பாகம் 5 – சந்திப்பு
தனிமையை தவிர்த்து சதா காலமும் ஆசார்யர் மற்றும் அரங்கன் நிகழ்வுகளில் திளைத்து விடுவார் மாறனேரி நம்பி.
கழனிகளில் புரண்டு திரிந்த ஒரு பஞ்சம குல சிறுவனான தன்னை ஆசார்யர் சிஷ்யனாக ஏற்று கொண்டதை எண்ணி சிலாகித்தார் இன்றும்.
அந்த முதல் சந்திப்பை நினைத்து எத்தனை முறை பூரித்து இருக்கிறேன் என்று தன்னை தானே அவர் வியந்ததும் உண்டு. எத்தனை பிறவிகளில் செய்த புண்ணியமோ, தவமோ – இறைவன் பக்தனை நாடி வந்தது.
திருவரங்க அருகாமையில், காவிரி கரையில் அமைந்திருந்த சிறிய கிராமத்தில் குடி இருந்தனர் மாறனேரி நம்பியின் குடும்பம். விவசாயம் அவர்களின் குலத்தொழில்.
அரங்கனின் கொடைகளில் ஒன்று காவிரி தாயின் வளம். இயற்கை அன்னையின் கருணையால் அந்த கிராமம் முப்போகம் விளையும் பூமியாக விவசாயம் செழித்தது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, விளையும் நெல் பயிர்களின் ஒரு பகுதியை அரங்கனுக்கு சமர்ப்பித்தார்கள் சுற்றத்தார்.
பவித்ர உத்சவத்தின் 7ஆம் திருநாளில் பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருக்கொட்டாரம் எழுந்தருளி, சமர்ப்பித்த தானியத்தை பரிசோதித்து கண்டறிவார். இந்நிகழ்ச்சிக்கு நெல் அளவு கண்டருளல் என்று பெயர். நெல்லின் அளவு, ராஜ்யத்தின் செழிப்புக்கு அடையாளம்.
அரங்கனுக்கு தான் எத்தனை உத்சவங்கள் அதில் எத்தனை ஆச்சிரியமான அர்த்தங்கள்.
சரி! நம்பியை நோக்கி மீண்டும் நாம்.
அந்நாளில் ஆளவந்தார் பகவத்தையும் – விசிஷ்டாத்வைதத்தையும் மக்களுக்கு பரப்பும் பொருட்டு, தனது சிஷ்ய பரிபாலனங்களுடன் சுற்றுப்புறங்களில் பிரயாணம் மேற் கொண்டிருந்தார்.
ஆளவந்தார் செல்லும் வழியில்,ஓர் இடத்தில் மாறனேரி சேற்றில் இரண்டு கைகளால் நீர் அள்ளி பருகுவதை பார்த்து வியப்புற்றார். அந்த விந்தையான செயலைப் பற்றி விசாரிப்பதற்காக சிஷ்யர் பெரிய நம்பியை அனுப்பினார்.
இந்த உடல் நம் மரணத்திற்கு பிறகு மண்ணுக்குள் செல்கிறது மற்றும் பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் உருவான இடத்திலேயே முற்றுப்பெரும்.
அப்படி இருக்கையில், சேற்று நீர் பருகுவதில் என்ன விந்தை உங்கள் குருதேவருக்கு என்று பதில் வினா தொடுத்தார் மாறனேரி பெரிய நம்பியிடம்.
கேட்டதும் வாயடைத்து நின்றனர் அனைவரும்.
வினவியது மனிதனா இல்லை மாறனா.
ஆளவந்தார் மாறனேரியை நம்மாழ்வாருக்கு இணையாகவே உணர்ந்தார்.
தொடரும்