02. கூரத்தாழ்வான்

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் அனாதியான வேத காலத்திலிருந்தே இருக்கின்ற சம்பிரதாயம். இது எம்பெருமானாரால் பெரிதும் வளர்க்கப்பட்ட காரணத்தினாலேயே இதற்கு எம்பெருமானார் தரிசனம் என்று பெயர்.

ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரைக்கு ஏற்றம் பெருமானிடம் ஆரம்பித்து பெருமானிடமே முடிகிறது. அவனே முதல் ஆசார்யன், அவனே இறுதியில் சிஷ்யன் மாமுனிக்கு.

ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரை ஹாரத்தின் பதக்கம் எம்பெருமானார். எம்பெருமானாரால் தான் குரு பரம்பரைக்கு வாழ்ச்சி. எம்பெருமானாருக்கு பின் வந்தோருக்கு அவரது திருவடி சம்பந்தம், முன் இருந்தோருக்கு அவரது திருமுடி சம்பந்தம்.

எம்பெருமானாருக்கு இத்தகைய பெருமை ஏற்பட காரணம் ஆழ்வான் சம்பந்தம் கொண்டதினால் என்று எம்பெருமானாரே கூறியதாக ஐதீகம்.

எப்படி நம்பெருமாளின் பெருமையை எம்பெருமானாரை விடுத்து பேச முடியாதோ அதே போல் எம்பெருமானாரின் பெருமையை கூரத்தாழ்வானை விடுத்து பேச முடியாது.

நம்பெருமாள் மற்றும் எம்பெருமானாரின் பெருமையை பேச முடிந்தாலும் முடியும் ஆனால் கூரத்தாழ்வானின் பெருமையை பேச வார்த்தைகள் போதாது என்பது பூர்வாசார்யர்களின் கருத்து “மொழியை கடக்கும் பெரும்புகழான்வாக்கிற்கு  அப்பாற்பட்டவர் கூரத்தாழ்வான்“.

திருவரங்கத்து அமுதனார் இராமானுச நூற்றந்தாதியில், கூரத்தாழ்வான் சம்பந்தம் கொண்ட இராமானுசனை சரண் புகுவோம் என்றே சாதித்துள்ளார்.

g1

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே

ஸ்வாமி ஆளவந்தாரின் ஆசையை நிறைவேற்ற எண்ணி, எம்பெருமானார் பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானம் எழுதுவதற்காக போதாயன விருத்தி க்ரந்தத்தை தேடி காஷ்மீரம் பயணப்பட்டார் ஆழ்வானுடன். காஷ்மீரத்து அடியார்கள் (அத்வைத சித்தாந்தத்தை சார்ந்தவர்கள்) க்ரந்தத்தை எம்பெருமானாருக்கு கொடுத்து, பின் ஒரே இரவில் எம்பெருமானார் விசிஷ்டாத்வைத கோட்பாடை கொண்டு வியாக்கியானம் எழுதுகிறார் என்பதை அறிந்து க்ரந்தத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர்.ramanujar_3_57

இச்செயலால் எம்பெருமானார் துணுக்குற, ஆழ்வான் தான் ஒரே இரவில் க்ரந்தத்தை சேவித்து அர்த்தங்களை அறிந்து கொண்டதாகவும், எம்பெருமானார் திருவுள்ளம் சாதித்தால் “இங்கனமே விண்ணப்பிக்கவோ அல்லது இரண்டாற்றங்கரையிலே (திருவரங்கம்) விண்ணப்பிக்கவோ” என வேண்ட, ஆழ்வானின் அபார ஞானத்தையும் மற்றும் ஏக சந்த கிரகிப்பு தன்மையும் நினைத்து க்ரமம் மாறி போய்விட்டது என்று எம்பெருமானார் இப்படி கூறலானார் “நீர் எனக்கு ஆசார்யனாக இருத்தல் வேண்டும், மாறி நீர் என்னை ஆச்ரயித்து கொண்டீர்“.

ஆழ்வான் போதாயன விருத்தி க்ரந்தத்தை சேவித்ததால், நீரே பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதும் என பணித்தார் எம்பெருமானார். ஆனால் ஆழ்வானோ ஆசார்யன் இருக்க அடியேன் அந்த அதிகப்பிரசங்கத்தை செய்யோம் என மறுத்துவிட்டார்.

எம்பெருமானார் க்ரந்தத்தை சேவிக்கவில்லை, ஆழ்வானோ எழுத மறுக்கிறார். ஆகையால் எம்பெருமானார் பிரம்ம சூத்திரத்திற்கு தானே பாஷ்யம் சாதிப்பதாகவும், எங்கேனும் அர்த்தம் போதாயன விருத்தி க்ரந்தத்திற்கு விரோதமாக இருந்தால் சுட்டி காட்டவும், அடியேன் திருத்தி கொள்கிறேன் என்று ஆணையிட்டார் ஆழ்வானுக்கு.

ஆழ்வானோ ஆசார்யன் சாதித்ததை தவறு என்று கூறும் யோகியதை அடியேனுக்கு இல்லை என மீண்டும் மறுத்துவிட்டார். இதற்கு தீர்வாக எம்பெருமானார் ஓர் யுக்தியை கையாண்டார், க்ரந்தத்திற்கு விரோதமாக பாஷ்யம் அமைந்தால் நீர் எழுதுவதை நிறுத்திக்கொள்ளும், அடியேன் புரிந்துகொண்டு அர்த்தத்தை மாற்றி உரைக்கிறேன். ஆழ்வான் அரைமனதாக சம்மதித்தார் எம்பெருமானாரின் ஆணைக்கு.

இப்படியாக ஸ்வாமி ஆளவந்தார் கிருபையுடன், எம்பெருமானார் உபதேசித்து ஆழ்வானால் எழுதப்பட்ட பிரம்ம சூத்திரத்தின் வியாக்கியானமே ஸ்ரீ பாஷ்யம். அதில் ஆழ்வானின் பங்கோ அளப்பரியது. sribashyam

(படத்தில்: எம்பெருமானார், ஆழ்வான், முதலியாண்டான் & ஸ்வாமி ஆளவந்தார்)

ஆழ்வான் வஞ்ச முக்குறும்பையும் துடைத்து எறிந்தவர்

  1. உயர் குலத்தில் பிறந்தோம் என்ற குல செருக்கு
  2. கூரத்தின் அதிபதி என்கிற செல்வ செருக்கு
  3. ஞான செருக்கு

பிள்ளை பிள்ளை ஆழ்வான் என்ற அந்தணருக்கு உண்டான குல செருக்கை திருத்தி ஆட்கொண்டார் ஆத்ம ஞானம் மிக்க ஆழ்வான். கூரத்தில் உள்ள செல்வத்தை துறந்து எம்பெருமானாருக்கு பணிவிடை செய்து உய்தனர் ஆழ்வானும் அவரது இல்லாள் ஆண்டாளும்.

அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர்  உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார்.

திரிதண்டி காஷாயம் அணிந்து எம்பெருமானாரை காக்க சோழ அரசவை சென்று ஆழ்வான் தன் திருக்கண்களை இழந்தது ஆசார்ய பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஒரு சமயம் சோழ அரசன்  எம்பெருமானாரை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்ல தடை விதித்து “தனக்கும் எம்பெருமானாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கையோப்பம் ஈடுபவர்கள் மட்டுமே அரங்கனை சேவிக்கலாம் என்று கட்டளையிட்டான். எம்பெருமானார் சம்பந்தம் இல்லாமல் போனால் இந்த ஆழ்வான் இல்லை என்று கையோப்பமிட மறுத்து அரங்கனை துறந்தார் என்கிறது ஆழ்வானின் சரித்திரம்.

எம்பெருமானார் மேல் கோட்டை எழுந்தருள்வதற்கும், ஆழ்வான் தன் திருக்கண்களை இழப்பதற்கும், பெரிய நம்பி பரமபதம் அடைவதற்கும் காரணமாக இருந்த நாலூரானும் உய்ய வேண்டும் என ஆழ்வான் நினைத்தது அவரின் ஆத்ம குணத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. 

பிராட்டி தனக்கு தீங்கு இழைத்த 700 ராட்சசிகளையும் எப்படி ரட்சித்தாரோ, அதே போல் நாலூரானை ரட்சித்து அடியேன் பெரும் பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வரதராஜனிடம் வேண்டினார் ஆழ்வான்.

ஸ்ரீ வைஷ்ணவ லட்சணம் யாது என்பதை அறிய கூரத்தாழ்வானை நோக்கு என்று எம்பெருமானார் கூறுவாராம்.

ஆழ்வான் எம்பெருமானாரை விட 7 திருநக்ஷத்திரம் மூத்தவர் (திருநக்ஷத்ரம் : தை, ஹஸ்தம்).

எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளையே புகலிடமாகக் கொண்டு அவரிடம் பஞ்ச சம்ஸ்காரத்தையும் பெற்றுக்கொண்டார்.

அடுத்த பக்கம்

Leave a comment