அத்தியாயம் 3 – குருவும் சீடனும்
மாறனின் தவ வலிமையால் உண்டான பெரு ஒளியின் பிரகாசம் வடபாரதத்தில் உள்ள புண்ணிய ஷேத்திரம் ஆன காசியையும் விட்டுவைக்கவில்லை…
ஒர் இரவு நேரத்தில் இருண்ட வானத்தில் நட்சத்திரமாய் தெரிந்த பெரு ஒளி அச்சமயம் காசியில் இருந்த ஒர் வைணவ துறவியை கவர்ந்து இழுத்தது…அவர் ஒளியின் திசையை நோக்கி தெற்கே நகர்ந்தார்…
அவர் இது திருமலையில் நின்றுவிடும் என்று எண்ணினார்…இல்லை…
அவர் இது திருவல்லிக்கேணியில் நின்றுவிடும் என்று எண்ணினார்…இல்லை…
அவர் இது திருவரங்கத்தில் நின்றுவிடும் என்று எண்ணினார்…இல்லை…
அவர் இது திருமாலிருஞ்சோலையில் நின்றுவிடும் என்று எண்ணினார்…இல்லை…
அவர் இது திருவில்லிபுத்தூரில் நின்றுவிடும் என்று எண்ணினார்…இல்லை…
அவரும் விடவில்லை ஒளியை… ஒளியும் அவரை விட்டதாய் இல்லை…
திருக்குருகூரில் கண்டார் ஒளியை…ஆழ்த்தப்பட்டார்…
மாறனின் தவத்தைக் கலைக்க ஒரு சிறிய கல்லை எடுத்து, அருகில் தாமரை குளத்தில் எறிந்தார் துறவி… இப்போது தான் முதல் முறையாக மாறனின் தெய்வீக தாமரை கண்கள் திறந்தது…
துறவி நடுங்கி போனார் அவர் கண்களை சந்திக்க சக்தி இல்லாமல்…
சிறிது நேரத்திற்கு பிறகு மாறனின் தெய்வீக தேன் ஒழுகும் பேச்சை கேட்க வேண்டும் என்று அவா எழுந்தது துறவிக்கு… வினவினார் கேள்வியை…
“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எற்றை தின்று எங்கே கிடக்கும்?”…
வந்தது பதில்… பிறப்பு முதல் ஒரு வார்த்தை உதிர்க்காத மாறன் முதன்முறையாக வாய் மலர்ந்தார்…
“அற்றை தின்று அங்கே கிடக்கும்”…
இதைக்கேட்ட துறவி விழுந்து நமஸ்கரித்து இவரே என் ஆசார்யர், இவரே என் நாராயணன் என்று தன்னை சீடனாக ஏற்கும்படி மனமுருகி வேண்டினார்…மாறனும் உடனடியாக ஒப்பு கொண்டு வரும் காலங்களில் அவரது படைப்புகளை தொகுப்பதில் உதவி செய்ய ஆணையிட்டார்…
மாறனின் மேல் பக்தியில் ஆழ்ந்ததால் “ஆழ்வார்” ஆனார் துறவி “ஸ்ரீ மதுரகவி” என்னும் “ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்”…
ஆழ்வார் என்றால் பகவான் பக்தியில் ஆழ்ந்தவர் (அ) ஆழ்த்தியவர்…
ஸ்ரீ மதுரகவியை மட்டும் அல்லாது நம் அனைவரையும் ஸ்ரீமன் நாராயணனின் பக்தியில் ஆழ்த்தியதால்… மாறன் நம் எல்லாருக்கும் ஆழ்வார் ஆனார் “நம்மாழ்வார்”…
நம்மாழ்வாரின் படைப்புக்களை தொகுத்தார் மதுரகவி… அது…
தொடரும்…