18. தென்கலை – வடகலை

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பல்வேறு கிரந்தங்கள் கொண்டு வளர்த்தவர் ஸ்ரீவேதாந்த தேசிகர். தம் கிரந்தங்களில், ராமானுஜர் காலத்திற்கு பின் எழுந்தருளியிருந்த ஆசார்யர்களின் நூல்கள் பலவற்றை மேற்கோள் காட்டி சில கருத்து வேற்றுமைகளை தெரிவித்திருக்கிறார்.

இவருக்கு சமகாலத்தில் வாழ்ந்த பிள்ளைலோகாசார்யர், அழகிய மணவாள பெருமாள் நாயனார், நாயனாராச்சான் பிள்ளை ஆகிய மூவரும் இந்த கருத்து வேற்றுமையில் உடன்படாமல் தமக்கு முன்னிருந்த ஆசார்யர்களின் நியமத்தையே கடைப்பிடித்தனர்.

ஸ்ரீவேதாந்த தேசிகர் திருநாட்டை அலங்கரித்ததற்கு அடுத்த ஆண்டில் தோன்றியவரான மணவாள மாமுனிகளும் மேல் குறிப்பிட்டுள்ள தென்னாசார்யர்களின் கருத்துக்களையே நிலைநாட்டி உள்ளார்.

மணவாள மாமுனிகள் காலம் வரையிலும் ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்களிடையே கருத்து வேற்றுமைகள் இருந்தனவேயொழிய, இரண்டு பிரிவுகளோ திருமண் காப்பில் பேதமோ இருக்கவில்லை.

அப்படியென்றால் வடகலை சம்பிரதாயம் எப்பொழுது யாரால் தொடங்கப்பட்டது?

தேசிகரின் சிஷ்யரான பிரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் வழிவந்தவர்கள் மைசூரில் பரகால மடம் எனும் விளங்கும் ஒரு மடத்தின் அதிபதிகளாக இருந்து தேசிகருடைய கருத்துக்களை பரப்பி, தமிழ் நாட்டிலும் முனித்ரய சம்பிரதாயம் எனும் பெயருடன் பரப்பி வருகின்றனர். இவர்கள் தான் வடகலை சம்பிரதாயம் மற்றும் திருமண் காப்பை தோற்றுவித்தனர்.

nm

தற்காலத்தில் வடகலை திருமண் காப்போடு விளங்கும் பல திவ்யதேசங்களும் பூர்வாசார்யர்கள் காலத்தில் தென்கலை சம்பிரதாயம் மற்றும் திருமண் காப்பே நிலவி வந்தது. இவை கடந்த சில நூற்றாண்டுகளிலேயே மாறுதலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளன.

சில முக்கியமான கருத்து வேற்றுமைகளை கோடிட முயன்றுள்ளேன், தவறாக இருப்பின் மன்னித்து தெரியப்படுத்தவும்.

(1)

வடகலை: பெரிய பிராட்டி ஈஷ்வர வகுப்பை சேர்ந்தவள்.

தென்கலை: பெரிய பிராட்டி ஜீவ வகுப்பை சேர்ந்தவள். ஆனாலும் மற்ற ஜீவர்களை காட்டிலும் பல சிறப்புக்கள் உண்டு.

(2)

வடகலை: ஜீவனது முயற்சிகள் அனைத்தும் பரம்பொருளால் தூண்டப்பட்டவையே.

தென்கலை: ஜீவன் தீய காரியங்களை செய்யும் எந்த முயற்சியிலும் பரம்பொருள் தூண்டிவிடுவதேயில்லை. ஜீவன் நற் காரியங்களை செய்யும் எந்த முதல் முயற்சியிலும் தூண்டிவிடுவதேயில்லை, முழு சுதந்திரம் அளித்துவிடுகிறான். இரண்டாவது முயற்சியிலிருந்து ஜீவனின் முதல் முயற்சிக்கு தக்கவாறு பரம்பொருள் தூண்டிவிடுகிறான்.

(3)

வடகலை: ஜீவனது முயற்சியில் சுதந்திரம் இல்லை என்பதால், மோக்ஷத்துக்கான உபாயம் நம்மால் ஆகாது. அது பரம்பொருளால் நிச்சயிக்கப்பட்டது.

தென்கலை: ஜீவனது முதல் முயற்சியில் முழு சுதந்திரம் உண்டு என்பதால், மோக்ஷத்துக்கான உபாயம் நம்மால்.

(4)

வடகலை: ஸ்திரீகளுக்கும், நாலாவது வர்ணத்தவருக்கும் ஓம் என்கிற பிரணவத்தைவிட்டே அஷ்டாக்ஷரம் உபதேசிக்கத்தக்கது.

தென்கலை: பிரணவத்தோடு சேர்ந்த அஷ்டாக்ஷரமே அவர்களுக்கும் உபதேசிக்கத்தக்கது.

(5)

வடகலை: ஆழ்வார்களை போன்ற உத்தம பிரபந்தர்களுக்கும் தாழ்ந்த ஜாதி நீங்காது என்கிறது.

தென்கலை: எம்பெருமானையே உபாயமாக கொண்ட உத்தம பிரபந்தர்களுக்கு தாழ்ந்த ஜாதி நீங்கி விடும். அவர்களை உயர்ந்த ஜாதியினரும் ஆசார்யர்களாக கொள்ளலாம்.

(6)

வடகலை: அடியார்கள் விஷயத்தில் தோஷங்கள் காணாதிருப்பது.

தென்கலை: அடியார்கள் விஷயத்தில் தோஷங்களையே குணமாக கொள்வது.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a comment