பாகம் 9 – துறவு
சேவாகாலம் கடந்தும் அரங்கன் தரிசனம் உண்டோ? அதுவும் ஒரு சிலருக்கு மட்டும் என்று வினவினார் சோழ பிரதிநிதி.
கிடாம்பி சுதாரித்து, தாங்களும் அரங்கனை தரிசிக்க வந்தமைக்கு நன்றி. ஆனால் விஷ்வருபம் தொடங்க நான்கு நாழிகைகள் உள்ளன, அதற்காக தான் காத்திருக்கிறோம் என்றார்.
உள்ளுக்குள் கிடாம்பியின் சமயோஜிதத்தை மெச்சி கொண்ட பிரதிநிதி, அதற்காக உறக்கத்தை தவிர்த்து இரவிலிருந்தே காத்திருக்க என்ன அவசியமோ என்றார்.
கிடாம்பியும் விடாமல், அரங்கன் பால் கொண்ட அன்பு துளி பொழுதும் அவரை விட்டு விலகி இருக்க விடுவதில்லை என்றும், இதில் உறக்கம் ஏது என்று உரைத்து, மேலும் அரங்கன் பித்து சோழரையும் உறங்க விடவில்லை போலும் என்று ஒரே போடாய் போட்டார்.
இரவில் தானும் உறங்காமல் அரங்கத்துக்கு வந்ததை சாதுரியமாக கோடிட்டு வீரசைவரான தன்னை வார்த்தைகளால் இலகுவாக வைணவராக மாற்றிவிட்டதை நினைத்து வியந்தார் பிரதிநிதி.
பிரதிநிதி கிடாம்பியுடன் பேச்சை தொடர விரும்பாமல் வேகமாக உள்ளே பிரவேசித்து, ஆளவந்தார் வேண்டாம் என்று துறந்த பொறுப்பை தற்சமயம் அவரது சிஷ்யர் பெரிய நம்பி கையில் எடுத்துள்ளார் போலும் அதுவும் சோழருக்கு எதிராக என்று உக்கிரமாக பேசினார்.
சோழ பிரதிநிதியை சற்றும் எதிர்பார்க்காத அவையில் மௌனமே முதலில் நிலவியது. பிறகு பெரிய நம்பியே திருவாய் மலர்ந்து மாறனேரிக்காக இடப்பட்ட பலகையில் பிரதிநிதியை அமரச்செய்து ஆசுவாச படுத்தினார்.
சில பொழுது அமைதிக்கு பின், எதை எங்கள் ஆசார்யர் துறந்து நான் கைப்பற்றியுள்ளதாக விளக்கமாக கூறினால் பதில் கூற இயலும் என்றார் பெரிய நம்பி. ஓலை பரிமாற்றம், ரகசிய கூட்டம் இதை எல்லாம் தான் என்றார் பிரதிநிதி.
பெரிய நம்பி மனதுக்குள் வெகுவாக பாராட்டினார் சோழரின் ஒற்றறியும் திறனை கண்டு. ஆனால் ரகசிய கூட்டத்தை திட்டமிட்டதே அன்று பிற்பகலில் தான், எப்படி சோழருக்கு தெரிந்திருக்க முடியும் என்று யோசித்தார்.
சோழரே அதற்கான விடையையும் அளித்தார், தான் பெரிய நம்பியின் அகத்துக்கு சென்றதாகவும், அத்துழாய் வேறு வழி இல்லாமல் உண்மையை உரைத்ததாகவும் கூறினார்.
ஓலை பரிமாற்றம், ரகசிய கூட்டம் இவை எல்லாம் காலத்தின் கட்டாயமே தவிர சோழருக்கு எதிராக எந்த திட்டமும் இல்லை என்றார் பெரிய நம்பி.
பெரிய நம்பியின் வாதத்தில் நம்பிக்கை வராமல் மீண்டும் கூறினார், ஆளவந்தார் துறந்த செயலை தாம் செய்கிறீர் அதுவும் சோழருக்கு எதிராக என்று.
ஆசார்யர் துறந்த எவற்றையும், நாங்கள் பற்றி கொண்டதில்லை. எங்கள் ஆசார்யர் துறந்ததாக நீர் எதை கூறுகிறீர்?
தெரியாதது போல் நன்றாக நடிக்கிறீர் பெரிய நம்பி என்று கூறிவிட்டு, மன்னர் ராஜேந்திரரின் அரசாங்கத்தில் ராணுவ ஆலோசகர் பதவியை உங்கள் ஆளவந்தார் துறந்தார் என்றார்.
தொடரும்