ஆழ்வானுக்கு பெருமானை போல் மார்பில் மரு இருந்ததால், பெற்றோர்கள் இட்ட திருநாமம் ஸ்ரீ வத்ஸ சின்னர் (திரு மரு மார்பன்).
எம்பெருமானர் ஆழ்வானுக்கு கோவிலில் பௌராணிக கைங்கர்யத்தை (பெருமாளுக்கு புராணங்கள் வாசிப்பது) நியமித்தார். மேலும் இவரே நமது சம்பிரதாயத்திற்கு க்ரந்த நிர்வாகியாகவும் (காலக்ஷேபாதிகாரி) இருந்தார்.
ஸ்ரீ வத்ஸ சின்னர் திருவாய்மொழி காலஷேபம் அருளும் போதெல்லாம் மோஹித்து மூர்ச்சையாகிவிடுவாராம், எம்பெருமானார் இதனை கண்டு நம்மாழ்வாரை நாம் கண்டதில்லை இவர் தானோ அவர் என ஆழ்வான் ஆழ்வான் ஆழ்வான் என்று கூப்பிட்டு மூர்ச்சையாகி கிடக்கும் ஆழ்வானை எழுப்புவாராம்.
எம்பெருமானார் ஸ்ரீ வத்ஸ சின்னரின் பக்தியை கண்டு ஆழ்ந்ததினால் இட்ட திருநாமமே ஆழ்வான். அன்றிலிருந்து இவரின் ஊருடன் சேர்ந்து திருநாமம் கூர்த்தாழ்வான் என்றே ஆனது (தந்தையின் திருநாமம் கூர்த்தாழ்வார்).
ஆழ்வானிடம் ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே பூரணமாக இருந்தது. சிஷ்யர்களுக்கு உபதேசிக்கும் பொழுது கூட எம்பெருமானாரின் கையாக இருந்து செயல்படுகிறேன் என்பாராம் ஆழ்வான்.
சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர் திருவரங்கத்து அமுதனார், ஆனால் ஏனோ அவரின் கோவில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. இதை அறிந்த ஆழ்வான் திருவரங்கத்து அமுதனாரை திருத்திப்பணிகொண்டு எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயிக்கச் செய்தார். ஏகாகம் சடங்கில் உணவருந்தி, அவரிடமிருந்து கோயில் பொறுப்பு மற்றும் சாவியை பெற்று எம்பெருமானாரிடம் ஒப்படைத்தார்.
ஆழ்வான், திருவரங்கத்து அமுதனாருக்கு பகவத் விஷயம் உபதேசித்த பிறகு, அமுதனார் இவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்ட பொழுது, அதற்கு “எம்பெருமானார் திருவடிகளையே சார்ந்து இரும்” என்று ஆழ்வான் கூறிவிட்டார்.
திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் ஆழ்வானிடம் கொடுத்த பொழுது, கூரத்தாழ்வான் அனைத்தையும் தெருவிலே விட்டெறிந்து விட்டு, எம்பெருமானாரிடம் “தான் அனைத்து தேவையற்ற சுமைகளையும் கைவிட்டேன்” என்று கூறினார்.
ஆழ்வான் திவ்ய பிரபந்தத்திற்கு வியாக்கியானமாக பஞ்ச ஸ்தவம் அருளியுள்ளார். இதனை நம் பூர்வாசார்யார்கள் பெண்ணிற்கு எப்படி எத்தனை ஆபரணம் இருந்தாலும் திருமாங்கல்யத்திற்கு ஒப்பாகாதோ, அதற்கு ஈடு இந்த பஞ்ச ஸ்தவம் என்று சாதித்துள்ளனர்.
- வைகுண்ட ஸ்தவம்
- அதிமாநுஷ ஸ்தவம்
- சுந்தரபாஹு ஸ்தவம்
- வரதராஜ ஸ்தவம்
- ஸ்ரீ ஸ்தவம்
எம்பெருமானார் மேல் கோட்டை எழுந்தருளி கொண்டார் , ஆசார்யர் பெரிய நம்பியோ பரமபதித்து விட்டார், தனக்கோ கண்களும் போய்விட்டது, கோவிலுக்குள் செல்லவும் முடியவில்லை கிருமி கண்ட சோழனின் கெடுபிடியால், அரங்கனை சேவிக்க வழியில்லை, ஆகையால் ஆழ்வானுக்கு அரங்கத்தில் இருப்புகொள்ளவில்லை.
ஆழ்வான் பாண்டிய நாடான திருமாலிருஞ்சோலை கிளம்பிவிட்டார் மிகுந்த மன துயருடன், போகும் வழியில் அவர் சாதித்த ஸ்தோத்திரங்கள் தான் வைகுண்ட ஸ்தவம் – பர & வைகுண்டத்தை பற்றிய அருளிச்செயல் & அதிமாநுஷ ஸ்தவம் – விபவ அவதாரங்களை பற்றிய அருளிச்செயல்.
திருமாலிருஞ்சோலையில் இருக்கையில் சுந்தரத் தோளுடையானை பற்றிய அருளிச்செயலே சுந்தரபாஹு ஸ்தவம்.
காலம் கனிந்தது சோழ அரசனும் மாண்டான், எம்பெருமானார் பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு அரங்கம் திரும்பினார், ஆழ்வான் & பெரிய நம்பிக்கு நேர்ந்த கதி அறிந்து, தன்னால் தான் என மிகவும் வருந்தினார். ஆழ்வானும் எம்பெருமானாரை சேவிக்க அரங்கம் வந்தடைந்தார். ஆழ்வானின் ஒளி மிகுந்த கண்களை காணாது எம்பெருமானார் வேதனையுற்றார்.
தன்னையே அறியாமல் ஓர் ஸ்ரீ வைஷ்ணவரின் திருமண் காப்பு தரித்தலை கேலி நகைத்தேனோ, பாகவத அபச்சாரம் செய்தேனோ, அடியேனின் ஆசார்யணை காணமுடியாதபடி கண்கள் ஊனமாகி போனதோ என்று வெம்பினார். இத்தனை ஆண்டுகள் ஆழ்வானுக்கு கண்கள் இல்லாதது குறையாகவே இல்லை.
வரம் தரும் வரதராஜனிடம் சென்று கண்கள் கேள், அவன் கிருபை புரிவான் என்று எம்பெருமானார் ஆணைப்படி ஆழ்வான் விருப்பமற்று காஞ்சிக்கு பயணப்பட்டார். வழியில் நாலூரானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டததாக செய்தி கிட்டியது ஆழ்வானுக்கு.
ஆழ்வான் பெருமாள் கோவிலை அடைந்து வரதராஜன் மேல் ஸ்தோத்திரங்கள் அருளிச்செய்தார் “வரதராஜ ஸ்தவம்”. என்ன வேண்டும் கேள் என்று வரதன் கேட்க, நான் பெரும் பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வரம் வாங்கி வந்துவிட்டார் அரங்கத்துக்கு.
ஆழ்வான் கண்கள் இல்லாமல் திரும்பி வந்ததை கண்டு எம்பெருமானார் நடந்ததை கேட்டறிந்து, அவரை ஆரதழுவி கொண்டார். தீங்கு செய்தோருக்கும் நன்மை செய்யும் குணம் தான் வைஷ்ணவம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆழ்வான் நின்றிருந்தார்.மீண்டும் எம்பெருமானாரின் அதீத வற்புறுத்தலின் காரணமாக பெருமாள் கோவில் சென்று ஸ்தோத்திரங்கள் பாடினார். வரதன் என்ன வேண்டும் என கேட்க “அடியேனின் ஆசார்யன் தனக்கு கண்களை வேண்டும்படி அனுப்பியதாகவும், ஆனால் தனக்கு துளியும் விருப்பம் இல்லை” என்று ஆழ்வான் கூறினார்.
உடன் வரதன் உன் ஆசார்யன் கோரிக்கையை செவிமடுத்து உனக்கு கண்களை தந்தோம், இந்த கண்களை கொண்டு உன் ஆசார்யனையும், என்னையும் மட்டுமே காண முடியும் என்று அருளினார். ஆழ்வான் அடைந்த மகிழ்ச்சி அளப்பரியது.
ஆழ்வான் இறுதியாக ரங்க நாச்சியார் (தாயார்) மேல் கொண்ட பக்தியினால் சாதித்த ஸ்தோத்திரங்களே ஸ்ரீ ஸ்தவம்.
அடுத்த பக்கம்