பகுதி – 5
பிள்ளை லோகாசார்யர் தம்முடைய எல்லையற்ற கருணையாலே எறும்பு மற்றும் தாவரங்களை திருக்கரங்களால் தொட்டு எல்லோர்க்கும் தம்மொடு கூடிய ஸம்பந்தத்தை உண்டாக்கினார்.
பின் பத்மாசனத்தில் அமர்ந்து தமது ஆசார்யரான வடக்கு திருவீதிப்பிள்ளை யின் திருவடிகளை தியானித்து கொண்டு அக்ஷய வருஷம் கி பி 1323ல் தமது 120வது திருநக்ஷத்திரத்தில் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
சிஷ்யர்கள் திருவுள்ளத்தில் கலக்கத்தோடு அழகிய மணவாளன் உடுத்து களைந்த திருமாலை, திருப்பரிவட்டம் ஆகியவற்றால் அவரது சரம திருமேனியை அலங்கரித்து ஜ்யோதிஷ்குடியில் (கொடிக்குளம்) திருப்பள்ளிப்படுத்தி, திருவத்யயனத்தையும் பத்து நாள் பெருக்க நடத்தினார்கள்.
பிள்ளை லோகாசார்யர் திருப்பள்ளிப்படுத்திய இடம் மேலே (யானைமலை, மதுரை).
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே ஆஸ்ரயித்த திருவாய்மொழி பிள்ளையின் தாயார் ஸாத்விக அம்மையார் அவருடைய பிரிவால் வருத்தமுற்று பரமபதத்துக்கு எழுந்தருளினாள்.
பிள்ளை லோகாசார்யர் மறைவிற்கு பின் கூரகுலோத்தமதாஸர் திருமலையாழ்வாரை திருத்தி பணிகொள்ள மதுரைக்கு எழுந்தருளினார். விளாஞ்சோலை பிள்ளை திருவனந்தபுரத்துக்கு எழுந்தருளினார். மற்றுமுள்ள சிஷ்யர்களும் காஞ்சிபுரம், திருநாராயணபுரத்திற்கு எழுந்தருளினர்.
தற்பொழுது அழகிய மணவாளனுடன் ஒரு சிலரே இருந்தனர்.
கோவிலில் நடந்தவை:
முகமத்திய படைத்தளபதி சந்தன மண்டபத்திலியே தங்கியிருந்தான்.
கோவிலுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க, கோவில் தாசிகளில் ஒருத்தி படைத்தளபதியிடம் அவன் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டு கோவிலுக்கு சேதங்கள் வராமல் காத்தாள்.
சமயம் பார்த்து கோபுரத்தின் உச்சிக்கு கூட்டிச்சென்று தளபதியை கீழே தள்ளி சாகடித்தாள். தானும் பின் குதித்து தன்னுயிரை நீத்தாள்.
இந்த தாசியின் பெயர் வெள்ளாயி, இவள் உயிர் நீத்த கோபுரமே வெள்ளாயி கோபுரம் என அழைக்கப்பட்டு நாளடைவில் வெள்ளை கோபுரம் என்று ஆகிப்போனது. இப்படி அரங்கனுக்காக உடல், மனம் & உயிர் அனைத்தையும் துறந்தவர்கள் அநேகம்.
இதனால் புதியதாக தளபதியை நியமித்து சிறு படையை கோவிலில் தேடுதலை தொடர ஆணையிட்டு, உலுக்கான் அரங்கனை தேடி மதுரைக்கு விரைந்தான்.
கூர நாராயண ஜீயர் வைத்த யந்திர தகடுகளின் விளைவாக கோவிலில் புதிய படைத்தலைவன் நோய்வாய்ப்பட்டான். இது தெய்வத்தின் கோபம் என கருதி படைத்தலைவன் கோவிலை மேலும் அழிக்க முயற்சிக்க, இன்னுமோர் தாசி அவனை வசப்படுத்தி அவனிடமிருந்து கோவிலை காத்தாள்.
அவனது நோய் நாளுக்கு நாள் அதிகரிக்க கோவிலை விட்டு அகன்று கண்ணனூர் (சமயபுரம்) சென்று சேர்ந்தான். அங்குள்ள மதிட்சுவரை இடித்து தனக்கு கோட்டை ஒன்றை ஏற்படுத்தி கொண்டான்.
அழகிய மணவாளனுக்கு நிவந்தமாய் விடப்பட்ட நிலங்களை மேற்பார்வையிடும் ஒருவரான சிங்கப்பிரான் எனும் ஸ்ரீ வைஷ்ணவர், படைத்தலைவனின் தாசியாய் இருந்து வருபவளின் துணையுடன் முகமத்திய படைத்தளபதியை நேரில் கண்டு அவனுக்கு நன்மை செய்வதாய் கூறிக்கொண்டு மதில்கள், மாளிகைகள், கோபுரங்கள், மணிமாடங்கள், சாலைகள் மற்றும் பெரிய கோவிலுக்கு எந்த ஆபத்தும் நேரா வண்ணம் பார்த்து கொண்டனர்.
உலுக்கான் மதுரையை நெருங்கும் செய்தி அழகிய மணவாளனுடன் இருந்த சிஷ்யர்களுக்கு எட்ட, இனி ஜ்யோதிஷ்குடியில் இருப்பது ஆபத்து என்று கருதி பயணத்தை தொடர்ந்தனர்.
அழகிய மணவாளனும் பயணப்பட்டார்…
வளரும்