பாகம் 17 – ஓட்டம்
வ்ருஷப மலையிலிருந்து தென்றல் சந்தன மரத்தின் மணத்தையும் தாங்கி வந்ததால், வெள்ளி முளைத்தும் திருமாலிருஞ்சோலை குளிர்ந்த காற்றுடன் விடியாதது போல் காட்சியளித்தது.
திருவரங்கன் நித்ய அனுஷ்டானம் முடித்து நூபுர கங்கையிலிருந்து அழகனை தரிசிக்க புறப்பட்ட வேளையில், விப்ர நாராயணரின் சேவகன் தன்னை நோக்கி துரித நடை போட்டு வருவது தெரிந்தது.
சேவகனின் அவசர கதியை பார்க்கும் போது ஏதோ விபரீதம் நிகழ்ந்து விட்டதாக மனதுக்கு பட்டது. ஆதுரசாலையில் விடப்பட்ட மனிதனுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்குமோ அல்லது அரசாங்கம் தம்மை தேடி ஆள் அனுப்பி இருப்பார்களோ என்றெல்லாம் நினைக்க தோன்றியது.
எதுவாக இருந்தாலும் தமது பயணம் தடையின்றி அரங்கம் சேர துணை புரிய சுந்தரபாஹு கடாக்ஷிக்க வேண்டும் என்றும், ஆசார்யர் பெரிய நம்பியை சந்தித்து நடந்தவைகளை தெரிவித்த பின்பு எது நடந்தாலும் பார்த்து கொள்ளலாம், அதுவரை தடை வராமலிருக்க அவரையும் பிரார்த்தித்து கொண்டான்.
மனம் பதப்பதைக்க, சேவகன் சொல்ல போகின்ற விடயத்துக்காக காத்து நின்றான். வந்த சேவகன், சற்று முன்பு திருவரங்கத்திலிருந்து ஓலை ஒன்று விப்ர நாராயணர்க்கு வந்ததாகவும், அதை அவர் வாசித்ததும் தங்களை உடனே அகத்திற்கு அழைத்து வர சொன்னதாகவும் கூறினான்.
திருவரங்கன் மேலும் வினவியும் சேவகன் வேற விடயங்களை அறிந்திருக்கவில்லை. ரகசியங்களை காப்பதில் விப்ர நாராயணர்க்கு நிகர் இல்லை என்று அறிந்திருந்தான் திருவரங்கன்.
ஓட்டமும் நடையுமாக மலையில் கீழ் இறங்கி வந்ததால் திருவரங்கன் உடம்பில் தசை பிடிப்பும், கல் இடறியதால் கால்களில் காயமும் உண்டாகின. சேவகன் வெகுலாவகமாக முன்னே சென்று கொண்டிருந்தான்.
இடைவிடாத பயணம் சற்று ஆசுவாப்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு விப்ர நாராயணரின் அகத்தில், வந்த ஓலை பேரிடியாய் அமைந்தது.
அகத்தில் நுழைந்ததும், சூடான காய் வடிசாறு கொடுக்கப்பட்டது திருவரங்கனுக்கு, மேனியில் காயம் பட்ட இடத்தில் பச்சிலை போடப்பட்டது. சற்று புத்துணர்ச்சி பெற்றவுடன் உள்ளே ஆய்வுக்கூடம் சென்று விப்ர நாராயணரை சந்தித்தான்.
அவனது மேனியை பார்த்ததுமே, ஆசார்யர் கொடுத்த பொறுப்பை தன்னுயிரை மாய்த்தேனும் முடிக்கும் திடம் கொண்டவன் என்று மனதுக்குள் நினைத்து கொண்டார். ஆசார்ய பக்தியும் அரங்கன் பக்தியும் அதில் அவருக்கு தெரிந்தது.
வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்சிரிப்புடன் ஓலையை நீட்டினார் விப்ர நாராயணர், இதிலெல்லாம் திருவரங்கன் கவனத்தை செலுத்தாமல் கர்மமே கண் என்பதாக ஓலையை வாங்கி வாசித்தான்.
அன்பு விப்ர நாராயணர்க்கு,
என் கணக்கு சரியாக இருந்தால் திருவரங்கன் இன்றோ அல்லது நாளையோ தங்களை சந்திக்கக்கூடும். அவனிடம் இந்த தகவலை சேர்ப்பிக்க.
திருக்கோழியுரில் அரசவை ரகசியமாக நாளை 17 ம் சாமத்தில் கூடுகிறது என்று அறிகிறேன், அதற்குள் உன் வரவும் தகவல்களும் அதிமுக்கியம். சிரமத்திற்கு வருந்துகிறேன். இங்கனம் – ஆளவந்தார் தாசன்.
மனம் துரித கணக்கு போட்டது, உடனடியாக அரங்கம் போய் சேர வேண்டும் என்று விப்ர நாராயணரை நோக்க, திருவரங்கனின் மனதை படித்தவராய் உமது குதிரை ஆதூர சாலையிலிருந்து வந்து கொண்டிருக்கிறது என்று பதிலளித்தார்.
அடுத்த 1 நாழிகையில் திருவரங்கனின் குதிரை வடகிழக்கு திசையில் புழுதி பறக்க ஓடியது.
தொடரும்