“ஏன் வைஷ்ணவர்கள் மற்ற தேவதாந்தரங்களை வணங்குவதில்லை?” என்று சிஷ்யர்கள் கேட்டதற்கு, பூர்வாசார்யர்கள் செய்ததில்லை, ஆகையால் நாமும் செய்வதற்கில்லை என்று ஆழ்வான் கூறினார். அனைத்தும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமை என ஆழ்வான் எப்பொழுதும் மெய் தத்வத்தையே உபதேசித்து இருந்தார்.
பெரிய பெருமாள் ஆழ்வானிடம் பேசுவார், ஓர் நன்னாளில் ஆழ்வான் பெருமானிடம் மோக்ஷத்தை வேண்டினார். பெருமானும் உனக்கும், உன்னை சேர்ந்தோருக்கும் மோக்ஷம் தந்தோம் என்றருளினார்.
இதை அறிந்த எம்பெருமானார், “எனக்கு முன்பாக நீர் எப்படி செல்லலாம்?” என்று ஆழ்வானிடம் கேட்க, அவரோ திருவாய்மொழி சூழ்விசும்பணிமுகில் பதிகத்தில் நம்மாழ்வார் கூற்றின் படி, புதிய முக்தரை வைகுண்டத்தில் இருக்க கூடிய நித்யர்களும், முக்தர்களும் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பராம்.
இதை எப்படி தேவரீர் வந்து அடியேனுக்குச் செய்வதை அனுமதிக்கமுடியும். அதனால் தான் அடியேன் தேவரீருக்கு முன்பாக செல்கிறேன் என்று ஆழ்வான் கூறினார். உலகியல் சாத்திரங்கள் எதுவுமே செல்லாத வைகுண்டத்தில் கூட தன்னை ஆசார்யானாக பாவித்து சேஷத்துவம் புரிய நினைக்கும் ஆழ்வானை சொல்ல வார்த்தைகள் நம்மிடமில்லை என்று எம்பெருமானார் கூறியதாக ஐதீகம்.
திருக்கோட்டியூர் நம்பி உத்தரவை மீறி அவா உள்ளோருக்கெல்லாம் மந்திரார்த்தத்தை உபதேசித்ததால், தமக்கு ஆசார்ய மற்றும் பாகவத அபச்சாரம் நேர்ந்து கொடிய நரகமே கிட்டும் என நினைத்திருந்தாராம் எம்பெருமானார் இதுநாள் வரை.
எப்பொழுது பெரிய பெருமாள் ஆழ்வானுக்கும் அவர் சம்பந்தம் உள்ளோருக்கும் மோக்ஷம் தந்தோம் என அருளினாரோ, தனக்கும் மோக்ஷம் உண்டு என்று எம்பெருமானார் நினைத்தாராம்.
கூரத்தாழ்வானைப் பற்றி வ்யாக்யானங்கள் மற்றும் குரு பரம்பரா ப்ரபாவத்தில் விஸ்தரமாக கூறப்பட்டுள்ளது. கூரத்தாழ்வானுடைய வைபவத்தை பூர்வாசார்யார்களே வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியாது என்று அறுதியிட்ட பின், அடியேன் என்ன சொல்லிவிட முடியும்.
அடியேனின் ஒரே வேண்டுகோள்:
பெருமானை நினைக்கும் போதெல்லாம் எம்பெருமானாரை நினையுங்கள்,
எம்பெருமானாரை நினைக்கும் போதெல்லாம் கூரத்தாழ்வானை நினையுங்கள்.
காஞ்சிபுரம்/ஸ்ரீ பெரும்புதூர் செல்கையில் தவறாமல் அருகில் இருக்கும் ஆழ்வானின் அவதார ஸ்தலமாகிய கூரம் சென்று ஆழ்வானை சேவித்து வாருங்கள்.
ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: