பாகம் 2 – சுமை
சயன சேவை முடிந்து நடை சாற்றி, சந்நிதி சாவி கொத்துகளை ஒப்படைத்து விட்டு சென்றார் கோவில் அர்ச்சகர்.
ஆசார்யர் தான் அவரை கைங்கரியத்துக்காக நியமித்து இருந்தார். அவ்வூரில் உள்ள ஒரே பிராமண குடும்பம் அவருடையது.
சுற்றம் எல்லாம் சரியாக இருக்கிறது என்று அறிந்து கொண்ட பின், கோவில் வெளிவாசல் அருகில் இருக்கும் தனது அறைக்குள் நுழைந்தார் பெரியவர்.
ஒரு ஆள் தங்கும் அளவுடன், ஓரத்தில் கிடந்த அகல் விளக்கு வெளிச்சத்தை அறை முழுவதும் நிரப்பியது.
பெரியவரின் சொத்தாக எழுத்தாணி, ஓலை நறுக்குகள், ஒரு மூங்கில் கூடையில் சில துணிகள், நீர் குடுவை, களிம்பு மற்றும் ஒரு மூங்கில் கழி அங்கே கிடந்தது.
ஆனால் இவை எல்லாம் சொத்தே அல்ல என்று நினைக்கும் விதமாய், மிக பெரிய சொத்தாய் அறை சுவற்றில் ஓவிய ஸ்வரூபமாய் காட்சி தந்தார் ஆசார்யர் ஆளவந்தார்.
பெரியவருக்கு நித்திரை கொள்ளவில்லை, ஓவியத்தை கண்ணீர் மல்க பார்த்து கொண்டிருந்தார்.
வெளிச்சம் தன்னில் இருந்து வரவில்லை, மாறாக பெரியவரின் ஆசார்ய பக்தி தான் அறையை பிரகாசமாய் மிளிர செய்கிறது என்று உறுதி கொண்டது விளக்கு.
சிறிது நாழிகைக்கு பின் சுயநினைவிற்கு வந்த அவரின் எண்ண ஓட்டங்கள், 15 யோஜனை தூரம் பறந்து திருவரங்கம் அடைந்தது.
இந்த அசாதாரண சூழலில், தோழனுக்கு தோளோடு தோள் நின்று சுமைதாங்கியாக இல்லாமல் தானும் ஒரு சுமையாய் போனதை எண்ணி மனம் வெம்பினார்.
துக்கம் தொண்டை குழி அடைக்க, குடுவையில் உள்ள நீரை பருகினார். உச்சரிப்பு மிக நிதானமாய் வெளியே வந்தது “பெரிய நம்பி”.
தொடரும்