பாகம் 12 – சமய மோதல்
திருவரங்கத்தின் நிலையை அரிய சோழ பிரதிநிதியை சோழபுரம் வர ஆணை பிறபித்து இருந்தான் மன்னன். இதனால் மனக்கலக்கம் கொண்ட பிரதிநிதி, இரவு சபையை கூட்டி கலந்தாலோசித்து முடிவு காண முயன்றான்.
பிரதிநிதியின் கோபம் முழுமையாக பெரிய நம்பியிடமும், வைணவத்தின் மீதும் படர்ந்து இருப்பதை உணர்ந்தனர் சபையில் உள்ள அனைவரும்.
வைணவத்தின் பால் பற்று கொண்டவர்களும் அங்கே இருக்கத்தான் செய்தனர். பிரதிநிதியின் குணம் தெரிந்தமையால், பார்வைக்கு நீர்மயமாக தோன்றினும் உள்ளுக்குள் அக்னி ஜுவாலை எரிந்து கொண்டிருந்தது அவர்களுக்கு.
பிரதிநிதியால், பெரிய நம்பி மற்றும் இதர வைணவ சமய குருக்களை திருவரங்கத்திற்கு சென்று சந்தித்தும் பயன் ஏதும் பெற மூடியவில்லை என்கிற இயலாமை தான் வெளிப்பட்டு கொண்டிருந்தது அங்கே.
தம்மால் எந்த தகவலையும் சேகரிக்க முடியாமல் தோல்வி முகத்துடன் அன்று நாழிகை கேட்டான் வாயிலை கடந்து வருகையில், கிடாம்பியின் வெற்றி புன்னகை பிரதிநிதிக்கு மேலும் அவமானத்தை தந்ததாய் தோன்றிற்று.
ஆகையால் படை வீரர்களை புராந்தகம் சென்று மாறனேரியிடம் விசாரிக்கவும் கட்டளை பிறப்பித்து இருந்தார். சென்றவர்கள் இன்றோ நாளையோ தேவையான தகவல்களுடன் வரக்கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த தருணத்தில் மன்னரை தான் எப்படி எதிர்நோக்குவது, அவர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன விடை கூறுவது என்று சபையிடம் விவாதித்து கொண்டிருந்தார் பிரதிநிதி.
அரசர் செய்த பிழையினால் தான் வைணவம் தலை தூக்கிற்று, அன்று அவரிடம் எவ்வளவோ எடுத்து கூறியும் கேட்காமல் தும்பை விடுத்து, இப்பொழுது வாலை பிடிக்க முயற்சிக்கிறார்.
சைவத்தை தவிர வேற்று மதம் வேறுன்ற கூடாது என்று ஒரு கூட்டம் இருந்தால், அதற்கு தலைவர் நம் பிரதிநிதி தான் என்று சபையில் சிலர் முணுமுணுப்பதை கேட்க முடிந்தது நம்மால். ஆனால் மன்னர் அப்படி இருக்க முடியாதே, பிரஜைகள் அனைவரையும் அரவணைத்து தானே ஆள முடியும் என்றார் ஒருவர்.
நீங்கள் தனியே பேசி கொண்டிருப்பதற்காக சபை கூடவில்லை, யாருக்கேனும் சந்தேகமோ, வினாவோ எழுந்தால் தைரியமாக சொல்லலாம் என்று பொறுமை இழந்து கத்தினார் பிரதிநிதி.
உடன் ஒரு வைணவ அதிகாரி எழுந்து சபையை வணங்கி தனது ஐயத்தை முறையிட்டார்.
பிரதிநிதி அவர்கள் வைணவத்தின் மீது கொண்ட காழ்புணர்ச்சியால் நிதானம் இழந்து பேசி வருகிறீர். இதே போல் சைவத்தை எவரும் பழித்து கூறினால் சோழ அரசரோ, பிரதிநிதியோ அளவளாவி கொண்டிருப்பீர்களா என்று சபைக்கு தெரிய படுத்தவும் என முடித்தார். அவருக்கு உறுதுணையாக மற்ற வைணவ அதிகாரிகள் இதை கேட்டு ஆர்ப்பரித்தனர்.
பிரதிநிதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, சைவ அதிகாரிகளுக்கும் இது பேரதிர்ச்சியாக தான் இருந்தது. சைவ அதிகாரிகள் பதிலுக்கு எதிர்ப்பை காட்ட துவங்கினர். பெரும் வாக்குவாதம் வெடிக்க துவங்கியது, பிரதிநிதி இரு தரப்பையும் அமைதி படுத்தும் முயற்சியில் இறங்கினார்.
சலசலப்பு அடங்க சிறிது நாழிகை பிடித்தது. பிரதிநிதி மெதுவாக பேச்சை தொடர்ந்தார், அவரது தொனி சைவத்தை ஆதரிக்கும் விதமாய், சோழ அரசர் நினைத்து இருந்தால் வைணவமே இன்று இங்கு இருந்திருக்காது என்றார்.
எங்கள் ஆசார்யர் நாதமுனிகள் நினைத்து இருந்தால் இந்த சோழ அரசே இருந்திருக்காது. சோழ அரசை எதிர்க்கும் துணிவும் ஒருவனுக்கு உண்டோ. பதில் வந்த திசையை நோக்கி அனைவரும் திடுக்குற்று திரும்பினர்.
நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் துலங்க கம்பீரமாய் நின்றிருந்தான் பெரிய நம்பியின் சீடன் திருவரங்கன்.
தொடரும்