ஒருவர் குத்தி கொண்டு மாண்டனர்.

தன் மைந்தர்கள் உட்பட மீதமிருந்த யது குலத்தோரை அதே கோரை புற்களால் பகவான் கொன்றோழித்தார். தெய்வம் நின்று கொன்றிற்று.

இதன் பின் பகவானது ஆயுதங்களான சங்கம், சக்கரம், சாரங்கம், அம்பறாத்துணி, கத்தி முதலியனவும் பகவானை வலம் வந்து நமஸ்கரித்து விண்ணில் பாய்ந்தன.

பகவானின் ஆயுதங்களை கண்டதும் விண் முழங்க தொடங்கின பர வாசுதேவரின் வருகையை, தேவர்கள் ஆர்ப்பரித்தனர்.

அடுத்ததாக பகவான் பலராமரை நோக்க, அவரது திருவாயிலிருந்து ஒளிப்பிழம்பாய் சர்ப்பம் ஒன்று வெளியேறியது விண்ணை நோக்கி.

துர்வாசரின் சாபத்தை மெய்ப்பிக்க ஒரு முழங்காலின் மேல் மற்றொரு திருவடியை வைத்து கொண்டு ஜரனை(வேடன்) வரவழைத்தார். தொலைவிலிருந்து கண்ட வேடன், பகவானின் திருவடியை “மான்” என்று எண்ணி கோரை புல் கொண்ட அம்பை எய்தி தாக்கினான்.

வேடன் அருகில் வந்து நான்கு திருத்தோள்களோடு ஒளிமயமாக பகவானை கண்டதும் பயந்து குறுகி, தான் செய்த தவறை மன்னித்து அருள் புரிய வேண்டும் என்று வணங்கினான்.

krishna

வேடனே நீ அஞ்ச தேவையில்லை, இது என் இச்சை கொண்டே அரங்கேறியது, எனது அருளால் நீ இப்பொழுதே சுவர்க்கம் அடைவாய் என்று சொன்னதுமே இந்திரனால் திவ்ய விமானம் அனுப்பட்டது. பகவானின் கடாக்ஷத்தால் அதில் ஏறி அவன் சுவர்க்கம் அடைந்தான்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பர வாசுதேவ ஸ்வரூபத்துடன் ஐக்கியமானார்.

விண்ணுலகம் ஆனந்த தாண்டவம் ஆடியது. மண்ணுலகம் கலியாட்டம் ஆடியது.

கலி ஆரம்பம்

பர வாசுதேவா! என் வாசுதேவா!

Leave a comment