35. யக்ஷப்ரச்னம்

 

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்

ved

வசிஷ்டரின்  கொள்ளு பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் புதல்வரும், சுகரின் தந்தையுமான வியாசரை வணங்குகிறேன்.

யக்ஷனுக்கும் தர்ம புத்திரருக்கும் நடந்த சம்பாஷணை. யக்ஷன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி தன் தம்பிகளை மீட்கிறார் தர்ம புத்திரர். 

கேள்விகள் அனைத்தும் யக்ஷன் கேட்கிறார், பதில்கள் அனைத்தும் தர்ம புத்திரர் கூறுகிறார். இது கதை சுருக்கம்.

ஏன், எப்படி & எங்கே இந்த சம்பாஷணை அரங்கேறியது என்று இறுதியில் விவரிக்கிறேன். இப்பொழுது கேள்வி & பதில் மட்டும்.

மொத்தம் 124 கேள்வி பதில்கள்,ஒவ்வொரு கேள்வி பதிலும் மோக்ஷத்துக்கான படிகள். ஸ்ரீ வைஷ்ணவர்கள் இப்படி தான் வாழ வேண்டும் என்று சொல்கிறது. 

1. கேள்வி: எது சூரியனை உதிக்க செய்கிறது?

பதில்: ப்ரஹ்மம் சூரியனை உதிக்க செய்கிறது.

வியாக்கியானம்: ஆத்மாவான சூரியனை, வேதமான ப்ரஹ்மம் ஞானம் பெற செய்கிறது.

கருத்து: நவக்கிரகத்துக்கும் தலைவர் சூரியன். அந்த சூரியனுக்கு தலைவர் நாராயணன். நாராயணன் திருவடி பற்றினால், நவக்கிரகம் அல்ல எண்ணற்ற கிரகங்கள் இருந்தாலும் அண்ட முடியாது.

2. கேள்வி: யார் சூரியனோடு வருகிறார்கள்?

பதில்: தேவர்கள் சூரியனோடு வருகிறார்கள்.

வியாக்கியானம்: சமம் எனும் வெளி இந்த்ரியங்களும் மற்றும் தமம் எனும் உள் எண்ணங்களும் தேவர்களாக, ஆத்மாவோடு வருகிறார்கள்.

கருத்து: சம தமாதிகளை கட்டுக்குள் வைத்தால் ஆத்ம ஞானத்தை அடையலாம்.

3. கேள்வி: எது சூரியனை அஸ்தமிக்க செய்கிறது?

பதில்: தர்மம் சூரியனை அஸ்தமிக்க செய்கிறது.

வியாக்கியானம்: பக்தி எனும் தர்மம் ஆத்மாவை முக்தி பெற செய்கிறது.

கருத்து: பக்தியால் ஜீவாத்மா சரணாகதி அடைந்து மோக்ஷத்தை பெறலாம். மோக்ஷத்தை பெற்றால் பெருமாளின் எண்ணற்ற குணங்களில் 8 கல்யாண குணங்கள் நமக்கு கிடைக்கும். இதுவே சாமியாபத்தி மோக்ஷம்.

  • பாபம் கிடையாது
  • மூப்பு கிடையாது
  • சோகம் கிடையாது
  • தாகம் கிடையாது
  • பசி கிடையாது
  • மரணம் கிடையாது
  • ஜனனம் கிடையாது
  • காரிய சித்தி

4. கேள்வி: சூரியன் யாரிடத்தில் நிலை கொள்கிறான்?

பதில்: சூரியன் சத்யத்தில் நிலை கொள்கிறான்.

வியாக்கியானம்: சத்யம் எனும் ப்ரஹ்மத்தில், ஆத்மா நிலை கொள்கிறது (மோக்ஷத்திற்கு பிறகு உள்ள நிலை இது).

கருத்து: இந்த நிலையை அடைந்தால் இவை கிடைக்கும்

  • சாலோக்கியம் – பகவானும் நாமும் ஒரே லோகத்தில் இருப்போம்
  • சாமிப்யம் – பகவானுக்கு அருகிலே இருப்போம்
  • சாருப்பியம் – பகவான் திருமேனி போலவே சரீரம்
  • சாயுஞ்யம் – பகவான் குணங்களை அனுபவிக்கிறோம்
மேலே கேட்கப்பட்ட கேள்விகளில் சூரியன், ஆத்மாவை குறிக்கிறது.

5. கேள்வி: எதனால் ஒருவன் கற்றவனாகிறான்?

பதில்: சுருதிகளாலேயே ஒருவன் கற்றவனாகிறான்.

வியாக்கியானம்: குருவின் மூலமாக சுருதி எனும் வேதத்தை அத்யயனம் செய்து, அதன் வழிமுறைப்படி வாழ்க்கை நெறியை அமைத்து கொண்டவனே கற்றவனாகிறான்.

கருத்து: கர்மாவையும் வர்ணாசிரம தர்மத்தையும் விடுத்தால் மோக்ஷம் இல்லை. நாம் கண்டிப்பாக தினமும் வேத அத்யயனம் செய்தல் வேண்டும், குறைந்தபட்சம் சந்தியாவந்தனம் செய்தல் வேண்டும்.

சந்தியாவந்தனம் செய்பவர்களே வெகு சொற்பம் இங்கே, நானும் செய்வதில்லை செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் அடியேனுடைய தகப்பனார் ஒரு நாள் விடாமல் இந்த அனுஷ்டானத்தை கடைப்பிடிப்பவர் என்று அவரின் குடையில் நிழல் காண்கிறேன் இந்நாள் வரை. 

6. கேள்வி: எதனால் ஒருவன் மிக பெரிய ஸ்தானத்தை அடைகிறான்?

பதில்: தவத்தினாலே ஒருவன் மிக பெரிய ஸ்தானத்தை அடைகிறான்.

வியாக்கியானம்: கற்ற வேதத்தை மனனம் செய்தால், ஒருவன் மிக பெரிய ஸ்தானத்தை அடைய முடியும். தவம் என்று மேலே குறிப்பிட்டது  வேத மனனத்தை.

கருத்து: நமக்கும் விலங்குக்கும் உள்ள வேற்றுமை மனனம். மனனம் செய்வதால் தான் மனுஷன், விலங்குகளால் மனனம் செய்ய முடியாது.

7. கேள்வி: எது ஒருவனுக்கு துணை நிற்கிறது?

பதில்: தைரியம் ஒருவனுக்கு துணை நிற்கிறது.

வியாக்கியானம்: பகவானை மனதிலே நிலை நிறுத்தினால் அச்சம் ஏது?

கருத்து: பகவானை மனதிலே நிலை நிறுத்தினால், கடவுளே நமக்கு துணையாக நிற்பார். ஆனால் நிலை நிறுத்துவது சுலபமான காரியம் அல்ல. நித்ய அனுஷ்டானமும், பகவத் பிரார்த்தனையும், அவரவர் தர்மத்தை கடைபிடித்தால் சாத்தியம்.

8. கேள்வி: எப்போது ஒருவன் புத்திமான் ஆகிறான்?

பதில்: பெரியவர்களுக்கு சேவை புரிந்தால் ஒருவன் புத்திமான் ஆகிறான்.

வியாக்கியானம்: பகவானுக்கு கைங்கரியம் பண்ணுவதால் அகங்காரமே மேலோங்கும். பாகவத கைங்கரியம் பண்ணினால் தான் பணிவு வரும். பணிவு இல்லாமல் ஒருவன் புத்திமான் ஆக முடியாது.

கருத்துபகவத் கைங்கரியத்தை விட புண்ணியம் பாகவத கைங்கரியம், ஆசார்ய கைங்கரியம் & அதிதி சத்காரம்.

9. கேள்வி: பிராமணருக்கு உயர்ந்த தன்மை எது?

பதில்:  வேத அத்யயனம் பிராமணருக்கு உயர்ந்த தன்மையை அளிக்கிறது.

வியாக்கியானம்:  சத்வ குணம் அதிகரித்தால் உயர்ந்த தன்மையை அடையலாம். வேத அத்யயனம் செய்தால் சத்வ குணமே நிலவும்.

கருத்து:  பிரம்ம ஞானம் பெற்றிருந்தால் தான் பிராமணன், வேதம் கற்கவில்லை என்றால் பிரம்மத்துக்கு அருகிலே கூட செல்ல முடியாது மற்றும் பிராமணன் என்கிற தகுதியை இழக்கிறோம்.

10. கேள்வி: பிராமணர் பின்பற்றதக்கது எது?

பதில்:  வேத மனனமே பிராமணர் பின்பற்றதக்கது.

வியாக்கியானம்:  வேத அர்த்தத்தை புரிந்து கொண்டு தினமும் சிந்தித்தல்.

கருத்து:  வியாசர் – வேத அர்த்தத்தை புரிந்து கொள்ளவே ரிக், யஜுர், சாம & அதர்வன என்று பிரித்தார்.

11. கேள்வி: பிராமணருக்கு மனுஷத்தன்மை எது?

பதில்:  பிராமணருக்கு மரணமே மனுஷத்தன்மை.

வியாக்கியானம்:  தேகமே ஆத்மா என்று நினைத்தால் அதுவே மரணம்,  அதுவே மனுஷத்தன்மை.

கருத்து:  தேகம் வேறு ஆத்மா வேறு என்று உணர்ந்தால் தேவத்துவம், தேகமே ஆத்மா என்று நினைத்தால் மனுஷத்துவம். பாபம் & புண்ணியத்தை அனுபவிக்கவே சரீரம் இது செயற்கை, ஆத்மா இயற்கை.

12. கேள்வி: பிராமணர் விட தக்கது எது?

பதில்: பிரத்தியார் தோஷமே விட தக்கது.

வியாக்கியானம்:  தன்னுடைய தோஷத்தை சொல்லி பிரத்தியார் தோஷத்தை விட வேண்டும்.

கருத்து:  பர நிந்தனை கூடாது. தூய்மையான எண்ணம் மற்றும் வாயிலே இன்சொல் தவிர்த்து பிரத்தியாரை புறம் பேசி வாழ்தல், விட தக்கது. புறம் பேசுதல் வெறும் நேர விரயம், சக்தி விரயம் & பாபம்.

தொடரும்

Leave a comment