38. வனவாசம்

பகுதி – 3

அழகிய மணவாளன் திருவரங்கத்தை விட்டு அகன்று செல்வதை படை அறிந்தால் பின்  தொடர்ந்து வந்து நம்பெருமாளை அபகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, அனைவரையும் கலைந்து செல்ல ஆணையிடாமல் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது பன்றியாழ்வான் சந்நிதியில்.

அழகிய மணவாளனுக்கு திருவாராதனம் செய்ய முற்படுவதான பாவனையில் திரை சேர்த்தனர், பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் அங்கேயே காத்திருந்தனர். நம்பெருமாள் அங்கேயே இருப்பதாக தோற்றத்தை உருவாக்கினார் அனைவரும்.

பிள்ளை லோகாசார்யர் தம் அந்தரங்க சிஷ்யர்களுடன் அழகிய மணவாளனுக்கு தீங்கு நேராத வண்ணம் மங்களாசாஸனம் செய்து கொண்டு பல்லக்குடன் தெற்கு திசை நோக்கி விரைந்தனர்.

nmp

உலுக்கான் வருவான் நம்பெருமாளை காணாமல் தேடுவான், பின் திருவரங்கத்தை சேதப்படுத்துவான், கிடைக்கும் பொருட்களை சூரையாடி சென்றுவிடுவான் என்பதே பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களின் கணிப்பாக இருந்தது. அவன் சென்ற பின் நம்பெருமாளை மீண்டும் திருவரங்கத்திற்கு அழைத்து வந்து விடலாம் என்று நினைத்திருந்தனர்.

வரலாறு தப்பி போனது அன்று, அனைவரின் விதியையும் தன் வாளால் மாற்றி எழுதினான் உலுக்கான்.

படையெடுத்து வந்த உலுக்கான் அழகிய மணவாளனுடைய விக்ரஹத்தை காணாமல் சினம் கொண்டான். தங்கள் இளவரசி சுரதாணியை (துலுக்க நாச்சியார்) இந்த வைணவ கூட்டம் தான் அழகிய மணவாளன் விக்ரஹத்தை காட்டி மயக்கி ஏதோ செய்து கொன்றுவிட்டனர் என்று முடிவு கொண்டு பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களின் முடிவையும் தன் வாளால் கூறி முடித்தான்.

suradhani

பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களின் தலையும் தூண்டிக்கப்பட்டது. அதனால் இந்த படையெடுப்பானது “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று குறிப்பிடப்படுகிறது.

அடுத்த நாட்களில் மேலும் குரூரம் அரங்கேற்றப்பட்டன உலுக்கானது படையினரால். விக்ரஹங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன, பெண்கள் கற்பை இழந்தனர். திருவரங்கத்தை காக்க இருந்த மிச்ச சொச்ச மக்களும் கொன்று குவிக்கப்பட்டனர்.

கோவிலில் இழந்தவை அநேகம், அதில் சில அடியேன் அறிந்தவரை:

dipi2

  • பன்றியாழ்வான் திருக்கோவில் தரைமட்டமானது
  • தன்வந்திரி சந்நிதி தீக்கிறையாக்கப்பட்டது
  • ஆர்யபட்டாள் கோபுரமும் வாசலும் தீ வைக்கப்பட்டன
  • நாழிகை கேட்டான் வாயில் சேதப்படுத்தப்பட்டது (168 ஆண்டுகள் பிறகு நாயனாரால் புதுப்பிக்கப்பட்டது)
  • பவித்ரோத்ஸவ மண்டபத்தில் கூர நாராயண ஜீயர் பிரதிஷ்டை செய்த வராஹ மூர்த்தி அடித்து நொருக்கப்பட்டது
  • பாண்டியர்கள் பிரதிஷ்டை செய்த தாமிரகருடன்
  • கூர நாராயண ஜீயர் பிரதிஷ்டை செய்த வஸந்த கோபாலன்
  • சக்கரத்தாழ்வார் சந்நிதி
  • யானையேற்ற மண்டபம்

மேலே குறிப்பிட்டவையில் சில பின் வரும் காலங்களில் வெவ்வேறு மனிதர்களால் புதுப்பிக்கப்பட்டன. அநேக விக்ரஹங்கள் அழிந்து போயின இந்த படையெடுப்பில்.

வளரும்

Leave a comment