21) ஸ்ரீனிவாசருக்கும் பத்மாவதிக்கும் கல்யாணம் நடந்த இடமே இன்று திருமலை அடிவாரத்தில் இருக்கும் ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஷ்வரர் ஆலயம்.
22) ஆகாசராஜனுக்கு பின் ராஜ்ய பரிபாலனம் செய்ய, பத்மாவதியின் தம்பி வசுதானனுக்கும் சிற்றப்பன் தொண்டைமானுக்கும் இடையே போர் நிகழ்ந்த பொழுது வேங்கடவன் தன் சங்கம் மற்றும் சக்கரத்தை தொண்டைமானுக்கு வழங்கியதாக சரித்திரம்.
23) பகவான் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி லக்ஷ்மி தேவியே ஆயிரம் இதழ் தாமரை மலர் மேல் ஜோதியாய் உருவெடுத்து திருச்சானுரில் அலர் மேல் மங்கையாய் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
தாமரை என்றால் பத்மம் எனும் பொருள் கொண்டு லக்ஷ்மி தேவியை, பத்மாவதி என்றும் அலர் மேல் மங்கை என்றும் திருச்சானுரில் அழைக்கிறோமே தவிர, இவள் நீலா தேவியின் அம்சம் கொண்ட ஆகாசராஜனின் புதல்வியான ஸ்ரீனிவாசன் மணந்த பத்மாவதி அல்ல.
ஆகாசராஜனின் புதல்வியான பத்மாவதிக்கு கோவில் ஏதும் இருந்ததாக சான்று கிடைக்கபெறவில்லை.
24) அக்காலத்தில் ஒரு சிறு சந்நிதி மட்டுமே அலர் மேல் மங்கைக்கு விஷ்வ கர்மா உருவாக்கி இருந்தார், பதினைந்தாம் நூற்றாண்டில் தான் இது ஒரு கோவிலாக உருவானது.
25) அலர் மேல் மங்கை கோவிலுக்கு என்று தனி அறக்கட்டளைகளோ மானியங்களோ கிடையாது, எல்லா செலவுகளும் யாத்திரீகர்கள் அளிக்கும் காணிக்கையினாலேயே சமாளிக்கப்படுகிறது.
26) பத்தாம் நூற்றாண்டு, பல்லவ குலம் நலிந்து இறுதி மூச்சை சுவாசித்து கொண்டிருந்த காலம். பல்லவ பேரரசி சாமவையின் கனவு, குலகுரு விஷ்ணு ஷர்மா தலைமையில் நிறைவேறி கொண்டிருந்தது.
திருமலை முதன் முறையாக பிரம்மோற்சவம் கண்டு ஆனந்த கூத்தாடியது, இதை தொடங்கிய பெருமை இவ்விருவரையுமே சேரும்.
27) குன்று மணி தங்கம் இல்லா மூலவர் திருமேனிக்கு அன்று தான் தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டன, திருமலை வைகுண்டமாக மாற ஆரம்பித்த நன்னாள் அது, அந்த திவ்ய திருக்கோலத்தை காண எத்தனை கோடி கண்கள் இருந்தாலும் போதாது.
28) பிரம்மோற்சவத்தில் மூலவரை ஊர்வலமாக கொண்டு போக முடியாது என்பதால் தூய வெள்ளியில் மணவாள பெருமாள் என்கிற போக ஸ்ரீனிவாசர் வார்த்து எடுக்கப்பட்டிருந்தார்.
சாமவை தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று அறிய விலைமதிப்பற்ற சொத்தாக வெள்ளியால் மணவாள பெருமாளை உருவாக்கியிருந்தாள்.
மணவாள பெருமாள் என்கிற போக ஸ்ரீனிவாசர், திருமலை
29) ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முலவர் வேங்கடவனுக்கு முதன் முறையாக ஒரு துணை கிட்டியிருந்தது மணவாள பெருமாள் ரூபத்தில் உற்சவறாக.
திருமலையில் உள்ள நான்கு உற்சவ மூர்த்திகளில் முதன்மையானவர் இவரே.
30) குலசேகர ஆழ்வார் வேங்கடவனிடம் “உன் திருவடியில் கிடக்கும் முதல் படியாகும் பாக்கியத்தை தர வேண்டும்” என பிரார்தித்து பெற்ற குலசேகரப்படியில் ஆழ்வார் உய்வதாக நம் சம்பிரதாயம்.
ஆகையால் பக்தர்கள் பெருமாள் சந்நிதி வாயிலின் முதல் படியை மிதிக்காமல்/ ஏறி நிற்காமல் தாண்டி செல்ல வேண்டும். இதனை அறியாமலே பல பேர் கடைப்பிடித்து வருவது சந்தோஷமே.