பகுதி – 2
உலுக்கானின் படை தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய போதே, செய்தி திருவரங்கத்தை எட்டி இருந்தது.
இக்காலத்தில் திருவரங்கத்தில் வாழ்ந்த பிள்ளை லோகாசார்யர், அரங்கனுக்கும், வைணவத்துக்கும் மிக பெரிய தொண்டு புரிந்து கொண்டிருந்தார்.
கோவில் நிர்வாகம் முதலியாண்டான் வம்சத்து திருகோபுரத்து நாயனாரின் குமாரர்கள் பெரியண்ணன், சிற்றண்ணன் & பெருமாள் தோழப்பர் ஆகியோரால் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.
திருவரங்கத்தை நோக்கி படை நகரும் செய்தி அறிந்த ஜீயர், கோவில் அர்ச்சகர்கள், பிள்ளை லோகாசார்யர் & திருகோபுரத்து நாயனார் ஒன்று கூடி அழகிய மணவாளன் முன் திருவுள்ளச் சீட்டு போடுகையில், கோவிலில் இருப்பதே உசிதம் என்று நியமனம் ஆயிற்று.
வரவிருக்கும் ஆபத்தை அப்பொழுது அவர்கள் உணரவில்லை, பங்குனி உத்ஸவத்திற்கான ஆயத்த கைங்கரியங்களில் ஈடுபட்டு வந்தனர்.
பங்குனி உத்ஸவத்தின் 8ம் நாள்.
பேரழிவுக்கான நாள் அன்று, உலுக்கானின் படை திருக்கண்ணனூர் (இன்றைய சமயபுரம்) கடந்து வந்து கொண்டிருந்தது. வடக்காவிரியில் அமைந்திருந்த பன்றியாழ்வான் கோவிலிலே பலிவெட்டு மண்டபத்தில் அழகிய மணவாளன் எழுந்தருளி இருந்தார்.
{இந்த பன்றியாழ்வான் திருக்கோவில் வடக்காவிரியின் தென்கரையில் அமைந்திருந்தது.
ஆளவந்தார் படித்துறைக்கு கிழக்கே தவராசன் படித்துறை. இந்த தவராசன் படித்துறை ஆதிக்கேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு வடக்கில் அமைந்திருந்தது.
ஒவ்வொரு ப்ரஹ்மோத்ஸவத்தின் 8ம் திருநாள் அன்று அழகிய மணவாளன் எல்லைக்கரை மண்டபத்திற்கு எழுந்தருள்வது நடைமுறை. அந்த வழக்கப்படி எல்லைக்கரை மண்டபம் ஆகிய பன்றியாழ்வான் சந்நிதிக்கு எழுந்தருளியிருந்தார்.
இந்த பன்றியாழ்வான் சந்நிதி தற்பொழுது மேட்டுப் பகுதியாக காணப்படுகிறது (காரணம் படையெடுப்பு), அகழ்வாராய்ந்தால் நாம் காணக்கூடும்.}
உத்ஸவத்திற்காக அன்று பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வருகை தந்திருந்தனர்.
படை அருகில் வந்த செய்தி அறிந்ததும், பிள்ளை லோகாசார்யர் & திருகோபுரத்து நாயனார் ஒரு சிறு பல்லக்கிலே அழகிய மணவாளன் மற்றும் உபய நாச்சியார்கள் எழுந்தருள பண்ணி தெற்கு நோக்கி செல்ல முடிவெடுத்தனர்.
பிள்ளை லோகாசார்யரின் சீடர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்திருந்த ஜனத்தார் பெரிய பெருமாள் திருமுன்பு கல்காப்பு சாத்தி (கருங்கல் சுவர்), அவரை மறைத்து முன்னே ஒரு விக்ரஹத்தை வைத்தனர்.
திருகோபுரத்து நாயனார் ஸ்ரீரங்க நாச்சியார் மூலவரையும், திருவாபரணங்களையும் வில்வ மரத்தின் அடியில் பாதுகாப்பாக மறைத்து வைத்தார் (இந்த மரம் இன்றும் தாயார் சந்நிதியில் காணக்கிடைக்கிறது).
மற்ற ரகசிய அறைகளையும் அடையாளம் தெரியாமல் செய்தனர். இந்த போக்குவரத்துகளை அறியாத உலுக்கான் வடக்காவிரியின் வடகரையில் தண்டம் செய்திருந்தான்.
கோவில் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள் & ஸ்ரீபாதம் தாங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
அப்படியென்றால் பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களின் நிலை, இன்னும் சற்று நாழிகையில் மோக்ஷம்.
வளரும்