42. கைவல்யம்

கைவல்யம் – நம் சம்பிரதாயத்தில் ஏற்று கொள்ளப்படாத ஒரு நிலையை பற்றிய பதிவு.

இந்நிலையில் கலக்காதீர் என்று ஆழ்வார் & ஆச்சார்யர்கள் திவ்ய பிரபந்தத்திலும் மற்றும் கிரந்தங்களிலும் அறுதியிட்டுள்ளனர்.

ஆத்மாவை மூன்று வகையாக கொள்வோம்.

  1. ஐஸ்வர்யார்த்தி
  2. கைவல்யார்த்தி
  3. பகவல்லாபார்த்தி

ஐஸ்வர்யார்த்தி வேறாரும் அல்லர், லோக இன்பங்களுக்கு ஆசைப்பட்டு இங்கே மீண்டும் மீண்டும் ஜனிக்கிறோமே, நாம் தான்.

பகவல்லாபார்த்தி அர்ச்சிராதி வழியாக விரஜையில் நீராடி வைகுண்டத்தை அடைகிறவர்களான முமுக்ஷுக்கள். அங்கே சென்று ஆனந்தமாக பகவானுக்கு சேஷனாகிறவர்கள் . விரஜையை கடந்து அப்ராக்ருத மண்டலத்துக்குள் சென்றவர்கள் திரும்புவதில்லை.

கைவல்யார்த்தி தனிமையில் தன்னை (ஆத்மாவை) தானே அனுபவிப்பவர்கள், இந்நிலையே கைவல்யம் (கேவலம்). இவர்களுக்கு பூலோகமும் வேண்டாம் வைகுண்டமும் வேண்டாம்.

இவன் இந்த நிலையை எப்படி அடைகிறான், இவன் கதை என்ன? வாருங்கள் சுருக்கமாக பார்ப்போம்.

கைவல்யம் ஒரு முழுமை பெறாத முக்தி நிலை. ஆத்மா கைவல்ய முக்தியடைந்து கைவல்யார்த்தி ஆகிவிட்டால் மீண்டும் திரும்ப இயலாது.

இந்த நிலையை கீழாக கருதுகிறார்கள் நம் சம்பிரதாயத்தவர்கள், ஏனென்றால் இன்றைய ஐஸ்வர்யார்த்தி நாளைய பகவல்லாபார்த்தி ஆகலாம். ஆனால் கைவல்யார்த்தியோ திரும்ப இயலாதென தெரிந்தும் பகவானை தவிர்த்து தன்னை சுகித்து அல்பனாகிறான்.

கைவல்யார்த்தி ஏன் திரும்ப முடியாது? இவன் தான் வைகுண்டம் அடையவில்லையே, அதை தவிர திரும்ப முடியா இடம் ஏதேனும் உள்ளதோ?

கைவல்யார்த்திகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பமாக இருக்கலாம், ஐஸ்வர்யார்த்தி & பகவல்லாபார்த்தி ஒப்பீடுகையில். அதுவும் கலியில் அரிதிலும் அரிது.

நம்மை போல் பிறப்பு-இறப்பு சுழற்சியில் சிக்கி, இன்ப துன்பங்களை அனுபவித்து போதும் இந்த பயணம் என்று முடிவு கொள்கிறான்.

ஞான மார்கத்தை பற்றி ஆத்மா கைவல்யத்தை அடைகிறான், கர்ம & பக்தியை விடுத்து.

இதற்காக இவன் எடுக்கும் முயற்சி அவ்வளவு கடினம்.சுலபமான வழியை விடுத்து மிக கஷ்டமான வழியில் பயணித்து கீழான பதவியை பெறுகிறான். பேரானந்தம் ஒன்றே குறிக்கோள், ஆனால் இவனது பேரானந்தம் இவனே பிரம்மம் அல்ல.

இவன் கைவல்யம் அடைவதற்கு பிரம்மத்தை கருவியாக கொள்கிறான்.

ஆத்மா ஒன்றே சுகம் என்று பிறவியை அறுப்பதற்காக காட்டிற்கு சென்று தனியாக தவம் கொள்கிறான். இத்தனிமையே கைவல்யத்துக்கான முதல் படி.

கைவல்யமோ தனிமையில் சுகித்திரு, வைகுண்டமோ கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

இவனது மனதில் யாருக்கும் இடமில்லை இவன் ஒன்றே உள்ளான். காட்டில் கிடைத்ததை உண்டு கழிக்கிறான், ஏதும் இல்லா நேரத்தில் தேகத்தை புசிக்கிறான். தேகம் போகிறதே என்று வருந்துவதில்லை, பசி தணிந்து ஆத்மா ஆனந்தம் அடைந்ததை எண்ணி தேறுகிறான்.

ஆத்ம ஞானத்தை பெறுகிறான் பகவன் ஞானத்தை தவிர்க்கிறான், அதுவும் பகவன் சங்கல்பம் என்று கொள்ளலாம். பகவானிடம் யாசித்து பெறுகிறான் கைவல்ய பதத்தை.

இப்படி கைவல்ய ப்ராப்தி பெற்ற ஆத்மா எங்கே செல்கிறது அல்லது இருக்கிறது? வேறெங்கே விரஜைக்கும் வைகுண்டத்திற்கும் நடுவில் உள்ள கரையில் தான்.

அன்பர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் ஏன் கைவல்யார்த்திகளும் திரும்புவதில்லை என. இவன் விரஜையை அர்ச்சிராதி வழியாக அடைவதில்லை , வேறென்ன மார்க்கம் என்று அடியேன் அறியேன்.

இவன் வைகுண்டம் புகாமல், அசரீரியாக ஆத்ம ஞானம் மற்றும் ஆனந்தம் கொண்டு தனிமையில் கைவல்ய கோஷ்டியில் கலக்கிறான்.

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து

கூடு மனம் உடைஈர்கள் வந்து வரம் பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று

பாடு மனம் உடை பத்தர் உள்ளீர் ! வந்து பல்லாண்டு கூறுமினே