11) லக்ஷ்மியின் நினைவாக பெருமாள் ஓர் புற்றின் அடியில் இருந்த மண்டபத்தில் சோகமே உருவாக அமர்ந்து கொண்டார். நாட்கள் சென்றன, ஸ்ரீமன் நாராயணன் பசியால் வாடினார்.
இதனை கேள்வியுற்று லக்ஷ்மி வருந்த, நாரதர் லக்ஷ்மியை அணுகி திருமாலின் பசியைப் போக்க உபாயம் கூறினார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து அப்பகுதியில் உள்ள இடையனிடம் சென்று பசுவை விற்றாள்.
பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. இதனை கண்ட இடையன் பசுவை கோடரியால் தாக்க முயல தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது.
விவரம் அறிந்த வகுளாதேவி திருமாலின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள்.
12) த்ரேதா யுகத்தில் வேதவதி எனும் பெண் ராமனை மணந்து கொள்ள ஆசைப்பட்டு கடுமையாக தவம் புரிய, அவள் முன் தோன்றிய பெருமாள் கலி யுகத்தில் உன்னை மணப்பேன் என்று வாக்கு கொடுத்தார். இவள் நீலாதேவியின் அம்சமே.
13) வேதவதி எனும் நீலாதேவியே தற்சமயம் பத்மாவதியாய் அவளும் நோக்க அண்ணலும் நோக்க திருமணம் நிச்சயிக்கப்பட்டது. லக்ஷ்மியற்ற ஸ்ரீனிவாசனுக்கு கல்யாண செலவுக்கு பணம் தேவைப்பட்டு அவர் குபேரனை அணுகினார்.
14) குபேரன் பெருமாளூக்கு ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காமம் பொன் நாணயங்கள் கொடுத்து ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டான். வட்டி மட்டுமே ஒரு லட்சம் ராமநிஷ்காமம் வருடத்திற்கு என்று குபேரன் நிர்ணயித்தான்.
கலி முடியும் வரை வட்டி கட்டுகிறேன், பிறகு வைகுண்டம் போனபின் அசலை தருவதாக கையெழுத்து ஒப்பம் இட்டார். இதற்கு சாட்சி பிரம்மா, சிவன் மற்றும் அசுவத்தாமன்.
நம் காணிக்கையை கொண்டு வட்டி செலுத்தி வருகிறார் வேங்கடவன்.
15) ஸ்ரீதேவியின் அம்சமான லக்ஷ்மி இல்லாமல் நீலாதேவியின் அம்சமான பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் திருமணம் வகுளாதேவி மற்றும் பத்மாவதியின் தந்தை ஆகாசராஜன் தலைமையில் இனிதே நடந்து முடிந்தது.
16) இடையன் கோடரியால் தாக்கிய தன் கணவரின் தலை பகுதியில் முடி இல்லாமல் தழும்பாக இருப்பதை கண்டு அவர் அழகுக்கு ஓர் மாசு என கருதி பத்மாவதி அவளுடைய தலை மயிர்க்கால்களை பிய்த்து ஒட்டியதாக சரித்திரம்.
இதன் பொருட்டே பக்தர்கள் இன்றும் திருமலையில் முடிக்காணிக்கை செலுத்துகிறார்கள். முடிக்காணிக்கையால் நான் எனும் அகந்தை அழிந்து வேங்கடவனை சரணடைகிறேன் என்றும் பொருள் கொள்ளவேண்டும்.
17) பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் திருமணம் நடந்த விஷயம் லக்ஷ்மிக்கு தெரியவர, அவள் திருமலை வந்தடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடலானாள்.
பத்மாவதிக்கும் லக்ஷ்மிக்கும் பெரிய வாக்கு யுத்தமே அரங்கேறியது, இறுதியாக பரந்தாமனிடமே முடிவை கேட்போம் என்று இருவரும் அவர் பக்கமாக திரும்பினார்கள். அங்கே அவர் இல்லை.
ஏழு அடி பின்னால் போய் அவர் நின்றிருந்தார். அவர் மேனி கல்லாக உறைந்து போயிருந்தது. பரந்தாமன் நாம் திருமலையில் காணுகின்ற திருஉருவை அடைந்துவிட்டார்.
18) இருவருக்கும் உண்மை புரிந்து அழுகையில் சிலாருபமாகிவிட்ட பரந்தாமனின் குரல் கேட்டது, கலி முடியும் வரை இங்கிருந்து குபேரனுக்கு வட்டி கட்டி என்னை சரண் புகும் பக்தர்களை கடாக்ஷித்து பின் வைகுண்டம் போக முடியும்.
அதுவரை பத்மாவதி என் இடது மார்பிலும் லக்ஷ்மி வலது மார்பிலுமாகத் தங்கியிருங்கள் என்று உரைக்க அதன்படியே இருவரும் ஏறி அமர்ந்தார்கள்.
19) திருமலையில் ஆடி அசைந்தாடிய சிறு நந்தா விளக்கு, வெறும் கைப்பிடி அரிசி நைவேத்யம், ஒற்றை கருவறை கோவில், சாண் அகலத் துணி, குன்றுமணி தங்கம் இல்லை, நெற்றியில் திருமண் பளபளக்கவில்லை… உள்ளே இருந்தார் வேங்கடநாதர்.
20) பக்கத்தில் வராக சுவாமி கோவில் தவிர வேறு கட்டங்களோ, மடங்களோ, வீடுகளோ இருக்கவில்லை. சுற்றி காடும் வனமுமாகத்தான் இருந்தது, காட்டு மிருகங்கள் பயமின்றி திரிந்தன.
ஒருவராவது தன்னை தரிசிக்க வரமாட்டார்களா என்று ஏங்கி போயிருந்தான் வேங்கடவன்.
இன்று கோடிக்கணக்கானோர் குவியும் திருமலை ஆதியில் இப்படித்தான் இருந்தது.
சரி! யாரின் செயலால் இந்த மாற்றம்? அலர் மேல் மங்கை சந்நிதி எப்படி தோன்றியது, அது லக்ஷ்மிக்கு சொந்தமா இல்லை பத்மாவதிக்கு சொந்தமா?