பகுதி – 4
லக்ஷ்மணன், ராமரை பின்தொடர்ந்து அடிமை செய்ததை போன்று பிள்ளை லோகாசார்யர் தம் அந்தரங்க சிஷ்யர்களுடன் அழகிய மணவாளனுக்கு சேவகம் புரிந்தார்.
சென்று அடைய வேண்டிய இலக்கு அறியாத நிலையில் அழகிய மணவாளனை காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் அடர்ந்த வனாந்திரத்தில் விரைந்து கொண்டிருந்தனர்.
பிள்ளை லோகாசார்யருடன் வந்தவர்களில் சிலர்.
1) கூரகுலோத்தமதாஸர் 2) திருக்கண்ணங்குடி பிள்ளை 3) திருப்புட்குழி ஜீயர் 4) விளாஞ்சோலை பிள்ளை 5) நாலூர் பிள்ளை 6) மணற்பாக்கத்து நம்பி 7) கொள்ளி காவலதாஸர் 8) கோட்டூர் அண்ணர் 9) திருவாய்மொழி பிள்ளையின் தாயார் 10) திருகோபுர்த்து நாயனார் (கோவில் நிர்வாகி)
வேடர்கள் வாழும் ஒரு பகுதியை கடக்கும் போது கள்ளர் கூட்டத்தால் பெருமாளின் ஆபரணங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டன. அண்டம் காக்கும் அரங்கன் உடமைகள் யாவும் களையப்பட்டு ஒரேயொரு வஸ்திரத்துடன் புன்முறுவல் மாறாமல் காட்சி தந்தார்.
சிஷ்யர்கள் மனம் வெம்பினர், பேதலித்தனர் அரங்கன் படும் கதி தாளாமல். இது அரங்கனுக்கான பரிட்சை அல்ல, நமக்கு அரங்கனால் ஏற்படுத்தப்பட்ட பரிட்சை என்று பிள்ளை லோகாசார்யர் அவர்களை தேற்றி, திருத்தி பயணத்தை தொடர்ந்தார்.
பலநாட்கள் கடும் பயணத்தை மேற்கொண்டபின் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை அடைந்தனர். மதுரை நகரின் எல்லை பகுதியாக ஜ்யோதிஷ்குடி அமைந்திருந்தது.
நம்பெருமாளை பின் தொடர்ந்து வந்து முகம்மதியர்கள் மதுரையை தாக்கக்கூடும் என்பதால் பிள்ளை லோகாசார்யர் ஜ்யோதிஷ்குடியில் பெருமாளை எழுந்தருள பண்ணினார்.
ஜ்யோதிஷ்குடியில் செந்தாமரை குளமும் அதனருகில் சுனையும் அமைந்திருந்தன. அதனருகில் இயற்கையாக குகையும் அமைந்திருந்தது. அக்குகையில் பெருமாளை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
திருவாய்மொழி பிள்ளையின் தாயார் நொடி தவறாமல் திருவாலவட்டம் கைங்கரியம் செய்து வந்தார்.
அரங்கன் நகர் தீக்கிறையானதும் மற்றும் பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களின் தலை அறுபட்ட சேதியும் பிள்ளை லோகாசார்யரை எட்டியது. இதனால் ஏற்பட்ட துயராலும், வயோதிகத்தாலும், வழிநடை அலுப்பினாலும் உடல் தளர்ந்து திருநோவு சாத்தி கொண்டார். அந்திம காலம் நெருங்குவதை உணர்ந்தார்.
உடன் சிஷ்யர்களை தம்மிடம் வரும்படி அழைத்தார். அவர்களும் எங்களுக்கு தஞ்சம் இனி யார்? என்று உள்ளம் கலங்கி சோகித்து நின்றனர். கீழ்வரும் பணிகளை தன் சிஷ்யர்களுக்கு இட்டார்.
- திருவாய்மொழி பொருளை உபதேசிக்கும்படி – திருக்கண்ணங்குடி பிள்ளை, திருப்புட்குழி ஜீயர்
- அருளிசெயல் மூவாயிரம் வியாக்கியானம் – நாலூர் பிள்ளை
- ஸ்ரீவசனபூஷணம் – விளாஞ்சோலை பிள்ளை (இவரை அனந்தபுரம் சென்று வாழ்நாள் மூழுவதும் வாசம் செய்யவும் ஆணை)
- திருமலையாழ்வாரை அநுவர்த்தித்து ரஹஸ்யத்ரயம் – கூரகுலோத்தமதாஸர்
பிள்ளை லோகாசார்யர் அழகிய மணவாளனிடத்தில் சரீரத்தை விட பிரார்த்திக்க, அழகிய மணவாளனும் சோதிவாய் மலர்ந்து உமக்கும் உம்முடைய தொடர்பு பெற்றவர்களுக்கும் மோக்ஷம் தந்தோம் என்று அருளி செய்தார்.
வளரும்