08. நவரத்தின மாலை

பல ஜென்மங்கள் பிறவி எடுத்தால் மனித ஜென்மம்
பல ஜென்மங்கள் மனிதனாக இருந்தால் சூரிய பக்தன்
ஏழு ஜென்மங்கள் சூரிய பக்தனாக இருந்தால் சிவ பக்தன்
ஏழு ஜென்மங்கள் சிவ பக்தனாக இருந்தால் விஷ்ணு பக்தன்
பல ஜென்மங்கள் விஷ்ணு பக்தனாக இருந்தால் ப்ரபன்னன்
ப்ரபன்னன் ஆசார்ய கிருபையினால் ப்ரபத்தி அனுஷ்டித்து மோக்ஷம்
ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் அருளிய பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்களில் ஒன்று நவரத்தின மாலை.
ரஹஸ்ய க்ரந்தத்தை ரஹஸ்யமாக வைக்காமல் பொதுவெளியில் ஏன் என்று நினைக்கலாம். நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை இரண்டாக பகுக்கலாம்
ராமானுஜருக்கு முன் – ஓர் ஆண் வழி
ராமானுஜருக்கு பின் – ஆசை உள்ளோருக்கு
ஆதலால் நம் சம்பிரதாயத்தை பின்பற்ற ஆசை கொண்டோரே தொடர போகிறீர்கள் என்கிற நம்பிக்கையில் இந்த பதிவு.
மேலும் அநேக பெரியோர்கள் சம்பிரதாய விஷயங்களை இனியும் ஓர் ஆண் வழியாய் தொடர்ந்தால் கலியின் சூழலில் சிக்கி பொக்கிஷங்கள் மறைந்தே போகலாம் என முடிவுக்கு வந்து வெகுகாலம் ஆயிற்று.
நவரத்தின மாலை ஆரம்பம்:
நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒன்பது பேரிடம் எவ்வாறு அபிப்ராயம் கொண்டிருக்க வேண்டும் என நவரத்தின மாலையாக தொடுத்துள்ளார் ஸ்வாமி. ஒவ்வொரு அபிப்ராயமும் ரத்தினம் ஆகியப்படியால் இதற்கு நவரத்தின மாலை என்ற பெயர் காரணம்.
இந்த விதிகள் யாவும் சரணாகதர்களுக்கும் முமுக்ஷுக்களுக்கும் மட்டுமே.
யார் இந்த ஒன்பது பேர்? அவர்களிடம் நாம் எப்படி அபிப்ராயம் கொண்டால் என்ன என்ற நினைப்பிற்கே இடம் இல்லை. சரணாகதி அனுஷ்டித்த யாவரும் பின்பற்ற வேண்டிய கட்டளைகள் இவை.
முன் குறிப்பு: இந்த அபிப்ராயங்கள் லௌகீகமாக மனதை புண்படுத்தலாம் ஆனால் வைதீகமாக ஆழ்ந்து உட்கருத்தை புரிந்து கொண்டால் ஒவ்வொன்றும் ரத்தினம்.
pillailokacharya-goshti
ஒன்பது பேரும் அவர்களிடம் கொண்டிருக்க வேண்டிய அபிப்ராயமும்:
1) ஆத்மா – நித்யமான ஆத்மாவான தன்னை ஞானமுள்ளவன் என அகந்தை கொள்ளாமல் நாராயணனுக்கே அடிமை என என்றென்றும் சேஷத்துவம் புரிதல் வேண்டும் அது ஸ்ரீரங்கம் ஆனாலும் சரி ஸ்ரீவைகுண்டம் ஆனாலும் சரி.
2) தேகம் – தேகம் ஞானமற்றது, அழிவுள்ளது. தேகம் வேறு ஆத்மா வேறு என உணர்ந்து தேக அபிமானத்தை அறுத்து மோக்ஷத்தை தடுக்கும் விரோதியாக தேகத்தை பாவித்தல் வேண்டும்.
3) பந்துக்கள் – தாய் தந்தை உட்பட தேக பந்துக்கள் சரணாகதர்களாய் இல்லாமல் நாராயண கைங்கரியத்துக்கு இடைஞ்சலாக இருந்தால் தவிர்த்தல் வேண்டும். தேக சம்மந்தம் இல்லாத சரணாகதர்களை ஆத்ம பந்துக்களாய் கொண்டாட வேண்டும்.
4) சம்சாரிகள் – கணவனோ மனைவியோ சரணாகதர்களாய் இல்லாமல் நாராயண கைங்கரியத்துக்கு இடைஞ்சலாக இருந்தால் தவிர்த்தல் வேண்டும்.
5) தேவதான்திரங்கள் – ஸ்ரீவைஷ்ணவன் பெருமாளை தவிர மற்ற தெய்வங்கள் அதாவது அன்ய தேவதாந்திரம் (பிள்ளையார், சிவன், முருகன், அம்மன், ஐயப்பன், சாய்பாபா மற்றும் பல) பூஜையை தவிர்க்க வேண்டியது ஸ்வரூப லக்ஷணம். பூஜிக்க வேண்டாம் என்பதால் தூஷிக்கலாம், குறை கூறலாம் என்று அர்த்தம் இல்லை.
பெருமாளான பரமாத்மாவே மோக்ஷத்தை அளிக்க வல்லவன். மற்ற தெய்வங்கள் அனைவருக்கும் பெருமாள் சிருஷ்டியில் வரையறைபட்ட அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
6) ஸ்ரீவைஷ்ணவர்கள் அடியார்க்கடியான் என்பதே ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படை கொள்கை. ஸ்ரீவைஷ்ணவர்களான அடியார்களுக்கு அடியாய் இருத்தல் வேண்டும். ஸ்ரீவைஷ்ணவர்கள் சமீபத்தில் இருந்தே காலத்தை கழித்தல் வேண்டும்.
இங்கே எவர் ஸ்ரீவைஷ்ணவர் என நினைத்தாலே அபச்சாரம்.
இன்னார் ஸ்ரீவைஷ்ணவர் இன்னார் இல்லை என்று முடிவு எடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. ஆகையால் பெருமாளை அந்தராத்மாவாய் கொண்டுள்ள யாவருமே ஸ்ரீவைஷ்ணவர் என கருதி தொண்டு புரிதல் வேண்டும்.
பகவானிடம் நாம் செய்த பகவத் அபச்சாரத்தை கூட மன்னித்து அருள் புரிவான் ஒருநாளும் பாகவத அபச்சாரத்தை மன்னிப்பது இல்லை.
7) ஆசார்யர் ஆசார்ய தேவோ பவ, ஏனென்றால் நமக்கும் பரமாத்மாவுக்கும் பாலமாய் இருந்து ஈஷ்வர திருவடிகளை பற்ற யோக்யதை இல்லா நம்மை பஞ்ச சம்ஸ்காரத்தால் யோக்யதை ஏற்படும்படி பண்ணுபவர் ஆசார்யரே.
நம் சம்பிரதாயத்தில் ஆசார்யரே ஸ்வாமி நாம் அவர் சொத்து, அவரின் அறிவுரைப்படியே உய்ய வேண்டும்.
பெருமாளுக்கு நம்மால் முடிந்ததை சமர்ப்பிக்கலாம் ஆனால் ஆசார்யருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு தெரிந்துகொண்டு அதையே சமர்ப்பித்தல் வேண்டும்.
8) பிராட்டி – அடியார்களிடத்தில் குற்றத்தை பெருமாள் பார்க்கிறார் ஆனால் பிராட்டியோ அடியாரின் குற்றத்தையே குணமாக கொண்டு பெருமாளின் கோபத்தை ஆற்றி மோக்ஷத்துக்கு வழி வகுக்கிறார்.
பிராட்டி சம்மந்தம் இல்லாமல் நாம் கடையேறுவது ஏது. ஆகையால் எப்பொழுதும் கோவிலில் பெருமாளை தரிசிக்கும் முன் தாயார் சந்நிதிக்கு சென்று பிராட்டியை வணங்க வேண்டும்.
9) பெருமாள்இந்திரியங்களை அருளி சரீரத்தை கொடுத்து அந்தர்யாமியாய் கட்டை விரல் அளவில் மனதில் எக்காலமும் நமக்குள் இருந்து ஆத்ம குணங்களை வளர்த்து அடியார்களிடம் சேர்ப்பித்து ஆசார்ய சம்மந்தம் ஏற்படுத்தி மோக்ஷத்துக்கான உபாயமாய் தன் திருவடி தந்த பரந்தாமனுக்கு என்றும் பல்லாண்டு பாடி கைங்கரியம் செய்திருத்தல் வேண்டும்.
பின் குறிப்பு: மேலே குறிப்பிட்டவை நவரத்தின மாலை என்கிற பெருங்கடலில் இருந்து ஒரு சிறு துளி. ஸ்ரீவைஷ்ணவர்களை அவரவர் ஆசார்யரை அண்டி மேலும் அறிந்து கொள்ள பிரார்த்திக்கிறேன்.
ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் தனியன்:
லோகாசார்ய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:

Leave a comment