பாகம் 10 – கோஷ்டி
காண்டா மணியின் ஓசை, அந்த அதிகாலை பொழுதின் அமைதியை கிழித்து வேத பாடசாலையின் மாணாக்களை உறக்கத்திலிருந்து விழித்தெழ செய்தது. மாணாக்கள் அவரவர் கோஷ்டியுடன் இணைந்து துரிதமாக வடகாவிரி நோக்கி சென்றனர்.
பாடசாலையின் தலைவர் முதன்மையாக நின்று வழிநடத்தி கொண்டிருந்தார். மாணாக்களின் நேர்த்தியான அணிவகுப்பு மற்றும் திருவாயிலிருந்து உதிர்ந்த அஷ்டாச்சரம், திவ்ய பிரபந்தம் சித்திரை வீதியை வைகுண்டபுரியாக தோன்ற செய்தது.
வடகாவிரியில் நீராடி சந்தியாவந்தனத்தை முடித்த மாணாக்கள் ஆதவனை நமஸ்கரித்து எழுந்தனர். ஆளவந்தார் திருவரசை அடைந்த கோஷ்டி, தனியன் ஜபித்து மரியாதை செலுத்தினர்.
பாடசாலையில் விருப்ப தேர்வாக வேதமும், கட்டாய பாடமாக தமிழ் பிரபந்தமும் போதிக்கப்பட்டது. வேதங்களில் நான் சாமம் என்று ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்று எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்று அந்த கோஷ்டியின் அத்யயனம் பறை சாற்றிற்று.
ஆதவன் மேல் நோக்கி முன்னேற, கோஷ்டி புதியதாக நிறுவப்பட்ட வேத அரங்கத்தை நோக்கி முன்னேறியது. பாடசாலையின் தலைவர் மாணாக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தற்பொழுதைய இடத்தின் நெருக்கடியை ஆளவந்தாரிடம் எடுத்துரைக்க புதிய அரங்கம் எழும்பியது.
பாடசாலையின் தலைவர், ஆளவந்தார் குறித்த நன்னாளில் அவர் இல்லாமல் பிரவேசிப்பதை எண்ணி மனம் வருந்தினார்.
வழியில் மாணாக்கள் புதிய அரங்கத்தை பற்றி அளவளாவி கொண்டிருந்தனர். இது தான் அவர்கள் அங்கே செல்வது முதன் முறை. ஆனால் செவி வழி செய்தி அவர்களின் கற்பனைக்கு உரம் ஊட்டியது.
புதிய அரங்கத்தை அடைந்ததும் கோஷ்டி நின்றது. அவர்களின் பொறுமையும் ஒழுக்கமும் வியக்கத்தக்கதாக இருந்தது. சிறிது நாழிகையில் அவர்கள் யாரை எதிர்நோக்கி நின்றனரோ, அவர் தூரத்தில் கோசாலை அருகே வந்து கொண்டிருந்தது தெரிந்தது.
தலைவர் பெரிய நம்பியின் வருகையை அறிவிக்க, கோஷ்டியின் கட்டுப்பாடு இன்னும் அதிகரித்தது. வந்ததும் அனைவரும் பெரிய நம்பியை கண்டு வணங்கினர்.
அனைவருக்கும் ஆசி கூறிவிட்டு, பெரிய நம்பி அரங்கம் உருவான விதத்தை எடுத்து உரைத்து பாடசாலை தலைவரை வாழ்த்தினார். ஆளவந்தாரின் நேரடி பார்வையின் கீழ் எழும்பியதையும் நினைவு கூர்ந்தார்.
மனம் அரங்கத்தை பற்றி விவரிக்கையில், அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. நிகழ்வுக்கு காரணமான இருவரும் இங்கு இல்லை என்று நினைக்கையில் விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.
அவரின் கண்ணீருக்கான காரணத்தை புரிந்து கொண்ட பாடசாலை தலைவர் பெருமூச்சு விட்டார். ஆனால் கோஷ்டிக்கு தெரியாததால் அமைதியாய் பார்த்தது.
பெரிய நம்பியே கோஷ்டியிடம் அந்த நிகழ்வை கூற எத்தனித்து ஆரம்பித்தார். இருவரில் ஒருவர் நிரந்தரமாக இங்கு இல்லை, அவர் இருக்குமிடம் வைகுண்டம். இன்னொருவர் தற்காலிகமாக இங்கு இல்லை, அவர் இருக்குமிடம் புராந்தகம்.
பெரிய நம்பி சொன்னது தான் தாமதம், கோஷ்டி விண்ணதிர கோஷமிட்ட ஒரு சொல் மாறனேரி.
தொடரும்