பாகம் 11 – விசாரணை
கோஷ்டி அமைதி அடைந்ததும் நிகழ்வை தொடர்ந்தார் பெரிய நம்பி.
புதிய அரங்கம் எழும்பி கொண்டிருக்கையில், அதை திறந்து வைக்கும் பொருட்டு, முகூர்த்த நாள் மற்றும் நாழிகையை குறித்து கொடுத்திருந்தார் ஆளவந்தார்.
இதனை கேட்டறிந்த மாறனேரி நம்பி, தன் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது, அரங்க நிர்மான சேவை செய்வதற்கு ஆர்வமாய் உடனடியாக புதிய அரங்கத்தை அடைந்தார்.
பெரிய மண்டபம் பார்க்க நன்றாக காற்றோட்டத்துடன் ஆச்சரியமாக இருந்தது. பெரிய பள்ளியின் மாணவராக இருப்பதற்காக கௌரவத்துடன் உள்ளே சென்ற அவர், தன்னால் இயன்ற பணிகளை செய்து கொடுத்தார்.
தனது சீடர்கள் மூலம் இதை கேள்விப்பட்ட ஆளவந்தார் மிக்க மகிழ்ச்சி அடைந்து, நம்பியின் பாதங்களால் அரங்கம் புனிதம் பெற்றதாக கூறி, இதை விட வேறு என்ன பேறு இருக்க முடியும் என்று அரங்க திறப்பு விழா முடிவுற்றது என அறிவித்தார்.
எவ்வளவு சீடர்கள் இருந்தாலும் தன் இதயத்தில் நீங்காத தனி இடம் ஒருவருக்கு உண்டு என்றால், அவர் மாறனேரியாக தான் இருக்க முடியும் என்று ஆளவந்தாரே தன் திருவாய் மலர்ந்து பல முறை அருளியுள்ளார்.
ஆகவே மாணாக்கள் நீங்கள் அனைவரும் எப்பேர்ப்பட்ட இடத்தில் இருக்கிறீர்கள் என்றுணர்ந்து செயல் பட வேண்டும் என்பதற்காகவே இதை தெரிய படுத்த விரும்பினேன் என்று தன் தோழனை பற்றி பெருமிதமாக கூறி முடித்தார் பெரிய நம்பி.
சிறிது நேரம் மாணாக்கள் அவரவருக்கு தோன்றிய விணாக்களை கேட்டு பெரிய நம்பியிடம் விடைகளை பெற்று கொண்டிருந்தனர். அவர்களது கேள்விகள் கேட்டு, பிற்காலத்தில் வைணவத்தை போற்றி பாதுகாக்க போகும் மகான்கள் உருவாகி கொண்டிருக்கின்றனர் என்று மன திருப்தி அடைந்தார்.
குளக்கரையில் ஸ்நானம் முடித்து மெல்ல சூரிய நமஸ்காரம் செய்த மாறனேரி நம்பி, யாரோ ஓடி வரும் அரவம் கேட்டு திடுக்கிட்டு மேலே ஏறி வந்தார். தூரத்தில் அர்ச்சகர் மகன் வேங்கடம் ஓடி வருவது புலனாயிற்று.
அதிகாலை பொழுதில் மூச்சு வாங்க ஓடி வந்த வேங்கடவனை ஆசுவாசப்படுத்தி காரண காரியத்தை கேட்டார். அதற்கு பாலகன் தங்களை தேடி சோழ அதிகாரிகள் வந்திருப்பதாகவும் தாங்கள் கோவிலில் இல்லாததால், எங்கள் அகத்திற்கு வந்து தந்தையாரை விசாரித்து கொண்டிருப்பதாகவும் சொன்னான்.
அவர்கள் ஏதோ ஓலை விடயமாக பேசியதாகவும், அதற்கு தந்தையார் தமக்கு ஏதும் தெரியாது என்று கூறியும் அவர்கள் விடவில்லை எனவும் தெரிவித்தான்.
மேலும் தாங்கள் வரும்வரை தந்தையாரை எங்கும் செல்ல அனுமதிக்க முடியாது என கூறியதாகவும், விஷ்வருபத்திற்கு நாழிகை நெருங்கிவிட்டது ஆகையால் சென்றே ஆக வேண்டும் என சொல்லியும் விட மறுத்துவிட்டனர் என்று தெரிவித்தான்.
உச்சபச்சமாக அதிகாரிகள், உங்கள் பெருமாள் காக்கும் கடவுள் தானே, கொஞ்ச நாழிகை காக்கட்டும் ஒன்றும் குறைந்து போக மாட்டார் என்று எல்லி நகையாடினர் என்று கதறினான்.
அவர் காத்தால் தான் இந்த பிரபஞ்சமே என்று அறியாத அதிகாரிகள் வெறும் மூடர்கள். ஆனால் அவர்கள் மட்டும் தானா மூடர்கள்? ஏன் நாமில்லை?
அன்றிலிருந்து இன்றுவரை நம்மை காத்து ரட்சிக்கும் மாறனேரி பெருமாளின் தற்பொழுதைய கோவில் முகப்பு (இடம்: சிவகாசி)
தொடரும்