பாகம் 13 – மூர்ச்சை
இப்பொழுதில் திருவரங்கன் இங்கு பிரவேசிக்க முடியுமென்றோ, பிரவேசித்ததோடு நில்லாமல் சோழ அரசையே எதிர்க்கும் துணிவு கொள்ள முடியுமென்றோ பிரதிநிதி எண்ணியது கூட இல்லை.
இதே போல், அன்று தான் அரங்கன் கோவிலில் பிரவேசித்த பொழுது, அங்கு இருந்தோர் வதனத்தில் எப்படி ஆச்சர்யம் மற்றும் குழப்பம் தென்பட்டதோ, அதை தமக்கு இன்று திருப்பி தந்த வைணவனை பார்த்ததும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
இதனால் தான் இந்த வைணவர்களையும், அரங்க மாநகரத்தையும் தங்களால் முழு கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை என எண்ணி, எப்படியேனும் வைணவத்தை வீழ்த்துவேன் என்று மனதுக்குள் சபதம் ஏற்று கொண்டார் அதீத சைவ பித்து பிடித்த பிரதிநிதி.
ஆனால் வரும் காலங்களில் தான் வைணவம் சீறுகொண்டு மேலும் மகோன்னதத்தை அடைய போகிறது என்று அறியவில்லை பிரதிநிதி.
சபையின் அதிர்ச்சி கலந்த மௌனத்தை போக்க, திருவரங்கனே பேச்சை தொடர்ந்து தான் கூறிய கூற்றுக்கான காரணத்தை விவரித்தான். இங்கு இருக்கும் அநேக பேருக்கும் தெரிந்த வரலாறு தான், இருந்தாலும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
காலம்சென்ற சோழ சக்ரவர்த்தி ராஜராஜசோழரின் தனயனும், நம் மன்னருமான ராஜேந்திர சோழர், தன் தந்தையை போல் தரணி வென்று தம்மை பலரும் பரணி பாட, தன் தந்தை தஞ்சையில் கட்டிய கற்றளி போல் சோழபுரத்தில் கற்றளி கட்டியது சாத்தியமானது வரை முக்கிய பங்கு வகித்தவர்கள் எமது ஆசார்யர்கள். அதிலும் குறிப்பாக நாதமுனி அவர்கள்.
ஆசார்யர் நாதமுனியை, தானே காசிக்கு நேரில் சென்று அழைத்து, தனது ராஜஆலோசகராக வேண்டி வழிப்பட்டார் மன்னர் ராஜேந்திர சோழர். ஆசார்யரும் மீண்டும் வீரநாராயணபுரம் வந்தடைந்து, மன்னருக்கு உபதேசங்களையும் தக்க ஆலோசனைகளையும் வழங்கி மேன்மை அடைய செய்தார்.
நாதமுனியின் காலத்திற்கு பிறகு அவரின் பேரரும் எங்களது ஆசார்யருமான ஆளவந்தார் அப்பணியை திறம் பட தொடர்ந்தார், சோழரின் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை ஆகியவற்றுக்கு ஆலோசனை செய்யும் முக்கியமான பொறுப்பில் அமர்ந்தார். அதிலும் ராணுவ அமைப்பை செவ்வென மாற்றினார், ஆதலால் தான் போர்களில் மிக எளிதாக வெற்றிகள் கிட்டியது.
சில காலம் சென்ற பிறகு மணக்கால் நம்பி அவர்களின் அறிவுரையை ஏற்று சமய சம்ப்ரதாய விஷயங்களுக்காக வந்துவிட்டார் ஆளவந்தார். அப்பொழுது ஆரம்பித்தது பிணக்கு சோழருக்கும் – வைணவத்துக்கும் இடையே.
குறிப்பு: ஆளவந்தாரை நம் சமய சம்ப்ரதாய விஷயங்களுக்காக அழைத்து வந்ததில் பெரும் பங்கு கொண்ட இருவர் புண்டரீகாக்ஷர், குருகை காவலப்பர்.
இந்த பிணக்கை விரும்பி எதிர்பார்த்த சிலர் தூபம் போட்டு வளர்த்து வருகின்றனர் என்று ஓர விழி பார்வையால் பிரதிநிதியை நோக்கினான். அவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
இனியும் இந்த வைணவனை பேச அனுமதித்தால் முதலுக்கே மோசமாகி விடும் என்று இடைமறித்து, உன் கதாகால ஷேபங்கள் முடிந்ததா என்று வினவினார்.
திருவரங்கனும் முடிந்தது என்று தலையசைக்க, இனி நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் உரைப்பதே உனக்கு நல்லது என்று மிரட்டும் தொனியில் கூறி, எவ்வாறு நீ அத்துமீறி உள்ளே பிரவேசித்தாய் என்று கேட்டார்?
அதற்கு முன்பாக, இறுதியாக ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல அனுமதி தர வேண்டும் என்று பணிவுடன் கோரினான் திருவரங்கன். என்ன பெரிதாக சொல்லி விட போகிறான் என்று அனுமதி அளித்தார் பிரதிநிதி.
சொன்னான் திருவரங்கன், கேட்டதும் பிரதிநிதி மூர்ச்சை அடைந்தார்.
தொடரும்