பாகம் 6 – திருச்சுற்று
சுக்ல பட்சத்து முழுநிலவு திருவரங்கத்தை பகல் போல் ஆக்கியது. இரண்டாம் ஜாமம் முடிவுற்றது என்று உறுதி செய்து கொண்ட பின் பெரிய நம்பி அகத்திலிருந்து புறப்பட எத்தனித்தார்.
அத்துழாய் மோரில் கலந்த அடிசிலை கொடுக்க விரைவாக பருகி விட்டு வெளியேறினார். திருவிக்ரமன் திருச்சுற்று ஆள் அரவமற்று இருந்தது, அதை தான் பெரிய நம்பியும் விரும்பினார்.
அவரின் கால்கள் தன்னை எவரும் பார்க்கும் முன் ராஜ மகேந்திரன் திருச்சுற்றை அடைய வேண்டும் என்று துரித நடை போட்டு கொண்டிருந்தது. மனமோ மற்றோர் வந்திருப்பார்களா என கேள்வி கேட்டது.
(குறிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகள் கதை நிகழ்ந்த காலத்தில் இருந்ததில்லை)
கச்சத்தில் ஓலை சுருள் சொருகி இருந்தது, நாழிகை கேட்டான் வாயிலை கடந்து உள்ளே சென்றார் பெரிய நம்பி. அங்கே அவர் எதிர்பார்த்த மூவரும் மரப்பலகையில் மௌனமே உருவாய் அமர்ந்து இருந்தனர்.
அனைவரையும் பார்வையால் உபசரித்து விட்டு முதன்மையாக போடப்பட்ட பலகையில் போய் அமர்ந்து சற்று ஆசுவாச படுத்திக்கொண்டார்.
மற்ற மூவரும் காலியாக கிடந்த கடைசி பலகையை பார்க்க, அதன் குறிப்பறிந்து பெரிய நம்பி கச்சத்தில் இருந்த ஓலை சுருளை எடுத்து தரையில் வைத்தார். அனைவரும் புரிந்ததற்கு அடையாளமாக ஒரு சேர பெருமூச்சு விட்டனர். அவர்களது முகம் சோபை இழந்து காணப்பட்டது.
நடுநாயகமாக போடப்பட்ட சந்தன மர ஆசனத்தில் ஆளவந்தார் மண் சிலையாய் தெய்வீகமாக காட்சி தந்தார். நால்வரும் ஆசார்யரை பார்த்து ஆத்மார்த்தமாக தியானித்து கொண்டிருந்தனர்.
சிறிது நாழிகை கழிந்த பின், நால்வருக்கும் ஒரு சேர தோன்றிய ஒன்று மாறனேரி நம்பி.
காரணம், ஆளவந்தார் மண் சிலையை சிருஷ்டித்தவர் மாறனேரி நம்பி.
மாறனேரி நம்பி ஆளவந்தார் சிலையை தன் அகத்தில் வைத்து தான் வழிபட்டு வந்தார். பெரிய நம்பி பிறகு அவரிடம் இருந்து பெற்று போற்றி வந்தார். இது நடந்தது ஆளவந்தார் காலத்தின் போதே.
(குறிப்பு: ராமானுஜர் காலத்திற்கு முன் பெருமாள் பிராட்டி தவிர்த்து வேறொருவருக்கு அர்ச்சா / விக்ரஹ வழிபாடு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் வெகு சொற்பமே. இன்று காணும் ஏறத்தாழ அனைத்து ஆழ்வார் ஆசார்ய அர்ச்சா / விக்ரஹ வழிபாடு ராமானுஜர் காலத்திற்கு பின் ஏற்பட்டதே.)
மாறனேரி நம்பி நினைவு வரவே, பெரிய நம்பி ஓலை சுருளை பிரித்து உரக்க அனைவருக்கும் கேட்கும் விதம் முதல் வாக்கியத்தை வாசித்தார்.
திருக்கோட்டியூரான், பெரிய திருமலை மற்றும் திருமாலையாண்டானுக்கு மாறனேரியின் விண்ணப்பம்.
மூவர் முகத்திலும் கேள்விக்குறி, பெரிய நம்பியின் திருநாமம் இடம்பெறாதது ஏன்?
தொடரும்