03. ஸ்ரீ வரவரமுனி தினசர்யை

எரும்பியப்பா எனும் வைணவர் தன் ஊரான எரும்பியூர் (சோழிங்கர் அருகில் உள்ளது) விட்டு பெரிய கோவில் வந்தடைந்தார் அழகிய மணவாளனை சேவிக்க.

கர்பகிரகத்தில் எம்பெருமானின் திருவடி முதல் திருமுடி வரை சேவிக்க எண்ணி திருவடியில் ஆரம்பித்தவரை அதற்கு மேல் அவரது கண்கள் மேல்நோக்கி எம்பெருமானை சேவிக்கவிடாமல், எம்பெருமானின் திருவடிக்கு கீழே ஓர் காந்தி அவரை கவர்ந்திழுத்தது.

எரும்பியப்பா காந்தி தரும் வதனத்தை நோக்கினார், ஆட்கொள்ளப்பட்டார். அங்கே அழகிய மணவாள மாமுனிகள் அழகிய மணவாளனுக்கு மங்களாசாஸனம் சேவித்து கொண்டிருந்தார்.

அன்றிலிருந்து மாமுனிகளுக்கு எரும்பியப்பா சிஷ்யத்துவம் புரிந்து மாமுனிகளின் அஷ்டதிக்கஜம் எனும் முக்கியமான 8 சிஷ்யர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

அழகிய மணவாளன் ஆணைக்கேற்ப, மாமுனிகள் ஓர் ஆண்டு காலம் த்வய மஹா மந்திரமான மந்திர ரத்தினத்திற்கு வியாக்கியானமான திருவாய்மொழி மற்றும் அதன் வியாக்கியானமான ஓர் ஆண் வழி சம்பிரதாயமாக தன் ஆசார்யர் கொடுத்த ஈடு முப்பத்தி ஆறாயிரத்துக்கும் (நம்பிள்ளை சாதிக்க வடக்கு திருவீதிப்பிள்ளை ஏடு படுத்தினார்) காலஷேபம் அருளினார்.

காலஷேபத்தின் இறுதியில் அழகிய மணவாளனே பாலகனாக வந்து மாமுனிகளிடம் தன்னை சிஷ்யனாக ஸ்வீகரிக்க வேண்டி ஆசார்ய தனியன் துதித்தார் என்பது சரித்திரம்.

ssஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||

இக்காலகட்டத்தில் எரும்பியப்பா மாமுனிகளுக்கு ஆசார்ய நிஷ்டை புரிந்து அவரின் தினசரி அனுஷ்டானங்களை ஆவணம் செய்கிறார் அதுவே ஸ்ரீ வரவரமுனி தினசர்யை.

எரும்பியப்பா இவற்றை மாமுனிகளின் பூர்வ (காலை) மற்றும் உத்தர (மாலை) அனுஷ்டானங்கள் என பிரித்து ஸ்லோகங்களாக சாதித்துள்ளார். ஸ்ரீ வரவரமுனி தினசர்யை சமஸ்க்ருத ஸ்லோகங்கள் அநேக இடங்களில் கிடைக்கிறது, அடியேன் அதற்குள் புகாமல் அர்த்தங்களை மட்டும் இங்கே விண்ணப்பிக்க முயல்கிறேன்.

எரும்பியப்பா இரண்டு காவிரிக்கு நடுவில் ரங்கேச பீடத்தில் சுகமாய் ஜீவித்து வரும் மாமுனிகளின் அழகை இப்படி வர்ணித்து ஆரம்பிக்கிறார்.mm

  • திருமேனி நிறமோ திருப்பாற்கடலின் வெண்மையை மிஞ்சும் வெண்மை, தேஜஸோ குளிர்ந்த தெளிந்த சூரியன்
  • நடையோ கோவிலண்ணன் மற்றும் அப்பன் (சிஷ்யர்கள்) கை பிடித்து மிருதுவாக மேதினியில் அடிவைத்து
  • திருமேனியோ வாடா குறிஞ்சி மலர், அங்கியோ காஷாயம், திருமார்போ விசாலம், புஜங்களோ ஆபரணம்
  • நாபியோ யக்ஞோபவீத்தால் தாமரை தண்டின் நூல்களை போல் வெண்மையான ஒளி
  • திருமார்பிலோ ஊர்த்வபுண்ட்ரம், கழுத்திலோ பட்டு நூல், துளசி & தாமரை மணி மாலைகள்
  • தோள்களிலோ சங்கு சக்ர லட்சிணை, உத்தரீயமோ காஷ்மீரத்து குங்கும பூ நிறம்
  • அதரங்களிலோ த்வயம், மனத்திலோ எம்பெருமானார் (எம்பெருமானின் திருமேனி நம்மாழ்வார், நம்மாழ்வாரின் திருவடிகள் எம்பெருமானார்) அனுசந்தானம்
  • திருமுகமோ தாமரை, திருக்கண்களில் கருணை, அதரங்களில் புன்சிரிப்பு, மொழியில் ஆழ்ந்த அர்த்தமுள்ள மதுர சொற்கள்
  • எண்ணமோ ஜீவாத்மாவை பரமாத்மாவுக்கு தொண்டு புரியவைக்கும்
  • ஸ்வாமித்துவமோ அடியார்களாகிய சொத்தை தானே ரட்சிக்கும்
  • கிருபையோ பிறவி சூழலை அறுத்து எம்பெருமானடி சேர்ப்பிக்கும்

இனி மாமுனிகளின் தினசரி அனுஷ்டானங்களை அனுபவிக்கலாம்

1. பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுந்து எம்பெருமான் தொடக்கமாக ஆசார்யரான திருவாய்மொழி பிள்ளை வரை உள்ள குரு பரம்பரையை தியானிக்கிறார்.

2. பின் ரஹஸ்ய த்ரயத்தின் அர்த்தங்களை தியானிக்கிறார்.

திருமந்திரம் – ஜீவாத்மா(சேஷன்) & பரமாத்மா(சேஷி) ஸ்வரூபம்.
த்வயம் – ஸ்ரீ யுடன் கூடிய எம்பெருமானே உபாயம்.
சரம ஸ்லோகம் – சரணாகதிக்கான ஞானம்.

3. பின்பு எம்பெருமானின் ஐந்து நிலைகளை (பர, வ்யுஹ, விபவ, அந்தர்யாமி & அர்ச்சை) தியானிக்கிறார்.

4. அடுத்ததாக எம்பெருமானாரை மனதில் தியானித்து கொண்டு சூரியோதயத்துக்கு முன் (நான்கு நாழிகைகள்) திருக்காவிரியில் ஸ்நானம் செய்து, தூய வஸ்திரம் தரித்து, ஊர்த்வபுண்ட்ரம் அணிந்து, சந்தியாவந்தனம் செய்கிறார்.

5. பிறகு தனது மடத்திற்குள் (பல்லவராயன் மடம்) எழுந்தருளியிருக்கும் திருவாராதன பெருமாளை(அரங்கநகரப்பன்) வணங்கி தண்டம் சமர்ப்பித்து காலை திருவாராதனம் செய்கிறார்.

6. பின் மடத்தில் திருவாராதன பெருமாளின் சந்நிதிக்கு வெளியே உள்ள தூணின் அடியில் கிழக்கு முகமாய் அமர்ந்து த்வயத்தை ஜபிக்கிறார்.

7. பிறகு சிஷ்யர்கள் பெரிய திருவாராதனத்திற்கு தேவையான வஸ்துக்களை சேகரித்து கொண்டு வருவதை அங்கீகரிக்கிறார்.

8. அடுத்த கிரமமாக தன்னையே உபாயமாக பற்றிய சிஷ்யர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கிறார்.

9. பின் மடத்தில் இருந்து சிஷ்யர்கள் புடைசூழ பெரிய பெருமாளுக்கு மங்களாசாஸனம் சேவிப்பதற்காக நான்முகன் கோட்டை வாயில்(ரங்கா ரங்கா கோபுரம்) வழியாக எழுந்தருள்கிறார்.

10. பின்பு உள் ஆண்டாள், உடையவர், நம்மாழ்வார், பிரணவ விமானம், சேனை முதலி, உள் கருடன் ஆகியோருக்கு தண்டம் சமர்ப்பித்து திருமண தூண்களை அடைந்து பெரிய பெருமாளுக்கு மங்களாசாஸனம் சேவிக்கிறார்.

11. பின் தாயாருக்கும் அடுத்ததாக பரமபதநாதனையும் மங்களாசாஸனம் சேவித்து மடத்துக்கு திரும்புகிறார்.

12. மாமுனிகள் மடத்திற்கு எழுந்தருளியதும் பின்புறம் உள்ள திருவாய்மொழி பிள்ளை கூடத்தில் சிஷ்யர்களுக்கு காலஷேபம் சாதிக்கிறார்.

13. அன்றைய காலஷேபம் முடிந்ததும் மாமுனிகளிடம் சிஷ்யர்கள் பிரார்த்திக்க, எம்பெருமானார் & தன்னுடைய ஆசார்யர் திருவாய்மொழி பிள்ளையின் திருவடிகளாக தன்னை எண்ணிக்கொண்டு ஸ்ரீபாத தீர்த்தம் தந்தருள்கிறார்.

14. பின்பு மாமுனிகள் மாத்யானிக அனுஷ்டானம் முடித்து, மடத்தின் எம்பெருமானான அரங்கநகரப்பனுக்கு பெரிய திருவாராதனம் செய்து பின் பிரசாதத்தை சிஷ்யர்களுக்கு ததீயாராதனம் சாதித்து தானும் ஸ்வீகரிக்கிறார்.

15. பின் மாமுனிகள் ஹ்ருதய கமலத்தில் அந்தர்யாமியாய் சேவை சாதிக்கும் எம்பெருமானை நோக்கி பத்மாசனத்தில் தியானிக்கிறார், தொடர்ந்து எம்பெருமானாரையும் தியானிக்கிறார்.

16. அடுத்ததாக மாமுனிகள் சாயம் சந்தியா காலம் வரை யதிராஜ விம்சதி திவ்ய கிரந்தத்தை  அனுசந்திக்கிறார்.

17. பின் சாயம் சந்தியாவந்தனம் முடித்து அரங்கநகரப்பனுக்கு திருவாராதனம் செய்கிறார்.

18. பின் மாமுனிகள் மடத்தில் உள்ள சிஷ்யர்களுடன் தன்னிச்சையாக அரங்க நிர்வாகத்தை பற்றியும், கிரந்தங்களை பற்றியும் மற்றும் சிஷ்யர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதில் உரைத்து கலந்துரையாடுகிறார்.

19. பின் சிஷ்யர்களால் ஆசார்ய பக்திக்கு பாத்திரமாய் அளிக்கப்பட்ட தர்ப்பம், மான் தோல், பட்டு வஸ்திரம் போடப்பட்ட தங்க ஆசனத்தில் அமர்ந்து பெருமானுக்கு உடுத்தி கலைந்த மாலைகள் சாற்றி கொண்டு எம்பெருமானை தியானிக்கிறார்.

20. பின்பு சிஷ்யர்களுக்கு விடைகொடுத்து திருக்கண் வளர்கிறார்(துயில்).

கோஷ்டி மற்றும் ததீயாராதனையில் ஸ்ரீ வரவரமுனி தினசர்யை சேவிப்பது அநேக திருமாளிகைகளில்/ மடங்களில் வழக்கம். பிரசாதத்திலோ அல்லது மனத்திலோ தெரிந்தோ தெரியாமலோ தோஷம் இருந்தால், மாமுனிகளை அனுபவித்தாலே நிவர்த்தியாகும் என்பது ஆசார்ய நியமனம்.

மாமுனிகளின் அடியார்களான நாமும் இவற்றை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எரும்பியப்பா ஸ்ரீ வரவரமுனி தினசர்யை எனும் இந்நூலை ஏடு படுத்தியிருக்கிறார்.

அடியார்கள் வாழ,

அரங்க நகர் வாழ,

சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,

கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ,

மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண்டிரும்.

எரும்பியப்பா திருவடிகளே சரணம்! வரவரமுனி திருவடிகளே சரணம்! எம்பெருமானார்  திருவடிகளே சரணம்!

Leave a comment