பாகம் 14 – மறைந்த கிரந்தம்
தன் தோழர் ஒரு தீர்க்கதரிசி, பிரதிநிதியை நம்பினால் பயன் இல்லை என்று இங்கு இல்லாமலே துல்லியமாக கணித்துள்ளார். நாம் தான் கொஞ்சம் மெதுவாக செயலாற்றி விட்டோமோ இந்த விஷயத்தில் என்று வருத்தப்பட்டார் பெரிய நம்பி.
அவரின் மனதில் துயரம் ஆட்கொண்டது. முன்பு போல் அரங்கன் சேவையில் முழு பொழுதும் செலவிட முடியவில்லை, ஆசார்யரின் அந்திம நாட்களில் அவருடன் இல்லாமல் காஞ்சி பயணம், தன்னையே புவனம் என்று எண்ணி உய்ந்து கொண்டிருக்கும் அத்துழாயை கவனிக்க நேரமில்லை, மன திடத்தை சோதிக்கும் மாறனேரியின் உடற்நிலை.
பிரபந்தங்கள் ஓத வேண்டிய திருவாய், மற்றதை பேசி பொழுதை கழித்து வாழ்கிறது என்று தன்னை நொந்து, விழிகள் மூடி சாய்ந்து கிடந்தார் துளசி மாடத்துக்கு அருகில். எத்தனை நாழிகை அப்படி இருந்திருப்பாரோ, விழிகள் திறந்த போது, அத்துழாய் சுக்கு நீருடன் காத்திருந்தாள்.
வாங்கி பருகியதும், மாறனேரி ஓலையில் கூறியது போல் இனியும் தாமதியாமல் உடனடியாக நம் ஆள் ஒருவர் அரசரை போய் சந்திப்பதே உத்தமம் என்று உணர்ந்த பெரிய நம்பி சிந்திக்கலானார்.
பிரதிநிதியை கையாள திருவரங்கனை அனுப்பியாயிற்று. அரசரை சந்திக்க சரியான ஆள் யார் என்று நீண்ட பொழுது யோசித்தார், மனதில் பல்வேறு சிந்தனை ஓடியதால் ஒருவரும் புலப்படவில்லை. இறுதியில் அரங்கனை தரிசித்தால் உபாயம் தென்படும் என்று புறப்பட்டார்.
அரங்கனை தரிசித்தால் தான் உபாயமா? அரங்கனை நினைத்ததுமே உண்டு எனும் விதமாக, உபாயம் அவர் அகத்து வாயிலை நோக்கி வந்தது. ஆம், வந்த உபாயம் வேறு யாருமல்ல கிடாம்பி தான்.
அந்த நொடியே தோன்றிற்று, இது தான் சரியான சேர்க்கை என்று, பிரதிநிதிக்கு திருவரங்கன், அரசருக்கு கிடாம்பி. அரங்கனை தியானித்து நன்றி தெரிவித்தார் பெரிய நம்பி.
கிடாம்பி ஒரு நாள் பயணத்துக்கு பின், குருகை காவலப்பன் கோவிலை அடைந்தார். அரசரின் பட்டத்து இளவரசியால் நிர்வகிக்கப்பட்ட கோவில், சோழபுரத்துக்கு சற்று முன்னரே அமைய பெற்றிருந்தது.
குருகை காவலப்பன் கோவில், ஜெயம்கொண்டம்
திருவரங்கத்தில் இருந்து வந்த கிடாம்பியை, தன் அகத்தில் வரவேற்று உபசரித்து கோவிலுக்குள் அழைத்து சென்றார் அர்ச்சகர். பேசிக்கொண்டே சென்றனர் இருவரும், ஒரு கட்டத்தில் யோக ரஹஸ்ய கிரந்தம் மறைந்து போன இடம் இது என்று அர்ச்சகர் கூறி வருந்தினார்.
கிடாம்பிக்கு ஓர் அளவே அதனை ஒட்டிய விவரம் தெரியுமாதலால், முழு வரலாற்றையும் அறிய விரும்பி அர்ச்சகரிடம் கேட்க, அவரும் வினயத்துடன் தெரிவித்தார்.
குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் சிஷ்யர்களில் ஒருவர். குருகைக் காவலப்பனை யோக ரஹஸ்யத்தை கற்றுக் கொள்ளப் பணித்து, பின்பு அவரே கற்றும் கொடுத்தார். குருகைக் காவலப்பனும் கற்று எம்பெருமானை அஷ்டாங்க யோகத்தில் தியானித்து வந்தார் இந்த இடத்தில்.
ஆளவந்தார் இங்கே வந்து குருகைக் காவலப்பனிடம் திருவடி பணிந்து தனக்கு யோக ரஹஸ்யம் கற்றுத் தரும்படி வேண்டிக் கொண்டார். அப்பன் அவரை எடுத்து உயர்த்தி, யோக ரஹஸ்யம் கற்றுத் தருவதாக வாக்களித்தார்.
ஆனால், தன் சம்சார வாழ்வின் இறுதி நாட்களில் தான் அதைக் கற்றுத் தருவேன் என்றார். உயர்ந்த ஞானியாக இருந்தமையால், தாம் பரமபதம் அடையும் நாளை அவர் அறிந்திருந்தார்.
அதை பற்றிய குறிப்பு ஒன்றை ஆளவந்தாருக்குக் கூறி அந்த சமயத்தில் யோக ரஹஸ்யம் கற்க வருமாறு கூறினார். அதற்கு இசைந்து ஆளவந்தார் திருவரங்கம் சென்று, தன் கைங்கர்யத்தைத் தொடர்ந்தார்.
ஒரு சமயம், அனந்தனை தரிசிக்க ஆளவந்தார் திருவனந்தபுரம் சென்று இருந்தார். அந்த நாள் தான் அப்பன் தன்னை யோக ரஹஸ்யம் கற்றுக் கொள்ள வர சொன்ன நாள் என்று ஆளவந்தாருக்கு நினைவுக்கு வந்தது.
சொன்னது போல், அன்றே அப்பன் தன் ஆசார்யன் திருவடி அடைந்தார். யோக ரஹஸ்ய கிரந்தமும் நமக்கு கிடைக்காமல் போனது. இது வைணவத்துக்கே ஈடு இணையில்லாத இழப்பாக கருதப்படுகிறது என்றார்.
யோக ரஹஸ்ய கிரந்தம் அறிந்த இரண்டே பேர் நாதமுனிகள், குருகைக் காவலப்பன்.
குருகைக் காவலப்பனின் தனியன்:
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி ஸிரஸா ஸதா ||
தொடரும்