04. யாக்ஞவல்க்யர்

காலம்: த்ரேதா யுகம் 
இடம்: அசோகவனம்

சிறு குரங்கு அருகில் வந்து வணங்குவதை கண்ட சீதாப்பிராட்டி, தன்னை பணிய வைக்க இதுவும் இலங்கேஷ்வரனின் சித்து விளையாட்டே என்று ஆணித்தரமாக நம்பினாள்.

சீதையின் வதனத்தில் சந்தேக சாயலை உணர்ந்து கொண்ட குரங்கு, தன் பெயர் அனுமன் என்றும், மற்ற குல கோத்திர விவரங்களை கூறியது. ஆகினும் சீதைக்கு நம்பிக்கை உண்டாகவில்லை, காரணம் ஒன்பது மாதங்களாக இலங்கேஷ்வரன் செய்த சித்து விளையாட்டுக்கள்.

அனுமன் சற்று தன்னை பெருக்கி கொண்டு “அடியேன் இராமதூதன்” வந்திருக்கிறேன் தாயே என்றார், நம்பிக்கை பிறக்கவில்லை. மீண்டும் “அடியேன் இராமபக்தன்” வந்திருக்கிறேன் தாயே என்றார், நம்பிக்கை பிறக்கவில்லை.

அனுமன் இறுதியாக கணையாழி ஒன்றை நீட்டினார், அதை கண்டதும் சீதைக்கு சந்தேகம் என்ற சொல் மறந்துபோயிற்று. நம்பிக்கை மட்டுமே இருந்தது, தன் பதியான இராமனை கணையாழியில் கண்டாள்.skஅனுமன் ஆச்சரியத்துடன் கணையாழியை மற்றும் நம்பினீர்கள், இது இலங்கேஷ்வரனின் சதி இல்லை என்று எவ்வாறு தீர்மானித்தீர்கள் தாயே? உங்களது பதியின் முகம் இதில் தெரிந்ததாலோ என்று வினவினார். அதற்கு சீதை தனக்கும், தன்னவருக்கும், தன் தந்தையாருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் இந்த கணையாழி என்றார்.

பிரம்ம ரிஷியான யாக்ஞவல்க்யர் யோக பலத்தால் உருவாக்கிய கணையாழியே அது, அவரே இந்த விடயத்தின் நாயகன்.

இடம்: மிதிலை (நேபாளம்) 

ராஜரிஷியான மிதிலையின் அரசர் ஜனகர் அழைத்ததன் பொருட்டு மகா யக்ஞத்தில் கலந்து கொள்ள திரளான ஞானிகள் அரண்மனையில் குழுமியிருந்தனர். ஆனால் ஜனகரின் நோக்கமோ அந்த குழுமத்தில் தனக்கான குருவை தேர்ந்தெடுப்பது.yagyamஜனகரே ராஜரிஷி ஆகையால் தனக்கான குரு, ஞானிகளுக்கு எல்லாம் ஞானியாய் பிரம்மஞானியாக இருத்தல் வேண்டும் என சாதுரியமாக செயல் புரிந்தார். 

யக்ஞத்துக்கு ஆயிரம் பசுக்களை தருவித்தார். ஞானிகள் குழுமத்தில் யார் மிக சிறந்த பிரம்மஞானியோ அவர் ஆயிரம் பசுக்களை ஒட்டி செல்லலாம் என்று வேண்டிக்கொண்டார்.

யாக்ஞவல்க்யர் எழுந்தார், தன் சீடர்களை கூப்பிட்டு பசுக்களை ஓட்டிப்போக சொன்னார். மற்றோர் முகத்தில் ஆச்சர்யம், குழப்பம், கோபம், தங்களை எல்லாம் விட மிக சிறந்த பிரம்மஞானியோ இவர் என்று.rsஇதை அரசவையில் இருந்த சிற்றரசன் மித்திரன் என்பவன் கேட்டேவிட்டான் யாக்ஞவல்க்யரிடம். மற்றோறை காட்டிலும் சிறந்த பிரம்மஞானியோ நீர்? எவ்வாறு என்று உரைத்தால் இந்த சபைக்கு உசிதமாக இருக்கும் என்று வினவினான்.

நான் தான் சிறந்த பிரம்மஞானி என்று சொல்லவில்லையே என யாக்ஞவல்க்யர் கூற, பின் ஏன் பசுக்களை ஓட்டி செல்கிறீர் என்று மித்திரன் வினவ, யாக்ஞவல்க்யர் நகைத்து கொண்டே “எந்த ஞானியாவது தானே சிறந்த ஞானி என்று பிரகடனப்படுத்தி கொள்வாரா, அப்படி செய்தால் அவர் ஞானியே கிடையாது. ஆகையால் இந்த கூட்டத்தில் உள்ள யாரும் முன் வந்து தானே சிறந்த பிரம்மஞானி என்று கூறப்போவது கிடையாது” என கூறினார்.

பின்னே நீர் வந்தீரே என்று மித்திரன் மீண்டும் கேட்க, எனது யாகசாலைக்கு பசுக்கள் தேவை அதனால் ஓட்டி செல்கிறேன் என்றார் யாக்ஞவல்க்யர். ஜனகர் யாக்ஞவல்க்யரே தன் குரு என தீர்மானித்து அனைத்தையும் மௌனமாக பார்த்து கொண்டிருந்தார்.

யாக்ஞவல்க்யர் சபையோரிடம் விடைபெற்று கொண்டு கிளம்புகையில், கார்கி எனும் பெண் துறவி முன் வந்து தான் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு ஆயிரம் பசுக்களை ஓட்டி செல்லுங்கள் என கூறினார். சரி என்று யாக்ஞவல்க்யர் ஆமோதித்தார்.

“பூமி எதனால் நிரம்பியது?”
“நீரால்”

“நீர் எதனால் நிரம்பியது?”
“காற்றால்”

“காற்று எதனால் நிரம்பியது?”
“ஆகாயத்தால்”

“ஆகாயம் எதனால் நிரம்பியது?”
“சூரியனால்”

“சூரியன் எதனால் நிரம்பியது?”
“நட்சத்திரங்களால்”

இப்படியே ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் உரைத்து இறுதியில் அனைத்தும் பிரம்மத்திடமே நிறைகிறது என்று முடித்தார். அனைத்து ஞானிகளும் யாக்ஞவல்க்யரின் ஞானத்தை கண்டு மெச்சினர்.

மித்திரனின் மகளும்/இளவரசியும்/பரம ஞானியுமான மைத்ரேயி, யாக்ஞவல்க்யரின் ஞானத்தால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சத்சிஷ்யையாக சேர வேண்டும் என தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்தாள்.

அதற்கு மித்திரனோ, ஒரு புருஷனிடம் ஸ்திரீ உறவில்லாமல் சிஷ்யத்துவம் புரியமுடியாது என உரைத்து, அவரை மணந்து பணிவிடை செய்து வேண்டிய ஞானத்தை பெறுவாயாக என பணித்தார்.

யாக்ஞவல்க்யர் தானமாக ஆயிரம் பசுக்கள், சிஷ்யனாக ஜனகர், துணைவியாக மைத்ரேயியை பெற்றார்.

காலங்கள் ஓடின, ஜனகர் யாக்ஞவல்க்யரிடம் சத்விஷயங்களை கற்று தேர்ந்தார். ஜனகரை பரீட்சிக்க எண்ணி தன் யோக பலத்தால் மிதிலையே தீ தீண்டி எரிவது போல் சிருஷ்டித்தார். 

ஜனகர் அமைதியாக அமர்ந்திருப்பதை கண்ட யாக்ஞவல்க்யர், உன் தேசமே பற்றி எரிகிறது, ராஜாவான நீயோ அமைதியாக இருக்கிறாய் என்று கேட்க “என் சரீரமே அநித்தியம், இதில் தேசமாவது, பதவியாவது” என்று ஜனகர் பதில் உரைக்க, யாக்ஞவல்க்யர் மெய் சிலிர்த்து போனார்.

குரு என்றால் யாக்ஞவல்க்யர், சிஷ்யன் என்றால் ஜனகர் எனும் பதம் யுகங்களை கடந்து நிற்கிறது. யாக்ஞவல்க்யர் அனைத்தையும் துறந்து சந்நியாசம் பெற எண்ணினார், இதனை அறிந்த ஜனகர் மிகுந்த துயருற்றார்.

ஆத்ம சிஷ்யனான ஜனகருக்கு பரிசாக ஒரு கணையாழியை தந்து, தன் நினைவு வரும் போதெல்லாம் அதை பார்த்தால் நான் பிரத்தியக்ஷம் ஆவேன் என்று நல்கினார். 

ஜனகரோ கணையாழியில் யாரை நினைக்கிறோமோ அவர்கள் தெரிய வேண்டும் என வேண்டினார். யாக்ஞவல்க்யரும் யோக பலம் கொண்டு அவரது ஆசையை நிறைவேற்றினார்.

இக்கணையாழியே இராமர் சீதா கல்யாணத்தின் போது ஜனகர் இராமருக்கு சீர்ராக அணிவித்தார். அதுவே அனுமனின் தூதுக்கு ஆதாரமாக அமைந்தது.

துறவறம் மேற்கொள்ள தன்னிடம் உள்ள அனைத்தையும் யாக்ஞவல்க்யர் சரி பாதியாக பிரித்து இரு மனைவியர்களான காத்யாயனிக்கும்,  மைத்ரேயிக்கும் தர விரும்பினார்.

ஞானியான மைத்ரேயி இதற்கு உடன்படாமல், தானும் துறவறம் மேற்கொண்டு பிரம்மத்தை அடைய விரும்புவதாக தெரிவிக்க, யாக்ஞவல்க்யரும் அகமகிழ்ந்து சம்மதித்தார்.ygkயாக்ஞவல்க்யர் பிரம்மத்தை அடைவதற்கு இடர் செய்யாமல் த்ரேதா யுகத்தில் விட்டு அவரை துவாபர யுகத்தில் பிடிப்போம் அன்பர்களே. 

தொடரும்

Leave a comment