17. மாறனேரி நம்பி

பாகம் 18 – சோழ கங்கம்

கோவில் மணி சத்தம் மலைச்சாரல் முழுதும் நிரம்பி, அழகர் பெருமானுக்கு பொங்கல் கால பூஜையை நினைவுறுத்தின. பரி மேல் பறந்த திருவரங்கன், பரிமேலழகர் கோவில் இருந்த திசை நோக்கி கைகளை கூப்பினான்.

ஆசார்யனே முதல், அவர்க்கு பின் தான் அரங்கனும், அழகரும் என்று உடன் பிரயாணத்தை தொடங்கியவன், கோவில் மணியோசை கேட்டதும் அவனை அறியாமல் கண்கள் பனித்தன, நா ‘அழகா! அழகா!’ என்று தழுத்தது.

இதனால் குதிரையின் வேகம் தடைப்பட்டு மிதமாக சென்று கொண்டிருந்தது. பாட்டை நெருங்குவதை இடது வசம் வளர்ந்திருக்கும் அடர்த்தியான மகிழ மரங்கள் நினைவுட்டின திருவரங்கனுக்கு. சுயநினைவு பெற்றவனாய் குதிரையின் கடிவாளத்தை சொடுக்க, அது பாய்ச்சல் எடுத்தது.

திருவரங்கனை மீண்டும் அரங்கத்தில் சந்திப்போம், அவனது பிரயாணம் எவ்வித இடையூறும் இன்றி தொடரட்டும்.

ஊர்: கங்கை கொண்ட சோழபுரம்

gkc

கிடாம்பி குருகை காவலப்பன் கோவில் வெளி வந்து கோட்டையை நோக்கி நடக்க ஆரம்பித்த சில அடிகளில், 6 பேர் குழுவாக வடகிழக்கு திசையில் வந்து கொண்டிருந்தனர்.

அக்குழுவை கண்டதும் கிடாம்பியின் முகம் மலர்ந்தது.

காரணம், இரு வைணவர்களும் நான்கு சிவனடியார்களும் சேர்ந்திருந்தனர். வைணவ சைவ சமய பூசல் அற்ப பதர்களால் சுயநலம் சார்ந்து உருவாகி வருகிறதே தவிர்த்து அனைவரும் அதை ஆதரிக்கவில்லை என்பது போல் உணர்த்தியது இவர்களின் சேர்க்கை.

கிடாம்பியின் முகத்தில் இருந்த மலர்ச்சி அவர்களிடத்தில் தென்படவில்லை, கவலையுடன் காணப்பட்டனர். இதனால் ஐயம் ஏற்பட கிடாம்பி அவர்களை அணுகி, தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு என்னவென்று விசாரிக்கலானார்.

அதற்கு மறுமொழியாக அக்குழுவில் இருந்த ஒரு சிவப்பிராமணர் முன்வந்து, தாங்கள் அனைவரும் திருக்கடையூரை சேர்ந்தவர்கள் எனவும், சிவனடியார்களான தாம் நால்வரும் இவ்விரு வைணவர்களுடன் சேர்ந்து திருமால் கோவிலுக்கு சென்றது பெரும் குற்றம் என கூறி, திருக்கடையூர் மூலபருடை (சிவன் கோவில் நிர்வாகத்தை நடத்தும் சபை) தங்களது சொத்தை பறிமுதல் செய்து சிவன் கோவிலுக்காக எடுத்து கொள்ளப்படும் என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது என்று வேதனையுடன் கூறினார்.

brahmins

இதை மேல்முறையிடுவதற்காக அரசாங்க அதிகாரிகளை சந்தித்து முடிந்தால் மன்னரையும் காண இங்கு வந்தோம் என்றனர்.

இதெல்லாம் மன்னரின் ஆணையா என்று கிடாம்பி வினவ, இல்லை என்று ஒன்றாக தலை அசைத்தனர். மன்னரின் பெயரில் அநேக ஊர்களில், அதிகாரிகள் இம்மாதிரியான அக்கிரம செயல்களை புரிந்து வருகின்றனர், அதை தெரியபடுத்தவே வந்துள்ளோம்.

இம்மாதிரி காரியங்களை அரங்கத்தில் அரங்கேற்ற முடியாமல் தான் திருகோழியூர் அதிகாரி வெம்பி கொண்டிருக்கிறார் போலும் என்று கிடாம்பி நினைத்துகொண்டார்.

அவர்களிடத்தில் விடைபெற்ற கிடாம்பி, கோட்டைக்குள் சென்றதும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டி கொண்டே அகன்றார். கோட்டைக்கு சமீபம் அவருக்கு தென்பட்டது கடல் போன்ற சோழ கங்கம் ஏரி.

lake

ராஜேந்திர சோழன் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றி அமைத்ததொடு மட்டுமின்றி, அவ்வூர் மக்களுக்கு உரிய நீர்ப்பாசன வசதியையும் அமைத்தான்.

கங்கை வரை சென்று வெற்றியை கண்ட இவன் கங்கை நீரை சுமந்து வந்து அதன் நினைவாக ஓர் பெரிய ஏரியை தனது தலைநகருக்கு மேற்கே வெட்டி, அதில் கங்கை நீரை கலந்து, சோழ கங்கம் என பெயரிட்டான். மேலும் இதனை நீர்மயமான வெற்றி என்று குறிப்பதால் அதன் நினைவாக ஏற்படுத்தப்பட்ட இப்பேரேரி.

rajendra

கிடாம்பி சோழ கங்க ஏரியின் இராசராசன் வாய்க்கால் மதகின் மீதேறி கண்களால் கோட்டையை அளவிட்டார்.

தொடரும்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s