பாகம் 3 – நட்பு
பெரிய நம்பி ஓலையில் கூறிய இதர விவரங்களை மனம் அசை போட்டது.
(i) ஆளவந்தாரின் 3 இச்சைகள்
(ii) இளையாழ்வாரின் வாக்குறுதி
(iii) இளையாழ்வார் திருவரங்கம் வராமல் காஞ்சி திரும்புதல்
(iv) யாதவரின் கோஷ்டி கலகங்கள்
(v) மன்னன் ராஜேந்திரன் எழுப்பியுள்ள கங்கை கொண்ட சோழபுரம்
(vi) அதன் விளைவாக புதிதாக கிளம்பியுள்ள வைணவ – சைவ சமய பூசல்கள்
(vii) காலம் கனிந்ததும் ஆளவந்தாரின் கூற்று படி இளையாழ்வாரிடம் பொறுப்பு உப்படைப்பு
(viii) இதை எல்லாம் முன்னிட்டு விரைவாக அடுத்த ஆசார்யர் தேர்வு
நினைக்கையில் மலைப்பை ஏற்படுத்தியது பெரியவருக்கு.
பெரிய நம்பியை பார்த்து பல காலம் ஓடிவிட்டது. அவரோ பணியால் கட்டுண்டு இருந்தார் இவரோ பிணியால் கட்டுண்டு கிடந்தார்.
பெரிய நம்பியின் பெண் அத்துழாய் நினைவுக்கு வந்தாள், அவருக்கும் பெண் அல்லவே. அவளுடன் கழிந்த அழகான பொழுதுகளை எண்ணி அக மகிழ்ந்தார்.
தோழமையை எண்ணி உருகினார், இவ்வளவு பாரத்தை சுமக்க பெரிய நம்பிக்கு அநுக்ரஹம் செய் என அரங்கனை வேண்டினார்.
பெரியவருக்கு நடக்கும் நிகழ்வுகள், துர் சகுணங்கள், சண்டை சச்சரவுகள், சமய பூசல்கள் எல்லாம் கலி புருஷனின் நற்வரவே என்று நிச்சயமாக தெரிந்தது.
கலியின் பிடி இறுகி அரங்கன் வரை வந்து விட்டதை நினைத்து, எல்லாம் அரங்கன் செயல் என்று மனதுக்குள் கூறினார்.
அரங்கன் தனக்கும் நடக்கும் நிகழ்வுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல் துயில் கொண்டு இருந்தார். ஆனால் முகத்தில் தவழ்ந்த புன்னகை, அனைத்தும் நான் நடத்தும் நாடகம் என்று கூறாமல் கூறிற்று.
பதில் ஓலை எழுதும் எண்ணம் வரவே எழுத்தாணி கொண்டு முடித்தார், கையோப்பம் சொல்லிற்று அவரின் திருநாமம் மாறனேரி நம்பி என்று.
தொடரும்