39. திருமலை களவு

மார்கழி தொடக்கம் அன்று, பாவைகள் நோன்பிருந்து திருப்பாவை சாற்றி ஆண்டாளாகவே தங்களை பாவித்தனர் கண்ணனை துதிப்பாடி.andalநிகழ்ந்திருக்கும் விபரீதத்தை அறிந்ததனாலோ என்னவோ, வேங்கடவனை சேவிக்க சூரியதேவனுக்கு அச்சம் என்பது போல் திருமலை அன்று மூடுபனியில் ஆழ்ந்திருந்தது.

இரு நாழிகையாக அழுது அழுது அர்ச்சக ஸ்வாமியின் முகமும் கண்களும் வீங்கிப் போயிருந்தன, செய்வதறியாது தவித்தார். இன்னும் சிறிது நேரத்தில் சாலவை கூட்டம், பிறகு அநேக திருமலை ஜனங்களும் வேங்கடவனை தரிசிக்க வருவர்.

மாருதியாண்டானுக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டது, சாலவை கூட்டத்துக்கு கிளம்பியவரை செய்தி இடியாய் தாக்கியது. அவரும் ஸ்தம்பித்து போய் பின் சுயநினைவு பெற்றவராய் அடுத்த நடவடிக்கைகளை பற்றி சிந்திக்கலானார்.

ஆண்டானுக்கு அவகாசம் அதிகம் இல்லை, வெகு துரிதமாக செயல்பட வேண்டும் என புரிந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது என்று பிடிபடவில்லை, அவனே தஞ்சம் என்று கோவிலை நோக்கி வேகநடை புரிந்தார்.

நாலூரானுக்கு காரியம் கச்சிதமாக முடிந்ததாக தூதுவன் சொல்ல, “சிவாத் பரதரம் நாஸ்தி” என படோபமாக கிளம்பினான் சாலவை கூட்டத்துக்கு. இனி நடக்க போகும் விளையாடல்களை எண்ணி அகமகிழ்ந்தான் அவனும், அவனது கூட்டாளியான சாளுக்கிய பில்வணனும்.

சோழ இளவரசன் அதிராஜேந்திரனை தன் கைபாவையாக்கி நிகழ்வுகளை நடத்தி கொண்டிருந்தான் சாளுக்கிய குலகுரு எனும் பில்வணன், அவனது எண்ணமெல்லாம் சோழ நாட்டை போரிட்டு வெல்ல முடியாது ஆகையால் சூது கொண்டு கபலிகரம் செய்யவேண்டும். அதற்கான அதிபயங்கரமான செயல் தான் அன்றைய இரவு திருமலையில் அரங்கேறியிருந்தது.kingமாருதியாண்டான் கருவறையில் வேங்கடவனோடு சிலையாகி நின்றார், அர்ச்சகர் குரல் அவரை நிகழ்காலத்துக்கு மீட்டுவந்தது. சாலவை கூட்ட தலைவர் தங்களை தேடி ஆள் அனுப்பியிருப்பதாக கூற, ஆண்டான் அர்ச்சகரை நோக்கி தான் திரும்பும் வரை விஷயம் வெளியே கசிய வேண்டாம் என உத்தரவிட்டார்.

அர்ச்சகர் என்ன பண்ண போகிறோம் ஸ்வாமி என்பது போல் பார்க்க? ஆண்டான் தலையை தொங்க போட்டுக்கொண்டே வெளியேறினார்.

அர்ச்சகரே பின் நினைத்து கொண்டார், பாவம் அவர் மட்டும் என்ன செய்து விட முடியும் செய்திருக்க வேண்டியவனே செய்யாமல் இருந்து விட்டான் என்று வேங்கடவனை பார்க்க அவன் முகத்தில் அதே புன்னகை. ஒரு வேலை இதுவும் அவன் விளையாட்டோ என்னமோ யார் அறிவார் என தன்னை தானே தேற்றிக்கொண்டார்.bljசாலவை கூட்டம் என்பது ஒரு தொன்று தொட்ட கூழுவாக தொண்டைமான் காலத்திலிருந்தே மலையப்பனுக்கு சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து திருமலை வனாந்திரத்திலேயே தங்கி இருந்தனர். தற்போதைய கூட்டம் கூட வரவிருக்கும் ஆதி பிரம்மோத்ஸவத்தை நடத்துவதற்கான சந்திப்பாக தான் இருந்தது.

திருமாமணி மண்டபம் எங்கும் ஜனக்கூட்டம், அனைவரும் ஆண்டானின் வருகைக்காக காத்திருப்பது போல் தெரிந்தது. ஆண்டான் வந்ததும் முதலில் தனது தாமதத்திற்காக வருத்தம் தெரிவித்தார். அவர் வதனம் சோபை இழந்து காணப்படுவதாக அனைவருக்கும் தெரிந்தது, வயோதிகம், முதிர்ச்சியின் காரணத்தினால் இருக்கலாம் என்று யுகித்தனர்.

கூட்டத்தை நோக்கி கண்களை சுழற்றினார், இவர்கள் அனைவரும் அவனுக்கு தொண்டு செய்யும் அடியார்கள் அவரவர் தமக்கென்ன பணி உத்சவத்தில் என அறிந்து கொள்ள உற்சாகமாக வந்திருக்கின்றனர் என்பதை பார்த்தாலே தெரிந்தது. இவர்களிடம் எப்படி தெரிவிப்பேன் இது என்ன சோதனை பகவானே என்று மனதுக்குள் புழுங்கினார், வெளியில் உள்ள பனி உள்ளுக்குள் இல்லை அவரிடம்.

விபரீதம் அறிந்தால் கேட்ட மாத்திரத்திலேயே உயிர் தியாகம் செய்து விடுவார்களே என அஞ்சினார். கூட்டத் தலைவர் சம்பிரதாய விஷயங்களை பேசி முடித்து யார் யாருக்கு என்னென்ன பணி என்பதை கூற, இது எதுவுமே ஆண்டான் செவிகளில் விழவில்லை.

தலைவர் ஆண்டானை பேச அழைக்க மௌனமாய் சிறு பொழுது கழிந்தது, அனைவரும் அவரின் முகத்தையே கூர்ந்து நோக்கினர் என்ன சொல்லப்போகிறாரோ என்று. நிசப்தத்தை கலைத்தது கூட்டத்தின் பின்னாலிருந்து ஒரு குரல்.

உத்ஸவம் எத்தனை நாள் நடத்தப்போகிறீர்?”  என கேள்வி வந்ததும், கேள்வியை விட கேட்ட குரல் சுளீரென இருந்தது ஆண்டானுக்கு.

வழக்கம் போல் ஏழு நாட்கள் அட்டவணை, ஏழாம் நாள் துவாதசி அன்று ஸ்வாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது என்று தலைவர் பதில் கூறினார்.

இது சாதாரணமாக கேட்கப்பட்ட கேள்வி அல்ல கலகத்துக்காக என்பதும் கேட்பது யார் என்பதையும் அறிந்தே இருந்தார் ஆண்டான்.

வழக்கத்தை ஏன் மாற்றக்கூடாது இந்தமுறை பத்து நாட்கள் நடத்தினால் என்ன என மறு கேள்வி வரவும், தலைவர் ஆத்திரப்பட்டு எதை கூறுவதாக இருந்தாலும் முன்னே வந்து கூறுங்கள் என்று உரைக்க, இது தான் சந்தர்ப்பம் என்று வெற்றி நடை போட்டு முன்னே வந்தது குரலுக்கான உருவம்.

உருவத்தை கண்டதும், தலைவர் சற்று குரலை தாழ்த்தி நாலூரான் அவர்களா தெரியாமல் குரலை உயர்த்திவிட்டேன், மன்னிக்கவும் நீங்கள் வருவதாக தகவல் இல்லையே என்று வினவ, நாலூரான் ஓரக்கண்ணால் ஆண்டானை பார்த்துக்கொண்டே தேவை ஏற்பட்டது வந்துவிட்டேன் என்றார்.

என்ன தேவையோ என்று தலைவர் பார்க்க, “சிவாத் பரதரம் நாஸ்தி” (சிவனை காட்டிலும் மேலானவனில்லை) என்று நாலூரான் கூற, இதை ஏன் வைணவ கூட்டத்தில் கூறுகிறார் அதுவும் திருமலையில் திருமால் குடிகொண்டிருக்கும் இடத்திலேயே என்று தலைவர் யோசிக்க கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது.

இதை தான் நாலூரான் எதிர்பார்த்தார் என்பதாக இருந்தது அவரிடம் தோன்றிய சிரிப்பு, தலைவர் இந்த களேபரத்தால் சற்று கடுமையை வரவழைத்துக்கொண்டு, நாங்கள் வேங்கடவனை தவிர பிறரை ஏற்பவர்களில்லை, இங்கே சிவனுக்காக பேச வந்துள்ளீர்கள் என்றால் தயை கூர்ந்து கிளம்பவும் என முடித்தார்.

நாலூரான் கிளம்புகிறேன் இறுதியாக ஒன்றை கூறிவிட்டு என்று, “உங்கள் வேங்கடவனும் எங்கள் சிவன் தான்” முடிந்தால் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெரியவரை மறுக்க சொல்லுங்கள் பார்ப்போம் என மாருதியாண்டான் பக்கம் திரும்ப அவர் பேயறைந்தது போல் காணப்பட்டார்.

தொடரும்…

Leave a comment