பாகம் 15 – சிவிகை தாங்கி
திருமால் இருக்கும் சோலை ஆன திருமாலிருஞ்சோலை அழகை பருக எத்தனை விழிகள் இருந்தாலும் போதாதோ? அழகனை கொண்ட சோலையின் அழகுக்கு நிகராக வைகுண்டம் ஒன்று தான் இருக்கமுடியும்.
விடியற்காலை குளிர் ரணம் கொண்ட மேனியை வாட்ட சிவிகை சீலையை அகற்றி சிவிகை தாங்கியிடம் ஏதோ கேட்டார் உள்ளிருந்த அதிகாரி, இல்லை வலியில் முனகினார் என்று சொல்வதே பொருத்தம்.
அதிகாரியின் மேனி முழுதும் குருதி தோய்ந்து குத்துயிராக கிடந்தார். மேனியின் சில பாகங்களில் பச்சிலை போட பட்டிருந்தது தெரிந்தது, எடுத்து கொண்ட கசாயத்தின் வீரியம் குறைய துவங்கியதால் வலியில் துடித்தார்.
உடன் அந்த சிவிகை தாங்கி ஓட்டமும் நடையுமுமாக முன்னேறி, முன்னால் சென்று கொண்டிருக்கும் குதிரையை அணுகினான்.
பின்னால் ஒருவன் ஓடி வரும் சத்தம் கேட்டு குதிரை மேல் இருந்தவனின் எண்ண ஓட்டம் தடைபட, அழகனின் உலகிலிருந்து தற்பொழுதுக்கு திரும்பி கடிவாளத்தை இறுக்கி நிறுத்தினான்.
சிவிகை தாங்கி அருகில் வந்து, நாராயண ஆதுரசாலைக்கு இன்னும் எவ்வளவு காத தூரம் உள்ளது ஐயனே என்று வினவினான்.
மேலும் பேச்சை தொடர்ந்து எங்கள் அதிகாரிக்கு தங்கள் மேல் நம்பிக்கை வரவில்லை, சரியான பாதையில் தான் செல்கிறோமா என அவ்வப்போது கேட்டு கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தான்.
இந்த வைணவனை நம்பாதீர்கள், மலை மீது ஏறியதும் நம்மை கீழே தள்ளி சாகடித்து விடுவான் என மருந்தின் வீரியத்தால் சித்தம் பேதலித்து உளறுகிறார் சமயத்தில் என்றும் உரைத்தான்.
உங்கள் அதிகாரி சரியாக தான் கூறி இருக்கிறார். அதை தான் நானும் சிந்தித்து கொண்டிருந்தேன், எங்கே உங்களை பிடித்து தள்ளுவதற்கு ஏற்ற இடம் என்று என தெரிவித்தான் வைணவன் பதிலுக்கு.
ஐயனே விளையாடியது போதும், எங்கள் அதிகாரி தான் தங்களை நம்பவில்லையே தவிர, நாங்கள் உங்களை நம்பியே வந்து கொண்டிருக்கிறோம் என சிவிகை தாங்கி கூறினான்.
எதனால் இந்த நம்பிக்கை என்று கேட்டான் வைணவன். சிவிகை தாங்கி அவனுக்கு தெரிந்த மொழியில் இப்படி பதில் உரைத்தான்.
ஐயனே! நீங்கள் பெரிய ஐயன் பள்ளியில் பயின்றவர் என்று அறிகிறேன், தற்சமயம் உங்கள் குருநாதர் இட்ட பணியின் காரணமாக வந்துள்ளீர், அவரின் பெயருக்கு கேடு விளையும் எந்த செயலும் தாம் புரியமாட்டீர் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
வைணவன் பதிலை கேட்டு அசந்து போனான்.
சிவிகை தாங்கியே தொடர்ந்து, எங்கள் நம்பிக்கைக்கு இதை எல்லாம் தாண்டிய முழு முதற் காரணம் ஒன்று உண்டு என்று கூறினான்.
அது என்னவோ என வைணவன் மேலும் அதிசயித்து கேட்க, நீங்கள் காக்கும் தெய்வமான பெருமாளை வழிபடுபவர், உங்களுக்கு காக்க மட்டுமே தெரியும், அழித்தல் உங்கள் தொழில் இல்லை என கூறி முடித்தான்.
சிவிகை தாங்கியின் வெகுளித்தனமான அதே சமயம் அர்த்தம் கொண்ட பேச்சை கேட்டு வியந்தான் வைணவன்.
வியப்பில் ஆழ்ந்த வைணவனை நோக்கி நாராயண ஆதுரசாலைக்கு எவ்வளவு காத தூரம் என்று மீண்டும் கேட்டான் சிவிகை தாங்கி. தன்னை சுதாரித்து கொண்டு, இரண்டு வளைவு ஏறி ஒரு காத தூரம் சென்றால் அடைவோம் என கூறினான் வைணவன்.
இவ்வுளவு அறிந்த உனக்கு என் பெயர் தெரியுமா என்று வைணவன் கேட்க, சிவிகை தாங்கியும் தெரியும் எனவும் பள்ளி கொண்ட பெருமாளின் பெயர் தான் உங்கள் பெயர் என்று கூறி, திரும்பி பாராமல் சிவிகையை நோக்கி பறந்தான்.
நேயர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை அந்த வைணவன் நம் திருவரங்கன் என்று.
தொடரும்