41. பூணூல்

பூணூல் – மூன்று நூல் & ஒரு முடிச்சு கொண்ட அடையாளம் என்கிற காலத்தில் நாம் இருக்கின்றோம். ஆதலால் பூணுலை பற்றி அவசியம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்களை பதிவிடுகிறேன் இத்தொகுப்பில்.

சரி ! அடையாளத்திலிருந்தே தொடங்குவோம்.

மூன்று நூல்:

முதல் தத்துவம் – மூன்று நூலும் நமக்கிருக்கும் மூன்று கடன்களை நினைவூட்டுகிறது.

  1. ரிஷி கடன் – வேத அத்யயனம்
  2. தேவ கடன் – யாகம் & யஞ்யம் புரிதல்
  3. பித்ரு கடன் – நல்ல சந்ததிகளை உருவாக்குவது

இரண்டாம் தத்துவம் – மூன்று நூலும் நமக்குள்ளிருக்கும் மூன்று நாடிகளை குறிக்கின்றன. நாடி என்றதும் நரம்பு போல் யோசிக்க வேண்டாம், பிராண வாயு இயங்கும் வழிப்பாதை இது.

  1. ஈடா – முதுகெலும்பின் இடது புறத்தில் இயங்கும் பாதை
  2. பிங்களா – முதுகெலும்பின் வலது புறத்தில் இயங்கும் பாதை
  3. சுஷும்னா – முதுகெலும்பின் நடுவில் இயங்கும் பாதை

பூணூல் எதற்கு நாடிகளை பற்றி பேசவேண்டும் அதுவும் குறிப்பாக இம்மூன்றை மட்டும், நம் உடம்பில் 72,000 நாடிகள் இருக்கின்றபோது. பிரம்ம முடிச்சே இதற்கு சாரம்.

மூன்றாம் தத்துவம் – மூன்று நூலும் நமக்கிருக்கும் மூன்று குணங்களை குறிக்கின்றன: 1. சத்வ 2. ரஜோ 3.தாமச.

ஒரு முடிச்சு:

பிரம்ம முடிச்சு – ஜீவன் முக்தி அடைய இந்த முடிச்சு அவிழ்க்க படவேண்டும். பிராண வாயு, ஈடா மற்றும் பிங்களா வழியாக இயங்கும் ஆனால் சுஷும்னா வழியாக அதனால் சஞ்சரிக்க இயலாது.

முதுகெலும்பின் நடுவில் உள்ள சுஷும்னா நாடி வழியாக இயங்க தடையாக இருப்பது அங்கே இருக்கும் இந்த பிரம்ம முடிச்சு. இது அவிழ்க்கப்பட்டு, இதன் வாயிலாக ஜீவன் பிரிந்தால் மோக்ஷம் என வேதம் உரைக்கிறது. இதனை அறிவிக்கவே பூணூலில் ஒரு முடிச்சு.

அடுத்ததாக அதென்ன பிரம்மச்சாரிக்கு ஒரு பூணூல், விவாஹத்திற்கு பிறகு இரண்டு பூணூல் ?

ஒரு பூணூல் தனக்கான கடனை நினைவூட்ட , இன்னொன்று இனி உன் பத்தினிக்கான கடனுக்கும் நீ தான் பொறுப்பு என்பதை குறிக்கிறது. Mind voice: நம்ம கடனையே நாம் அடைப்பதில்லை , இதுவேறையா :).

இன்னும் சிலர் மூன்றாவது பூணூல் அணிகின்றனரே, ஏன்?

ஒரு கிரஹஸ்தன் உத்தரீயம் (அங்கவஸ்திரம்) இல்லாமல் வேத காரியங்கள் புரிய கூடாது. அக்னி ஹோத்ரம் புரிபவர்கள் எக்காலமும் ஹோமம் வளர்த்து கொண்டிருப்பர், உத்தரீயத்தை மறக்க நேரிடும், அதற்கு சமானம் இந்த மூன்றாவது பூணூல்.

பூணூலை ஏன் தேவ காரியத்தில் உபவீதமாகவும் பித்ரு காரியத்தில் ப்ராசீனாவீதமாகவும் அணிதல் வேண்டும்?

நாம் ஹோமங்களை சூரியனை நோக்கி கிழக்கு முகமாக அமர்ந்து வளர்க்கின்றோம். அதிலிருந்து வடக்கில் தேவலோகம் , தெற்கில் பித்ருலோகம்.

இதனால் தான் தேவ காரியம் புரியும் பொழுது பூணூல் வடக்கு நோக்கி இருக்க இடது தோளிலிருந்து உபவீதமாக அணிகின்றோம். அதேபோல் பித்ரு காரியத்திற்கு தெற்கு பக்கம் இருக்க வலது தோளில் ப்ராசீனாவீதமாக அணிகின்றோம்.

மற்ற லௌகிக விஷயத்திற்கு மாலையாக (நிவீதம்) அணிதல் வேண்டும்.

மஹரிஷி காத்தியாயானர் அருளிய பூணூல் தயாரிப்பு முறை:

பருத்தியிலிருந்து வரும் பஞ்சை நிழலில் காய வைத்து தக்கிளி கொண்டு நூலாக நூக்க வேண்டும்.

கிடைத்த நூலிலிருந்து 96 இழைகள் அளவு எடுக்கவேண்டும் (1 இழை = 1 கை சுற்றளவு தோராயமாக). ஏன் 96 இழை?

ஷண்ணவதி (96) தர்ப்பணம்: ஒரு வருஷத்தில் 96 முறை செய்ய வேண்டிய தர்ப்பணத்தை நினைவூட்ட.

வேத அத்யயனம் செய்து கொண்டே தான் பூணூல் தயாரிக்க படவேண்டும். பின் மூம்முர்த்திகள், முன்று வேதங்கள் (ரிக் , யஜுர் & ஸாம) & நவ தேவதைகள் ஆவாஹனம் பண்ணி , பின் இதற்கு பாத்தியம் , அர்க்கியம் முதலான சோடசோ உபச்சாரங்கள் செய்வித்து , பின் 108 காயத்ரி ஜபித்து, சூரிய பகவானிடம் பிரார்த்திக்க வேண்டும் தயாரித்த பூணூலை காண்பித்து. இவ்வனைத்தும் ஒரு பூணூல் தயாரிக்கும் வழிமுறை.

யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம்