16. கைசிக ஏகாதசி

வேதத்தை விவரிக்கவே 2 இதிகாசங்கள் மற்றும் 18  புராணங்கள் பிறந்தன.

இவற்றுள் வராக புராணத்துக்கு தனி சிறப்பு உண்டு.

வராக பெருமான் அவதரித்து, பூமி தேவியை பிரளயத்தின் பிடியில் இருந்து மீட்டு தன் மடியில் இருத்தி, இப்புவியில் உள்ளோர் உய்விக்க உபதேசித்ததே வராக புராணம்.

வராக புராணத்தின் ஓர் அத்யாயம் கைசிக மஹாத்மியம்.

நிகழ்த்தியவன்: திருக்குறுங்குடி நம்பி

நிகழ்ந்த இடம்: திருக்குறுங்குடி

நிகழ்ந்த மாதம்: கார்த்திகை

நிகழ்ந்த பட்சம்: சுக்ல

நிகழ்ந்த நாள்: ஏகாதசி

கதையின் நாயகனின் சிறப்பு:

திருக்குறுங்குடி நம்பியின் திருவாயால் நம்மை பாடுவான் என்ற அந்தஸ்து கிட்டியது. இதனால் நம்பாடுவான் என்ற திருநாமம் பெற்றான் கதையின் நாயகன்.

இவருக்கு எத்தனை ஏற்றம் என்றால்

எத்தனை பெருமாள் இருந்தும் நம்பெருமாள்

12 ஆழ்வார் இருந்தும் நம்மாழ்வார்

எத்தனை ஜீயர் இருந்தும் நஞ்சீயர்

எத்தனை பிள்ளை இருந்தும் நம்பிள்ளை

எத்தனை பாடுவான் இருந்தும் நம்பாடுவான்

கதை:

பாணர் குலத்தில் பிறந்த நம்பாடுவான், ஏகாதசி அன்று திருக்குறுங்குடி மலை ஏறி நம்பியை பாடி துவாதசி பொழுது புலர்ந்ததும் திரும்புவது வழக்கம். இதில் அவனுக்கும் ஆனந்தம் அவருக்கும் ஆனந்தம்.

நம்பாடுவான் வீணை மீட்டும் அழகை காண்பதற்காகவே திருக்குறுங்குடி நம்பி தூவஜஸ்தம்பத்தை சற்று நகர்த்தியதாக சரித்திரம்.

tk

இந்த விசேஷம் தவறாமல் நடந்து வருகையில், ஓர் ஏகாதசிக்கு தடையாய் வந்தது பிரம்ம ராக்ஷசன்.

அன்று நம்பாடுவான் குறுங்குடி மலை மீது ஏறுகையில் பிரம்ம ராக்ஷசன் பிடித்து கொண்டது. நர மாமிசம் வேண்டும் எனவும், அதனால் நம்பாடுவானை உண்ண போவதாகவும் தெரிவித்தது.

தன்னை உண்ணுவதற்கு முன் நம்பாடுவான் ஒரு வேண்டுகோளை வைத்தான். தான் மலை மீதேறி நம்பியை பாடி, நாளை திரும்புவதாகவும் பிறகு தன்னை உண்ணலாம் என கூறினான்.

உன்னை விட்டால் தப்பி விடுவாய் என்று கூறிய பிரம்ம ராக்ஷசன், நம்பாடுவானை நம்ப மறுத்து வேண்டுதலை நிராகரித்தது.

அதற்கு நம்பாடுவான், பெருமாளின் உண்மையான பக்தன் பொய் உரைக்க மாட்டான் என்று கூறி திரும்பி வருவதாக சத்தியம் செய்கிறான். மீண்டும் பிரம்ம ராக்ஷசன் நம்பவில்லை.

நம்பாடுவான் தான் திரும்பி வராவிட்டால், 18 விதமான காரியங்களை கூறி அதன் பாவம் தன்னை வந்து சேரட்டும் என்று சூள் உரைத்தான்.

KM

முதல் 16 காரியங்களை நம்பாடுவான் சொன்ன பிறகும் பிரம்ம ராக்ஷசன் பிடி தளரவில்லை. 17வது பாவ காரியத்தை நம்பாடுவான் கூறியதும் பிடியை விட்டது, 18வது பாவ காரியத்தை சொன்னதும் போக அனுமதித்தது என சரித்திரம்.

நம்பாடுவான் ஆனந்தமாய் போனான், நம்பியை பாடினான், கைங்கரியத்தை முடித்து திருப்தியாய் திரும்பி வந்தான். வழியில் நம்பி, கிழ பிராமண ரூபத்தில் வந்து எங்கு செல்கிறாய் என கேட்க, உணவாக போகிறேன் என்று நம்பாடுவான் பதில் கூறினான்.

அதற்கு கிழ பிராமணன், செல்வதற்கு வேறு வழி இருக்கிறது தப்பி செல் என்று கூற, நம்பாடுவான் செய்து கொடுத்த சத்தியத்தை ஒரு போதும் மீற மாட்டேன் என பிரம்ம ராக்ஷசனிடம் சென்று தன்னை உணவாக அளித்தான்.

நம்பாடுவானை பார்த்த பிரம்ம ராக்ஷசன், தனக்கு பசி இல்லை எனவும், பதிலாக நீர் பாடியதற்கு உண்டான பலனை தந்து அருளி தனக்கு சாப விமோசனம் அளிக்க வேண்டும் என்று கேட்டது.

தான் முற்பிறவியில் சோம ஷர்மா எனும் அந்தணன் என்றும், யாகத்தை தவறாக செய்ததன் பலனாக இப்படி பிரம்ம ராக்ஷசனாக அலைகிறேன் என்று கூறியது.

பாடியதற்கு பலன் எதும் என்னிடம் இல்லை, பாடியதே பலன் தான் என்று நம்பாடுவான் கூறி மறுக்க, பிரம்ம ராக்ஷசன் மூன்றாம் ஜாமத்தில் பாடியதற்கு உண்டான பலனை மட்டும் கொடு என்று நம்பாடுவானிடம் கேட்க, பலனே இல்லை பிறகு எங்கிருந்து கொடுப்பது என்று மறுத்தார் நம்பாடுவான்.

பிரம்ம ராக்ஷசன் விடுவதாய் இல்லை மீண்டும் வினவியது, நீர் பற்பல ராகங்களில் பாடியிருப்பீர், கடைசியாக எந்த பண்ணில் பாடினீர்.

கைசிகம் என்று நம்பாடுவான் பதில் கூற, அதற்கான பலனை மட்டுமாவது கொடுக்க வேண்டும் என்று காலில் விழுந்தது.

உடன் நம்பாடுவான் பெருமாளிடம் கைசிக பண்ணின் பலனை பிரார்த்தித்து, அவரின் அநுக்ரஹத்தால் பிரம்ம ராக்ஷசன் சாப விமோசனம் பெற்றதாக சரித்திரம்.

இன்றும் இந்த புராணம் திருக்குறுங்குடியில் நாடகமாக கைசிக ஏகாதசியன்று இரவு நடக்கின்றது. இதில் நம்பாடுவான், பிரம்ம ராக்ஷசன், நம்பி கிழவன் ஆகிய மூன்று பாத்திரங்களில் பரம்பரையாக நடித்து வருகிறார்கள் இரு குடும்பங்கள்.

10 நாள் விரதம் அனுஷ்டித்து மிக சிரத்தையாய் செய்கிறார்கள். நம் வாழ்வில் ஒரு கைசிக ஏகாதசியாவது திருக்குறுங்குடியில் தங்கி இதை அனுபவிக்க வேண்டும். 

tk2

கைசிக ஏகாதசியன்று நம்பாடுவான் சரித்திரம் கேட்டால் நம் பாவங்கள் தொலையும், அதுவும் திருக்குறுங்குடிக்கு சென்று இதை அனுபவித்தால் நம்பியின் அருளும் கிட்டும்.

ராமானுஜருக்கு திருக்குறுங்குடி நம்பி சிஷ்யராக மாறி சேவை செய்த ஸ்தலம்.

திருக்குறுங்குடிக்கு அருகில் இருக்கும் மகேந்திரகிரி பர்வதத்தில் இருந்து அனுமன் சீதாதேவியை தேடி ஆகாய மார்கமாக புறப்பட்டதாக வரலாறு.

கதையின் கருத்து:

பக்திக்கு குலம் கிடையாது.

எந்தெந்த பாபங்களை தவிர்க்க வேண்டும்.

வியாக்கியானம்:

கைசிக ஏகாதசிக்கு பராசர பட்டர் ரொம்ப அழகா வியாக்கியானம் அருளி உள்ளார். முடிந்தால் படிக்கவும்.

கைசிக ஏகாதசியை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் ஓர் சரித்திரம் உண்டு, அதை அதி சீக்கிரமே தெரிவிக்கிறேன்.

Leave a comment