பாகம் 7 – பாதுகாவல்
காற்றின் தன்மை சற்று அதிகரித்ததால், எண்ணெய் பந்தங்கள் இருட்டுக்குள் மூழ்கி நெடியை தந்தன. நிலவின் ஒளி, ஓலையை தொடர போதுமானதாய் இல்லை பெரிய நம்பிக்கு.
அன்னியர் வருகையை தவிர்க்க பாதுகாவலாய் நாழிகை கேட்டான் வாயிலில் நின்று கொண்டிருந்த கிடாம்பி ஓடி வருவது தெரிந்தது.
பெரிய நம்பி முக்கிய மற்றும் அந்தரங்க பணிகளை கிடாம்பியிடம் ஒப்படைப்பது வழக்கம். அவரிடம் அலுவலை கொடுத்தால் துளியும் பிசகாது என்று மற்ற மூவரும் அறிந்தே இருந்தனர்.
அன்று பிற்பகலில் கிடாம்பியை அழைத்த பெரிய நம்பி, திருக்கோவில் இரவு பாதுகாவல் பணியை ஏற்குமாறும், ஆலோசனை நடக்கும் மூன்றாம் ஜாமத்தில் ஆளி நாடன் திருச்சுற்று கடந்து மற்றவரை அனுமதிக்க வேண்டாம் என கூறி இருந்தார்.
கிடாம்பியும் அந்தி சாய்ந்ததும் கோவிலை அடைந்து அரங்கனை தரிசித்து விட்டு பொறுப்பை ஏற்று கொண்டார். நேர்த்தியாக இரண்டாம் ஜாமத்திற்கு மேல் எவரும் இல்லாமல் பார்த்து கொண்டார், பெரிய நம்பி குறிப்பிட்ட மூவரை தவிர.
ஆசனம், பலகை, விளக்கு என ஆலோசனைக்கு தேவையான அனைத்தையும் கச்சிதமாக எடுத்து வைத்து, மூவரும் வந்ததும் வரவேற்று திருமடைப் பள்ளியில் வைக்க பட்டிருந்த ததியோனம் பிரசாதத்தை பரிமாறினார்.
உண்டதும், கிடாம்பியிடம் வடக்காவிரியில் ஆளவந்தார் திருவரசு எழும்பி கொண்டிருக்கும் நிலையை குறித்து கேட்டு அறிந்தனர் அவர்கள்.
பிறருக்கு தெரியாமல் ஆலோசனையை நடத்தும் விதமாய் சூழ்நிலை ஆகிவிட்டதே என்று துயருற்றனர்.
பெரிய நம்பி வந்ததும் தேவைகளை கவனித்து விட்டு, வெளி சென்று நாழிகை கேட்டான் வாயிலில் கிடாம்பி காவல் புரிகையில், காற்றின் வேகத்தால் பந்தங்கள் அணைவதை பார்த்து உள்ளே ஓடி வந்தார்.
பந்தங்கள் எரியும் வரை மௌனமே நிலவியது அங்கே. வைணவத்துக்கு தொண்டாற்ற கிடாம்பி போல் மனிதர்கள் உள்ள வரை ஒரு பங்கமும் நேராது என்று மனதுக்குள் நினைத்து கொண்டனர் நால்வரும்.
ஆனால் பங்கம் அந்த நொடியே அவர்களை நோக்கி வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை ஒருவரும். கிடாம்பி பந்தங்களை ஏற்றி முடிக்கவும், வெளியே அரவம் கேட்கவும் சரியாய் இருந்தது.
அனைவரும் திடுக்கிட, கிடாம்பி அரவம் யாதென பார்த்து வருவதாய் கூறிவிட்டு வெளியே வந்தார்.
இரவின் மூன்றாம் ஜாமத்தில் மன்னன் ராஜேந்திரனின் பிரதிநிதி, திருகோழியூரில் இருந்து யாரும் அறியா ரகசிய ஆலோசனை கூடத்திற்கு வர முடியும் என்று கிடாம்பி சொப்பனத்தில் கூட நினைத்ததில்லை.
தொடரும்