ஒரு முறை பெரும் பண்டிதர் ஒருவர் ஆழ்வானை சந்தித்து சில க்ரந்தத்தின் அர்த்தங்களை தனக்கு காலஷேபம் புரிய வேண்டும் என்றும் ஆனால் பிறர் அறியாவண்ணம் நடக்க விண்ணப்பித்தார். மற்றோருக்கு இது தெரிந்தால் தன் பாண்டித்யத்துக்கு ஓர் மாசு என கருதினார் பண்டிதர்.
ஆழ்வானும் ஒப்பு கொண்டு ஏகாந்தமாய் பண்டிதருக்கு அர்த்தங்களை உரைக்க, வேறு இருவர் வருவதை கண்டதும், தான் பண்டிதரிடம் அர்த்தங்களை கேட்பது போல் மாறி நின்றாராம் தன்னை தாழ்த்திக்கொண்டு. எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம் எழுத உறுதுணையாக இருந்த ஆழ்வான், பார்த்தனுக்கு சாரதியாய் தன் பெருமைகளை மறைத்து தாழ்த்தி நின்ற கிருஷ்ண பரமாத்மாவை போல் நின்றார் ஆழ்வான் என்கிறது ஒரு குறிப்பு. வித்யா கர்வம் துளியும் இல்லாதவர் ஆழ்வான்.
(*)
சோழபுரத்தில் வாழ்ந்த ஸ்ரீ வைஷ்ணவரின் புதல்வன் பௌத்த துறவிகளுடன் சேர்ந்து தன் சிகையை மழித்து, பூணூல் அறுத்து தன் தந்தை எவ்வளவோ கெஞ்சியும் பௌத்த துறவியாக மாறி போனான்.
புதல்வன் சில காலம் கழித்து வைணவனாக மீண்டும் மாறி குடுமி வைத்து யக்யோபவீதம் முடித்து திரும்பி அகத்துக்கு வருவதை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர், ஆழ்வானை கண்டாயோ? கரை தேர்ந்தாயோ? என்று வினவ ஆம் என்று பதில் உரைத்தானாம் புதல்வன். ஆழ்வானை கண்ட மாத்திரத்திலேயே கரை ஏறிவிடுவோம் என்கிறது இக்குறிப்பு.
(*)
ஓர் சமயம் ஆழ்வான் காலஷேபமாக பெருமாளின் கல்யாண குணங்களை கூறி கொண்டிருந்தார், இதை சிஷ்யர்களில் ஒருவரான பிள்ளை உறங்காவில்லி தாசர் கேட்டு பக்தியில் ஆழங்கால்பட்டு விசும்பி கண்ணீர் வடித்தாராம். இதனை கண்ட ஆழ்வான் நீர் அல்லவோ ஜன்மம், அடியேனுக்கு உம்மை போல் பக்தி கொள்ளவில்லயே என்று வருந்தினார் என்கிறது ஓர் குறிப்பு.
பிள்ளை உறங்காவில்லி தாசர் சரித்திரம் அநேகருக்கும் தெரிந்திருக்கும், நான்காம் வர்ணத்தை சேர்ந்தவர், பெண்டாட்டி தாஸனாக இருந்து பின் எம்பெருமானாரால் திருத்தி ஆட்கொள்ளப்பட்டு அரங்கனின் கண்களை தவிர வேறெந்த கண்களையும் காணாது இருந்து ஆழ்வானை ஆஸ்ரயித்து கொண்டார்.
(*)
திருக்கோட்டியூர் நம்பியால் கிடாம்பி ஆச்சான் எம்பெருமானார் திருமடப்பள்ளியில் கைங்கர்ய பரனாக நியமிக்கப்பட்டிருந்தார். எம்பெருமானாருக்கு எதிரிகளால் ஆபத்து மற்றும் அவருக்கு விஷம் கலந்த அமுது பரிமாறப்பட்டது என்பதை அறிந்து பிரத்யேகமாக கிடாம்பி ஆச்சான் நியமனம்.
ஓர் முறை அமுதுக்கான காலம் கடந்தும் கிடாம்பி ஆச்சானை காணவில்லை, வெகு நேரம் கழித்தே அவர் மடத்தை அடைந்து எம்பெருமானாரிடம் மன்னிக்க வேண்டினார்.
ஏன் தாமதம் என எம்பெருமானார் வினவ, ஆழ்வானின் திருவாய்மொழி வியாக்கியானம் கேட்க சென்றதால் தாமதம் என்று கூற, பாசுரம் என்னவோ என்று எம்பெருமானார் மறுபடியும் வினவ, காலஷேபம் நடக்கவில்லை என பதிலளித்தார் கிடாம்பி ஆச்சான்.
மேலும் ஆழ்வான் *உயர்வற என ஆரம்பித்து , பின்னர் பெருமாளின் மேல் நம்மாழ்வார் கொண்ட பக்தி பாவத்தை அடியேனால் எப்படி விவரிக்க முடியும், தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அழுகிறார். இதே போல் பல தடவை ஆகி காலஷேபம் நடக்கவில்லை என்று கூறினார் கிடாம்பி ஆச்சான்.
ஆழ்வானின் ஆசார்ய பக்தியை கண்டு எம்பெருமானார் மெய் சிலிர்த்தார் என்கிறது இக்குறிப்பு.
(*)
திருக்கோட்டியூர் நம்பி திருவரங்கம் எழுந்தருளி சரம ஸ்லோகத்தில் உள்ள ஏக ஷப்த அர்த்தத்தை எம்பெருமானாருக்கு ஏகாந்தமாய் உபதேசித்து, இதனை அவா உள்ளோருக்கு கூட போதிக்காதே என்று ஆணையிட்டிருந்தார்.
எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற்ற அடுத்த நொடி உச்சி வெயில் பாராது ஆழ்வான் திருமாளிகை சென்று அவருக்கு ஏக ஷப்த உபதேசத்தை சொல்லியுள்ளார் என்கிறது ஓர் குறிப்பு.
ஆழ்வான் இல்லாமல் எம்பெருமானார் இல்லை, எம்பெருமானார் இல்லாமல் ஆழ்வான் இல்லை.
(*)
ஆழ்வானின் திருக்குமாரர்கள் (பராசர பட்டர் & வேதவியாசர்/ ஸ்ரீராம பிள்ளை) அவதரித்த பொழுது எம்பார் த்வய ப்ரகரணம் செய்து, எம்பெருமானார் குழந்தைகளின் தேஜஸை கண்டு அகமகிழ்ந்து எம்பார் ஆசார்யனாக இருந்து குழந்தைகளை ரக்ஷிக்கட்டும் என்று ஆசீர்வதித்தார்.பிள்ளைகள் வளர்ந்ததும் ஓர் சமயம் ஆழ்வான் திருமந்திரத்தின் அர்த்தத்தை உபதேசிக்க ஆரம்பித்து, பின் ஆசார்யன் தான் போதிக்க வேண்டும் என்று உணர்ந்து பிள்ளைகளை எம்பார் திருமாளிகைக்கு செல்லுமாறு பணித்தார்.
போகின்ற குமாரர்களை திரும்ப அழைத்து, இந்த ஜன்மம் அநித்யம், மின்னல் போல் ஆத்மா சரீரத்தை விட்டு அகலும், நம்மால் ஆவதற்கு எதுவும் இல்லை அனைத்தும் பகவான் சங்கல்பம் கொண்டே நடக்கிறது என்று கூறி திருமந்திரத்தின் அர்த்தத்தை ஆழ்வானே உபதேசித்தாராம்.
(*)
ஒரு முறை ஆழ்வான் கைங்கரியத்துக்காக கானகம் வழியாக சென்று கொண்டிருக்கையில், சர்ப்பம் தவளையை விழுங்கும் காட்சியை கண்டு தவளையின் ஓல குரலை கேட்டு மயங்கி விழுந்தாராம். இதன் மூலம் அவரின் ஜீவ காருண்யம் வெளிப்படுகிறது என்கிறது இக்குறிப்பு.
(*)
அரங்கமாநகர் சுபிக்ஷமாக இருக்க வேண்டி மந்திர நீர் மற்றும் திருமண்னை ஊரை சுற்றி தெளித்து வர ஒருவர் தேவை, அவர் என் பின்னே வரவேண்டும், எளிமையானவராக, உயர்ந்த பண்புகள் நிறைந்தவராக இருத்தல் வேண்டும் என பெரிய நம்பி கேட்க, எம்பெருமானார் சற்றும் சிந்திக்காமல் ஆழ்வானை அனுப்பி வைத்தாராம்.
(*)
ஒரு சமயம் மாற்று திறனாளியின் வேண்டுதலுக்கு இசைந்து எம்பெருமானார் அவரின் திருவடியை அவனது சிரசில் வைத்தாராம். இதை கண்ட ஆழ்வான் அடியேனுக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே, எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை சிரசில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்? என மிகவும் வருந்தி அழுதாராம்.
அடுத்த பக்கம்