பாகம் 16 – நூபுர கங்கை
குதிரையின் குளம்படிகள் சத்தம் கேட்டு ஆதுரசாலையின் பணியாள் ஒருவன் வெளிவரவும், அவனிடம் திருவரங்கன் தான் இன்னாரென்றும் பின்னால் சிவிகையில் வரும் மனிதருக்கு உடனடியாக சிகிச்சைக்கான ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் கோரினான்.
விப்ர நாராயணர் எங்கே? அவர் இங்கு தான் உள்ளாரா அல்லது வேர்களை தேடி காடு மலைகளில் சுற்றி கொண்டிருக்கிறாரா எனவும் வினவினான் பணியாளிடம்.
எங்கள் தலைவர் சற்று முன்பு வரை இங்கு தான் இருந்தார் ஐயனே என்று பணியாள் முடிக்கும் முன் திருவரங்கன் கவலையுடன், அப்படியென்றால் இப்பொழுது இல்லையா, எப்பொழுது வருவார்? எங்கே சென்றுள்ளார் என்று கேள்விகளை தொடுத்தான்.
ஐயனே பதட்டம் வேண்டாம், தலைவர் ஸ்நானம் முடிக்க நூபுர கங்கை சென்றுள்ளார் என கூறவும் நிம்மதி பெருமூச்சு விட்டான் திருவரங்கன். சிவிகை வரவும் பணிகளை துரித படுத்தினான் பணியாள். அதிகாரி சுயநினைவின்றி கிடந்தார் .
ஐயனே, தலைவர் வந்ததும் சிகிச்சை துவங்கி விடும், நான் ஏற்கனவே தூது அனுப்பிவிட்டேன் தலைவரை உடனடியாக அழைத்து வர என்றான் பணியாள்.
மனம் அமைதி அடைந்தவனாய் திருவரங்கன் பணியாளிடம் விடை பெற்று, தான் மீண்டும் சில நாழிகள் கழித்து வந்து விப்ர நாராயணரை சந்திப்பதாக சொல்லி சென்றான்.
வெளியில் வந்த திருவரங்கன், குதிரைக்கு கொள்ளு கொடுத்து அருகிலேயே கலயத்தில் பருக நீரும் வைத்தான்.
தொடர்ச்சியான பயணத்தின் களைப்பு தலை தூக்கினாலும், அழகனை தரிசிக்க வேண்டும் என்கிற அவா, மற்றதை புறம் தள்ளியது.
காலை கடன்களை கழித்து ஸ்நானம் முடிக்க கால்கள் நூபுர கங்கையை நோக்கி துரித நடை போட்டது. பின்பு நேராக அழகன் தரிசனம் என்று மனம் சொல்லியது.
நூபுர கங்கை போகும் வழியில், விப்ர நாராயணர் அவசரமாக வருவது தெரிந்தது. அவரும் திருவரங்கனை கண்டு ஓரிரு விநாடிகள் ஷேம லாபங்களை விசாரித்தார்.
அழகனை தரிசித்த பிறகு, பகல் போஜனத்துக்கு தன் அகத்துக்கு வர வேண்டும் என்று திருவரங்கனுக்கு ஆணையிட்டு சென்றார்.
சிறிது தூரம் சென்ற விப்ர நாராயணர், திருவரங்கன் போகும் திசை திரும்பி சிகிச்சைக்கு வந்துள்ள மனிதர் யார்? நமக்கு வேண்டியவரா என்றார்?
நமக்கு வேண்டாதவர் என்று பதில் வந்தது அவனிடமிருந்து. சோழ அதிகாரியா என்று விப்ர நாராயணர் பார்வையால் கேட்க, ஆம் என்று தலை அசைத்தான் திருவரங்கன்.
நூபுர கங்கையை அடைந்து களைப்பு தீர நீராடி களித்தான் திருவரங்கன்.
நூபுர கங்கை வரலாறு:
புஷ்பக விமானத்தில் தினமும் காசிக்கு சென்று கங்கையில் நீராடி அழகனை தரிசிக்கும் வழக்கம் உள்ளவன் ‘மலை’ வம்சத்தை சேர்ந்த மன்னன்.
காசியில் தான் கங்கை இருக்கிறதா? என் மலையிலும் ஒரு கங்கை இருக்கிறதே என்று அழகன் கனவில் கூற, அன்றிலிருந்து நூபுர கங்கை பயன்பாட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
முருக பெருமானை வைத்தும் ஓர் வரலாறு உண்டு.
தினமும் அழகரின் திருமஞ்சனம் நூபுரகங்கை நீரால் செய்யப்படுகின்றது.
தொடரும்