பாகம் 8 – கலகம்
தந்தை கோவிலுக்கு சென்றதும் அகத்துக்குள் வந்த அத்துழாய்க்கு, மனம் ஒரு நிலையில் இல்லாததால் நித்திராதேவி ஆட்கொள்ள மறுத்தாள்.
ஆதலால் நிலா முற்றத்திற்கு சென்று அமர்ந்தவள், திருகோவில் சந்தனு மண்டப கூரையில் எரிந்து கொண்டிருந்த அணையா விளக்கையே பார்த்த வண்ணம் இருந்தாள்.
பெரிய நம்பிக்கு அரங்கமும், அரங்கனுமே எல்லாம். அத்துழாய்க்கோ பெரிய நம்பியே எல்லாம். தற்சமயம் அவரை எண்ணி பெரிதும் கலக்கமுற்றாள்.
காலையில் தந்தை கூறிய விவரங்கள் அவளை வெகுவாக பாதித்ததே அதற்கு காரணம்.
அன்மை காலமாக விஷமிகளால் வைணவ கோஷ்டியில் பூசல்கள் வருவதாகவும், ஆளவந்தார் மறைவுக்கு பின் அவை பெருகிவிட்டதாகவும் பெரிய நம்பி உரைத்தார்.
வைணவ ஒற்றுமையை குலைக்கும் விதம் குரல்கள், வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன எனவும், அனைத்தும் வெளி ஆட்களின் தூண்டுதல்களாக, இனம் காணமுடியா பன்முனை தாக்குதல்களாக தெரிவதாக கூறினார்.
இதை திருகோழியூர் சென்று சோழ பிரதிநிதியிடம் முறையிட்டதாகவும், அதற்கு அவர் மன்னரிடம் கலந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்றும், ஆனால் அரசாங்கத்தின் மெத்தனமான போக்கு ஐய்யமாக உள்ளதாகவும் தெரிவித்தார் பெரிய நம்பி.
இந்த சூழலை அரசு ஊக்குவிக்கவில்லை என்றாலும் ஆதரிப்பதாக வருந்தினார். அதன் பொருட்டே தோழர்களுக்கு ஓலை அனுப்பியுள்ளதாகவும், இரவு ரகசிய ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறினார்.
ஆனால் இது மட்டுமே இன்னல் இல்லை என்றும் இன்னும் பல இன்னல்கள் வாட்டுவதாகவும், அதை பிறகு கூறுவதாகவும் தெரிவித்தார் பெரிய நம்பி.
மாறனேரிக்கு உடற்நிலை சீராக இல்லாததால், பதில் ஓலையை திருவரங்கனிடம் கொடுத்துள்ளதாகவும், அதில் அத்துழாயின் ஷேமத்தை கேட்டுள்ளதாக மட்டும் தெரிவித்தார். ஓலையில் உள்ள மற்ற விவரங்களை தெரிவிக்கவில்லை அவர்.
தந்தை சொன்னவற்றை ஆராய்ந்ததில் பிடிபடாத ஒரே விடயம், சோழ அரசு கலகத்தை ஏன் ஆதரிப்பதாக நினைக்கிறார் தந்தை, அதில் மன்னருக்கு என்ன ஆதாயம் இருக்க முடியும்.
ஆதாயத்தை விட, கலகங்கள் அரசுக்கு ஆபத்தையே பயித்துவிக்கும்.
சிறிது நாழிகை சென்றது, அத்துழாய் சிந்தையில் மின்னல் வெட்டியது. சோழ அரசின் சூட்சமம் புரிய தொடங்கியது, அதே கணம் தந்தையின் கூற்றும், அறிவாற்றலும் வியக்க வைத்தது.
இதற்கான வித்து ஆசார்யர் நாதமுனிகள் காலத்திலேயே விதைக்க பட்டுவிட்டதாகவும், தற்பொழுது அது விருட்சமாகி தந்தையை தாக்குவதாகவும் எண்ணினாள்.
ஆனால் உண்மையான தாக்குதல், பிற்காலத்தில் ராமானுஜருக்கு தான் என்று அப்பொழுது யாரும் அறிந்திருக்கவில்லை.
தொடரும்