15. திருமண்

ஸ்ரீ வைஷ்ணவனின்  பொதுவான  லக்ஷணங்கள்  மூன்று.

(1) கழுத்தில் துளசி மணி (2) நெற்றியில் திருமண் காப்பு (3) பஞ்ச ஸம்ஸ்காரம்

ஒருவன் பஞ்ச ஸம்ஸ்காரம் முடித்து, கழுத்தில் துளசி மணியுடன், நெற்றியில் திருமண் காப்பும் துலங்க லோகத்தில் சஞ்சரிப்பதால் மட்டுமே இந்த அண்டம் உய்கிறது என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கு முன்பே அனைவரும் திருமண் காப்பினை தரித்து கொள்ளலாம். திருமண் காப்பை தரித்துக் கொள்ள பேதங்கள் கிடையாது, ஸ்ரீ வைஷ்ணவனாக இருந்தல்  மட்டும்  வேண்டும்.

tm

ஆன்மா 101வது நாடியான சூஷூம்னா நாடியை பற்றி உயர் கதியான வைகுண்டத்தை அடைகிறது. இதன் அறிவுறுத்தலே நெற்றியில் திருமண் காப்பை மேல் நோக்கி அணிகின்றோம். திருமண் காப்பினை முதலில் துளசி மண்ணினாலும், திவ்யக்ஷேத்ர மண்ணினாலும் தான் பூர்வர்கள் அணிந்து வந்தார்கள்.

ஸ்ரீ வராஹவதாரம் தோன்றி பூமிதேவியை காத்ததன் பொருட்டு துதிக்க வந்த தேவர்கள், முனிவர்கள் நெற்றி சூன்யமாக இருந்தது கண்டு திருமண் காப்பின் பெருமை பற்றி அருளிச் செய்கிறார் வராஹமூர்த்தி. வைகுண்டத்திற்கு அழைத்து செல்ல உதவும்  ஒரு  சின்னம் தான் திருமண் காப்பு என்று  வராஹமூர்த்தி உபதேசிக்கிறார்.

வராஹமூர்த்தி  கருடனுக்கு ஆணையிட, அவரும் க்ஷீராப்தியிலிருந்து (திருப்பாற்கடல்) பால் கட்டிகளைக் கொண்டு வந்து பல திவ்யக்ஷேத்ரங்களில் தெளித்தார். அந்த கட்டிகள் விழுந்த க்ஷேத்ரங்கள் தான் இன்றளவும் ஸ்வேதகிரி, ஸ்வேத புஷ்கரணி என பல பெயர்களில் விளங்குகிறது, மேலும் திருமண் என்றும் அறியப்படுகிறது.

ஆக திருமண்னை பூலோகத்திற்குக் கொண்டு வந்த அவதாரம் ஸ்ரீ வராஹவதாரம்.

ஆசார்யன் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் போது திருமந்திரத்தை உபதேசித்து திருமண் காப்பை தரித்துக் கொள்ளும் முறையையும் தெரிவிக்கிறார். நெற்றியில் தொடங்கி பன்னிரண்டு திருமண் காப்புகளை உடலின் பல்வேறு அங்கங்களில் அந்தந்த இடத்திற்குரிய ப்ரணவத்தோடு கூடிய நாமத்தை உச்சரித்து கை நகம் படாமல் திருமண்ணைக் குழைத்து இட்டுக் கொள்ள வேண்டும்.
tm1tm2

மஹாவிஷ்ணுவின் அழகிய இணை தாமரை திருவடிகளின் வடிவத்தை கொண்டு விளங்குகிறது, மேல் நோக்கி எழுதப்பட்ட திருமண் காப்பு. அடிமூக்கில் இரண்டு அங்குல பாதமும், நெற்றியின் நடுவில் ஒன்றரை அங்குலம் இடமும் விட்டு இரண்டு பக்கத்திலும் அரை அங்குலம் தரித்து தலையின் உச்சி வரையிலும் சாற்றிக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீசூர்ணத்தை சிவப்பு, மஞ்சள் வர்ணமாக திருமண் மத்தியில் சாத்திக் கொள்ள வேண்டும்.

தாயார் மஞ்சள் வர்ணமாக இருக்கும் போது, அவளை குறிக்கும் ஸ்ரீசூர்ணமும் மஞ்சளாக தானே இருக்க வேண்டும்? எங்கிருந்து சிவப்பு வந்தது.

வராஹர் மூலமாகத் திருமண் தோன்றியது என்பதைப் பார்க்கும்போது அவரது மடியில் அமர்ந்திருந்த பிராட்டியின் சரீரம் அவரது அரைச் சிவந்த ஆடையின் மேலன்றோபட்டுக் கொண்டிருந்தது. அதனால் அவளது நிறமும் சிவப்பாயிற்று. அந்த ஸமயத்தில் தோன்றிய ஸ்ரீசூர்ணமும் சிவப்பாயிற்று.

பகவானின் திருமார்பில் நித்யவாசம் செய்யும் மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீநிவாஸனை அடையும் பொருட்டு விளக்கு ஜ்வாலை வடிவில் ஸ்ரீசூர்ணம் தரிக்க வேண்டும்.

ஸ்ரீசூர்ணம் மங்களகரமானது, தெய்வீகமானது, மோக்ஷம் அளிக்கவல்லது.

Leave a comment