40. யாத்ரா தானம்

ஜீவன் சரீரத்தை விடுத்த பின், யமபுரியை நோக்கி மேற்கொள்ள உள்ள மிக கடினமான யாத்திரை மற்றும் இதனை சுலபமாக்க கர்த்தாக்கள் செய்ய வேண்டிய மாசிகம் & தானங்களை பற்றிய பதிவு இது.

இந்த யாத்திரை அனைத்து ஜீவன்களுக்கும் பொருந்துமா என்றால் இல்லை.

  1. முக்தியடையும் ஜீவன் கண்ணிமைக்கும் நேரத்தில் வைகுண்டத்தை அடைகிறது.
  2. புண்ணிய ஜீவனுக்கு இந்த யாத்திரை உண்டு, புண்ணிய பலத்திற்கு ஏற்ப சுலபமானதாக இருக்கும் மற்றும் கர்த்தா செய்யும் மாசிகம் & தானங்கள் மேலும் இலகுவாக்கும்.
  3. பாவ ஜீவனுக்கு மிக கொடியதாக இருக்கும், கர்த்தா செய்யும் மாசிகம் & தானங்கள் ஜீவனுக்கு சற்று பலத்தை அளித்து துன்பங்களை தாங்கும் சக்தியை அளிக்கும் .

யமபுரி தூரம்: 86,00,000 யோஜனை (ஒரு யோஜனை = 13 Kms Approx). ஜீவன் இந்த யாத்திரையை முடிக்க ஒரு வருட காலம் நம் கணக்கின் படி, அதே நேரம் ஜீவனுக்கு ஒரு நாள் தான் (தேவ காலம்).

சபிண்டிகரணம்: யாத்திரையின் தொடக்கம்

யமபுரியை அடைய ஜீவன் 16 கொடிய நகரங்களை கடக்க வேண்டும். ஒவ்வொன்றும் ஒன்றுக்கு சளைத்தது அல்ல என்கிற அளவுக்கு துக்கங்களும் , கஷ்டங்களும். ஜீவன் ஒவ்வொரு நகரத்தை கடக்கும் பொழுதும் பசி , தாகம் , துக்கம் பன்மடங்கு அதிகரிக்கும், செல்கிற பாதையும் கடினம்.

ஜீவனுக்கு கட்டை விரல் அளவு கொண்ட யாதனா சரீரம் கொடுக்கபடும் இவற்றை அனுபவிக்க. ஒவ்வொரு நகரத்தை கடக்கும் பொழுதும் சற்று பசி, தாகம் போக்க மற்றும் இதத்தை அளிக்கவே 16 மாசிகம் பண்ணப்படுகிறது கர்த்தாவால் (11 மாசிகம் + 4 ஊன மாசிகம் + 1 ஆப்தீகம்).

கர்த்தா ஏன் சரியான காலத்தில் மாசிகத்தை தவறாமல் செய்ய வேண்டும் மற்றும் தானங்களை குறையில்லாமல் அளிக்கவேண்டும் என்பதற்கான யாத்திரை விவரணம் கீழே:

  1. யாம்யபுரி – எம தூதர்களால் கயிற்றில் பிணைக்கப்பட்டு ஜீவன் பூவுலகிலிருந்து நடந்தே அடையும் முதல் நகரம்.

இங்கே ஜீவனுக்கு நினைவு கூடுதலாக அளிக்கப்பட்டு, தாம் கடந்த ஜென்மங்களில் எப்படியெல்லாம் சுகித்து இருந்தோம், இப்படி இவர்களிடம் அகப்பட்டு நற்கதி அடையாமல் தவிக்கிறோமே என்று வேதனை பீறிடும்.

முதல் மாசிகம் (11ம் நாள்) இங்கே ஜீவர்களை அடைந்து சற்று சாந்தி ஏற்படுகிறது.

2. சவுரிபுரி – அரக்கன் ஜங்கம் ஆள்கின்ற இந்நகரத்தில் அநேக கொடுமைகளும் நிகழ்த்தபடுகின்றன. இவ்விடத்தை கடக்க ஜீவனுக்கு உதவுவது முதல் ஊன மாசிகம் (28ம் நாள்).

3. நாகேந்திர பவனம் – அதிபயங்கரமான காடு, இரண்டாம் மாசிகம் உதவி.

4. கந்தர்வ நகரம் – இரண்டாம் ஊன மாசிகம் கடக்க உதவுகிறது (45ம் நாள்).

5. ஷைலகம் – கல் மழை பொழியும் நகரம், மூன்றாம் மாசிகம் உதவி.

6.     கிரௌஞ்ச புரி – ராட்சச பட்சிகள் வாழும் நகரம், நான்காம் மாசிகம் உதவி. 

7. குரூர புரி – ஐந்தாம் மாசிகம் பசி, தாகம் மற்றும் துக்கத்தை குறைக்க உதவுகிறது.

8. விசித்திர பவனம்6 ம் மாச ஊன மாசிகம் அதிமுக்கியமாக அளிக்கப்படுகிறது இங்கே, ஏனென்றால் ஜீவன் அடுத்த நுழைய போகும் இடம் அப்படி. வைதரணி நதி – ரத்தம் , எலும்பு, கேசம் மற்றும் மாமிசத்தால் ஆன நதி , கொடிய மீன்களின் வசிப்பிடம். தானம் மற்றும் மாசிகம் இல்லாமல் இதை கடப்பது என்பது ஜீவனுக்கு அசாத்தியமே.

9. பஹுஆபத் – ஆபத்துக்களால் நிறைந்தது, 6ம் மாசிகம் ஆறுதல் தருகிறது.

10. துக்கதம் – அதீத துக்கங்களை விளைவிக்கும் நகரம், 7ம் மாசிகம் அமைதி அளிக்கிறது.

11. நானா க்ரந்தன புரி – யாத்திரை புரியும் ஜீவர்கள் கூட்டமாக துக்கம் தாளாமல் ஓலம் விடும் நகரம், 8ம் மாசிகம் தயை.

12. ஸுதப்த பவனம் – தாங்க முடியா உஷ்ணத்தை அளிக்கும் நகரம். 9ம் மாசிகம் இதத்தை வழங்குகிறது.

13. ரௌத்திர நகரம் -10ம் மாசிகம் கடக்க உதவுகிறது.

14. பயோவர்ஷணம் – அதீத மழை மற்றும் வெள்ளம் அமைந்த நகரம். 11ம் மாசிகம்.

15. சீதா ஆத்ய புரி – கடும் குளிர் பிரதேசம். கடைசி ஊன மாசிகம் கிருபை.

16. பாஹு தர்ம பீதி புரி – 12 தேவதைகள் இருக்கும் இடம் , இங்கே புண்ணிய பாவம் கணக்கு ஜீவனிடம் எடுத்துரைத்து, பதிலுக்கு தன் பக்க வாதங்களை ஜீவன் கோர அனுமதிக்கப்படுகிறது. ஆப்திகம் ஜீவனுக்கு வாதம் புரிய சற்று தெம்பை அளிக்கிறது.

இறுதியாக – யமபுரியில் தீர்ப்பு நிர்ணயம்.

ஜீவனுக்கு யாத்திரையில் தச தானங்களின் பிரயோகம்:

கோ – வைதரணி நதியை கடக்கும்

பூமி – 60,000 ஆண்டு காலம் சொர்கம் ப்ராப்தி

எள் – பாபங்களை போக்கும்

சொர்ணம் – புண்ணியங்களை தருவிக்கும்

நெய் – தேவர்களின் கடாக்ஷம்

வஸ்திரம் – குளிர், வெப்பம் காக்கும்

தானியம் – பசி போக்கும்

வெல்லம் – மஹாலக்ஷ்மியின் அருள்

வெள்ளி – பித்ரு ப்ரீத்தி

உப்பு – சுவை நல்கும்

இன்னும் நிறைய தானங்கள் உள்ளன. பிரதானமானவையே மேலே தச தானங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.

கர்த்தாவின் சக்திகேற்ப இதர தானங்களையும் (குடை , கம்பளி , படுக்கை , காலணி, கைத்தடி, படகு etc.) தெரிந்து அமைத்து கொடுத்தார் என்றால் யாத்திரை மேற்கொண்ட ஜீவனுக்கு க்ஷேமம் உண்டாகும்.

ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே ஸ்ரீமதே நாராயணாய நம