26. ஆத்மா

ஆத்மாவாகிய அடியேனது இப்பயணம் ஏழு ஜென்மங்கள் கொண்டது என்று எண்ணம், ஆனால் நிதர்சனம் அதுவல்ல என்று உணர்ந்த போது கேள்விகள் எழுந்தன.

அதற்கான தேடலில் முனைந்ததும் அடியேனுக்கு கிடைத்தது நியூட்ரினோவை விட மிக சிறியதாய் ஒரு புள்ளி, மிக கரிய நிறத்தில் இருந்தது. அது இருந்த இடமோ பிரகாசமான வெள்ளை, அந்த வெள்ளை மிக பெரியது, எங்கும் வியாபிக்கிறது என்று புலனாயிற்று.

அந்த பிரகாசமான வெள்ளைக்கு அடியேனுக்கு தெரிந்த பெயர் ஸ்ரீமன் நாராயணன். அந்த அணு துகளான கரிய புள்ளிக்கு எனக்கு தெரிந்த பெயர் கர்மா.

ஆத்மாவான என் நிறமும் வெள்ளை தான், ஆனால் ப்ரம்மத்தை போன்று பிரகாசம் இல்லை. நானும் ஒரு சிறு புள்ளி தான், ஆனால் கர்மாவை விட சிறிது பெரியதாக உணர்கிறேன்.

ஒரு நெல் மணியின் வாலை வெட்டி எடுத்து நூறு பங்காக்கி, அதிலிருந்து ஒரு பங்கை எடுத்து மீண்டும் நூறு பங்காக்கினால், ஒரு பங்கின் அளவும் என் அளவும் ஒத்து இருக்கும் என வேத உபநிஷத்துகள் கூறுகின்றன.

ப்ரம்மத்தின் ஆற்றலினால் ஏற்பட்ட இப்பயணம்  பல கோடி அல்லது லட்சம் யுகங்கள் கடந்திருக்கலாம். என்னை போன்று எண்ணற்ற பேரின் பயணமும் தொடங்கியது.  

இங்கு இருக்கும் போது ப்ரம்மமான நான் உன்னை ரட்சித்தேன், பயணத்தின் போது என் பதிலி உன்னை தொடரும் என்றது. இந்த பதிலி தான் சிறு கரிய புள்ளியான கர்மா என்று தெரிந்தது.

ப்ரம்மத்தின்  பதிலி ஆகிணும் இயக்க போவது நான். ஏனென்றால் அது எனக்கானது, ப்ரம்மத்தால் எனக்காக பிரத்யேகமாக அனுப்பப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நானும் எனது கர்மாவும் ஒன்றாக பயணிக்கிறோம்.

காரணி ஆத்மாவாகிய நான், விளைவு கர்மாவாகிய அது.

எனதான இப்பயணம் நீண்ட நெடியது, லட்சோப லட்சம் ஜென்மங்கள் கொண்டது. ஜென்மத்தை ஏற்படுத்தி தந்தது எனது கர்மா, அதற்கான காரணம் நான்.

இந்த எண்ணற்ற ஜென்மங்களில் எங்கெல்லாம் பயணித்து உள்ளேன் என்று ஆராய்ந்தால், முக்கால் வீசம் நரக லோகம் (நரக லோகம் 25 வகை உண்டு), காரணம் நான் சேர்த்த பாவம் மிகுதி.

கால் வீசத்துக்கு சற்றே குறைய பூலோகம். ஏன் சில காலம் ஜென்மமும் இல்லாமல் அலைந்ததும் உண்டு.

சுவர்க, பித்ரு, சந்திர மற்றும் கீழ் லோகங்களும் சென்று இருக்கிறேன் மிக குறைவாக, காரணம் நான் சேர்த்த புண்ணியம் வெகு சொற்பம்.

இந்த கணக்கை எனக்கு சொன்னது எனது கர்மா.

இனி முடிவு பண்ண வேண்டியது நான், புண்ணியத்தை சேர்க்க வேண்டுமா, பாவத்தை சேர்க்க வேண்டுமா, இரண்டையும் தொலைக்க வேண்டுமா என்று?

இரண்டையும் தொலைத்தால் எனது பயணம் தொடங்கிய இடத்தில் நிறைவடையும். என்னை போன்று தொடங்கிய எண்ணற்ற பேரின் பயணம் நிறைவடைந்து ப்ரம்மத்தோடு  ஐக்கியம் ஆகிவிட்டது.

அங்கே என்னை காணாமல் வாஞ்சையோடு வழி அனுப்பி வைத்த ஸ்ரீமன் நாராயணன் என் வரவை எதிர்நோக்கி உள்ளார்.

இப்படிக்கு நான்.

Leave a comment